ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரியது
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து நடாத்தப்பட்ட தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். உரிமை கோரியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெ ளியிட்டுள்ளன.
சுமார் 321 பேரை பலிகொண்ட இந்த கொடூரமான தாக்குதலை தமது இயக்கமே மேற்கொண்டதாக ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பின் பிரசார பிரிவான ஆமாக் செய்தி முகவரகம் தெரிவித்துள்ளது.
” இலங்கையில் நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட தாக்குதலானது கூட்டணி நாடுகளின் பிரஜைகளையும் இலங்கையிலுள்ள கிறிஸ்தவர்களையும் இலக்கு வைத்ததாகும். இத் தாக்குதலை நடாத்தியவர்கள் ஐ.எஸ். அமைப்பின் போராளிகளாவர்” என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நியூஸிலாந்தில் கடந்த மாதம் இடம்பெற்ற கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு பழிதீர்க்கும் வகையிலேயே இலங்கையில் இத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக நேற்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
vidivelli