ஏ.எஸ்.எம்.ஜாவித்
கடந்த ஞாயிற்றுக் கிழமை தலை நகர் கொழும்பு, நீர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஒரே நாளில் மூன்று கத்தோலிக்க ஆலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக சுமார் 320 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் பயங்கரமானதும், மிகவும் வெறுக்கத்தக்கதுமான செயற்பாடுகள் முழு முஸ்லிம் சமுகத்தினையும் தலைகுனிய வைத்துள்ளதுடன் முஸ்லிம்களின் இருப்புக்களுக்கும் பாதுகாப்புக்களுக்கும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.
இஸ்லாம் ஒற்றுமை, சகோதரத்துவம், மற்றைய சமயங்களை மதித்தல், அவற்றை கண்ணியப்படுத்தல் உள்ளிட்ட நல்ல பண்புகளை போதிப்பதுடன் வன்முறைகள், கொலைகள், சதித்திட்டங்கள், பயங்கரவாத செயற்பாடுகள் உள்ளிட்ட மனிதனுக்கு கேடு விளைவிக்கும் தீய செயற்பாடுகள், நடவடிக்கைகளை முற்றாகவே வெறுக்கின்றது.
மேற்படி தீய செயற்பாடுகளுக்கு இஸ்லாத்தில் கடுகளவேனும் இடமில்லை. அல்குர்ஆனும், அல்-ஹதீஸும் இதனைத்தான் போதிக்கின்றன. எந்த ஒரு கட்டத்திலும் வன்முறையில் இறங்க வேண்டாம் என இஸ்லாம் கூறுகின்றது. இவ்வாறான போதனைகளுக்கு மத்தியில் மதத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும் ஒரு இஸ்லாமியன் மற்றையவரை தாக்குவாராயின் அவருக்கு இஸ்லாத்தில் இடமில்லை. அவர் இஸ்லாமியனும் இல்லை.
ஒரு சிலரின் கேவலமான சதிநாசகார செயற்பாடுகளால் இன்று இலங்கை வாழ் முஸ்லிம்களை அச்சத்திற்கு மட்டுமல்லாது முற்று முழுதாகவே தலைகுனிய வேண்டிய நிலைமைகளுக்கு உள்ளாக்கி யுள்ளது.
இஸ்லாம் எந்தவொரு கட்டத்திலும் வன்முறை மூலம் இஸ்லாத்தைப் பரப்பவோ அல்லது அதனை வளர்த்தெடுக்கவோ போதிக்க வில்லை. இவ்வாறான நிலையில் மதத்தின் பெயராலும், சமயத்தின் பெயராலும் இஸ்லாத்தை வளர்ப்பதை அல்லாஹ் ஏற்றுக் கொள்ளமாட்டான். அவ்வாறு குறுகிய மனநிலை உடையவர்கள் செயற்படுவார்களானால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதனையே இஸ்லாம் எடுத்தியம்புகின்றது.
இந்த நவீன யுகத்தில் பல நாடுகளில் இஸ்லாத்திற்கு எதிரான செயற்பாடுகளே இடம் பெறுகின்றன. எந்த விதத்திலாவது இஸ்லாத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று பல நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் செயற்பட்டு வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு அங்கங்களும் இன்று இஸ்லாமிய நாடுகளில் அந்நிய நாடுகளின் மறைமுகமானதும், நேரடியானதுமான சங்கமங்களுடன் இடம் பெற்று வருகின்றன.
பல முஸ்லிம் நாடுகள் பயங்கரவாதம் என்ற போர்வையில் இன்று முற்றாகவே அழிக்கப்பட்டு வல்லரசுகளின் பிடிக்குள் சிக்குண்டு அவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்குள் இயங்குவதுடன் இஸ்லாமிய வரையறைகளை மீறியும் சில விடயங்கள் இடம் பெற்று வருகின்றன.
இவ்வாறானதொரு அடுத்த கட்ட நகர்வே தற்போது இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என முஸ்லிம்கள் கவலைப்படுகின்றனர். இஸ்லாமிய எதிர்ப்புவாத சக்திகள் பல நாடுகளில் பலவாறு காணப்படுகின்றன. அவை பணத்தினால் தமது காரியங்களை கச்சிதமாக முடித்துக் கொள்ள அதற்கான முகவர்களை விலை கொடுத்து வாங்கி அவர்களை பாதுகாத்து தமது கைங்கரியங்களுக்கும், கபடத்தனங்களுக்கும் ஈடுபடுத்தி வருகின்றன எனலாம்.
கடந்த 21ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை இலங்கையில் தேவாலயங்களிலும், ஏனைய முக்கிய இடங்களிலும் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத்தாக்குதலும் ஏதோ ஒரு சர்வதேச பின்னணியின் அடிப்படையில் நன்கு திட்டமிட்டு ஒரு வலையமைப்பின் அடிப்படையில் இடம் பெற்றுள்ளது என்பதே அனேகமானவர்களின் கருத்தாக உள்ளது. சாதாரண ஒருவராலோ அல்லது ஒரு உள்நாட்டுக் குழுவாலோ இவ்வாறான நன்கு திட்டமிட்ட தாக்குதல் மேற்கொள்ளப்படுவதென்பது கேள்விக்குறியான விடயமே.
தாக்குதல் மேற்கொண்டவர்கள் எந்த இனமாகவோ அல்லது சமயமாகவோ இருந்தாலும் பரவாயில்லை. அவர்கள் செய்த படுபாதகச் செயற்பாடுகளின் கடுமையான மன்னிக்க முடியாத குற்றவாளிகளே. இவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யார்? இவர்கள் எதற்காக இதனை மேற்கொண்டனர்? இவர்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன? உள்ளிட்ட சகல விடயங்களும் கண்டறியப்பட்டு மக்களுக்கு தெளிவு படுத்தப்பட வேண்டும். சில இஸ்ரேல் நாடுகள் இலங்கை விடயத்தில் காட்டும் அக்கறை முஸ்லிம் சமூகத்திற்கு ஆபத்தானதொரு விடயமாகவே காணப்படுகின்றது.
ஏற்கெனவே இந்த நாடுகள் பல நாடுகளில் முஸ்லிம்கள் விடயத்தில் அதிதீவிரப் போக்குகளைக் காட்டி இஸ்லாத்திற்கு எதிராகவே செயற்பட்டு வருகின்றன. பல இலட்சக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களின் பலிகளுக்கு இந்த நாடுகள் உடந்தையாகவும், காரணமாகவும் இருந்து வருகின்றன என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டும் நடவடிக்கைகள் வெளிநாடுகளால் திரை மறைவில் இடம் பெறுகின்றது என்பது மட்டும் உண்மை. இந்தியாவில் ஒருசில அமைப்புக்கள் இஸ்லாத்திற்கு எதிராக தமது செயற்பாடுகளை தொடராகவே மேற்கொண்டு வருகின்றன. அவர்களின் கையாட்கள் இந்த விடயத்தில் ஏன் உள்வாங்கப்பட்டிருக்க மாட்டார்கள் என முஸ்லிம் சமூகம் அரசிடம் கேட்கின்றது.
பயங்கரவாதச் செயற்பாடுகள் யார் செய்தாலும் குற்றம் குற்றமே. அப்பாவி மக்கள் மீது அநியாயமான முறையில் மேற்கொள்ளப்படும் எந்தத் தாக்குதல்களையோ அல்லது வன்முறைகளையோ ஏற்றுக் கொள்ள முடியாது. ஆனால் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் விடயத்தில் அதீத கவனஞ் செலுத்த வேண்டியுள்ளது.
இன்று இலங்கைச் சம்பவத்தின் பின்னணி இலங்கை வாழ் முஸ்லிம்கள் மீது போடப்பட்டுள்ளது. ஒருசிலர் முஸ்லிம் சமூகத்திற்கு இழுக்கை ஏற்படுத்த மேற்கொண்ட நாகரிமற்ற செயற்பாடு முஸ்லிம் சமூகத்தின் நன்மதிப்புக்கும், இன ஒற்றுமைக்கும் பங்கத்தை ஏற்படுத்தி இஸ்லாத்திற்கு பாரிய இழுக்கை ஏற்படுத்தி விட்டது என்பது முஸ்லிம் சமூகத்தினால் ஜீரணிக்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது.
ஒருசில துரோகிகள் மேற்கொண்ட மேற்படி செயற்பாட்டிற்காக ஒட்டுமொத்த முஸ்லிம் சமுகத்தினையும் இந்த விடயத்தில் குற்றம் சாட்டுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும். ஒருசில இனவாத அரசியல்வாதிகளின் கருத்துக்களை முன்வைத்து சமூக ஊடகங்கள் உள்ளிட்ட ஒருசில ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் முஸ்லிம் சமூகத்தினை கவலை கொள்ளச் செய்துள்ளது.
நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக அரசாங்கமும், பாதுகாப்புத் துறையினரும் நடவடிக்கைகளையும், விசாரணைகளையும் மேற்கொண்டு வரும் நிலையில் அவர்கள் தெரிவிக்காத கருத்துக்களை வெளியிடுவது என்பது தேவையற்ற பிரச்சினைகளுக்கும், வன்முறைகளுக்கும் வழிவகுக்கலாம் என்பதனை உணர்ந்து முந்திக் கொண்டு செய்திகளை வெளியிடாது இருப்பது நாட்டின் அமைதிக்கும், ஒற்றுமைக்கும் ஏற்ற விடயமாகும்.
சமயத் தலைவர்கள் சகல மக்களையும் சட்டத்தை மதித்து அமைதி காத்து அரசாங்கத்திற்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். நடைபெற்ற சம்பவங்கள் அரசியல், சமய பின்னணிகளைக் கொண்டதாக இருக்கலாம். அல்லது சர்வதேச நாடுகளின் சதித்திட்டங்களாக இருக்கலாம் இவ்வாறு பல கோணங்களில் மேற்படி சம்பவங்கள் தொடர்பாக பேசப்படுகின்றன.
குறிப்பாக இவ்வாறான செயற்பாடுகளால் கத்தோலிக்க முஸ்லிம், பௌத்த – முஸ்லிம், தமிழ் – முஸ்லிம் பிரிவினைகளை ஏற்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகளாக இருக்கலாம். அல்லது நாட்டின் அரசாங்கத்தை குழப்பவும் அரசியல் ரீதியாக மேற்கொண்ட விடயங்களாகவும் இருக்கலாம். குறிப்பாக தற்போது இலங்கையில் அரசியல் ரீதியான போட்டிகளும், சண்டைகளும் இடம் பெறுவதால் அவற்றின் ஒரு அங்கமாகவும் இந்த விடயங்கள் ஒரு சமூகத்தினை அடிப்படையாக வைத்து மேற் கொள்ளப்பட்டிருக்கலாம்.
எது எவ்வாறாக இருந்தாலும் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் பாரதூரமானவை என்பதுடன் மானிட வர்க்கத்தினால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். பல அப்பாவி உயிர்களை பலியெடுத்த கயவர்களை கைது செய்து உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்.
எனவே பல்லின சமூகம் வாழும் இந்த நாட்டில் இவ்வாறான தீய குற்றவாளிகளை இனங்கண்டு கொள்வதற்கு அனைவரும் முன்வந்து அரசாங்கத்திற்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் உதவுவதே தற்போதைய தேவையாகும்.
vidivelli
its true