நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களில் 39 வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 359 பேர் உயிரிழந்துள்ளனர். புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புத்துறையினரும் முன்னெடுத்து வரும் விசாரணைகளில் முன்னேற்றம் காணப்படுகின்றது. இரண்டு பிரதான இஸ்லாமிய குழுக்கள் இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளன. எனினும் பாதுகாப்பு கருதி அவற்றை பகிரங்கப்படுத்த முடியாதுள்ளது என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன ஒன்பது தற்கொலை குண்டுதாரிகளில் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாகவும் குறிப்பிட்டார். சர்வதேச ஊடகங்களுடன் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த இஸ்லாமிய தற்கொலை குண்டுதாரியே ஏனைய இடங்களிலும் தாக்குதல்களை மேற்கொண்ட குழுக்களின் தலைவராவார். அத்தோடு இவர் லண்டனில் இளமானிப் பட்டத்தையும், அவுஸ்திரேலியாவில் முதுமானிப் பட்டத்தினையும் பெற்றவர் என்பதோடு வசதி படைத்தவராவார். இவர் தொடர்பான ஏனைய தகவல்களை பாதுகாப்பு கருதி வெளியிட முடியாதுள்ளது. இது தொடர்பான துரித விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறித்த தாக்குதல்தாரிகளுடன் வேறு ஏதேனும் குழுக்கள் அல்லது அமைப்புக்கள் தொடர்புபட்டுள்ளனவா என்பது குறித்தும் , சர்வதேச தொடர்புகள் ஏதேனும் காணப்படுகின்றனவா என்பது குறித்தும் ஆராயப்பட்டு வருகின்றன. அத்தோடு இந்த தாக்குதல்களுக்கு வெளிநாட்டு நிதி வழங்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுகின்றது. இது தொடர்பான விசாரணகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தாக்குதல்கள் தொடர்பிலான சர்வதேச குழுக்களின் தலையீடுகள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதும் இதுவரையில் வெளிநாட்டுப் பிரஜைகள் எவரும் கைது செய்யப்படவில்லை.
நியுசிலாந்து பள்ளிவாசல் தாக்குதலொன்றில் கொல்லப்பட்ட முஸ்லிம்களுக்காக பழிவாங்குவதற்காகவே இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கையின் புலனாய்வுப்பிரிவினர் வழங்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த விடயம் உண்மையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியா, பிரித்தானியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உளவுத்துறை இது தொடர்பான விசாரணைகளுக்கு இலங்கைக்கு உதவுவதாக உறுதியளித்துள்ளன. இந்தியாவும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இவ்வாறு தாக்குதல்களை நடத்துவதற்கு இலங்கையிலிருந்து யாரேனும் சிரியாவுக்குச் சென்று பயிற்சி பெற்றுள்ளார்களா? என்பது தொடர்பிலும், தாக்குதல்தாரிகள் இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டுள்ளார்களா? என்பது தொடர்பிலும், இதில் மாலைத்தீவு பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் தொடர்புபட்டுள்ளதா? என்பது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் இரு தினங்களில் முழுமையான தகவல்களை வழங்க எதிர்பார்க்கின்றோம் என்றார். இதேவேளை இச் சந்திப்பில் கலந்து கொண்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கருத்து வெளியிடுகையில், இது வரையில் 9 தற்கொலை குண்டுதாரிகளின் சடலங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று பெண்ணொருவரது சடலம் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவங்களுடன் தொடர்புடைய காணொலிகள் உள்ளன. பாதுகாப்பு கருதி அவற்றை வெளியிட முடியாதுள்ளது என்றார்.
vidivelli