இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
மட்டக்களப்பு ஜம்இய்யத்துல் உலமா சபை தலைவர்
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை, சமாதானத்தையும் ஐக்கியத்தையுமே வலியுறுத்துகின்றது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படல் வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி தெரிவித்தார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் சிறுவர்கள், பெண்கள் என பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் எமக்கு மிகவும் மன வேதனையைத்தந்துள்ளது. இதனை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது. மத வழிபாட்டுத்தலங்களில் இவ்வாறான ஈவிரக்கமற்ற தாக்குதல்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்த சம்பவங்களில் உயிரிழந்த சகோதரர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் காயமடைந்த சகோதரர்கள் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றோம்.
இந்த சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும். அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படல் வேண்டும்.
இஸ்லாம் தீவிரவாதத்தினையோ அல்லது பயங்கரவாததினையோ ஊக்குவிக்கவில்லை. அதற்கு ஒரு போதும் ஆதரவும் கிடையாது. முஸ்லிம்கள் ஐக்கியத்தையும் சமாதானத்தையுமே விரும்புகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து சகோதரர்களுக்கும் எமது கவலையை தெரிவித்துக் கொள்வதுடன் பொறுமையாகவும் நிதானமாகவும் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் எனவும் மேலும் தெரிவித்தார்.
vidivelli