கிறிஸ்த்து உயிர்த்த ஞாயிறு தினத்தை அனுஷ்டித்துக் கொண்டிருந்த கிறிஸ்தவ மக்களையும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களையும் இலக்காகக் கொண்டு நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற கொடூர தாக்குதல்கள் தொடர்பாக எமது ஆழ்ந்த கவலையை தெரிவித்துக் கொள்வதோடு, குறித்த மிலேச்சத்தனமான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் என ஸலாமா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதென் தலைவர் அஷ்ஷெய்க் ஏ.எம்.எம். ஆஸாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இத்தாக்குதல்களில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களையும் இவ் ஈனச் செயல்களுக்குப் பின்னால் இருப்பவர்கள் அனைவரையும் கைது செய்து நீதிக்கு முன் நிறுத்தி அதிகபட்ச தண்டனைகளை வழங்க வேண்டும்.
இந்த துரதிஷ்டமான நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், உடல் உள காயங்களுக்கும் தாக்கங்களுக்கும் உட்பட்ட அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் விரைவான சுகத்திற்கும் பிரார்த்தனை செய்கின்றோம். அதேபோல் இந்த திட்டமிடப்பட்ட கொடூரத் தாக்குதல்களின் பின்னால் இருக்கும் சக்திகளை சரியாக இனம்கண்டு அவர்கள் தொடர்பான உண்மைச் செய்திகளை மக்களறியச் செய்ய வேண்டும்.
நமது இலங்கையை மீண்டும் பின்னோக்கித் தள்ளுகின்ற இவ்வாறான ஈனச் செயல்கள் இதன் பிறகு நடக்காமல் பார்த்துக் கொள்வது அரசின் பொறுப்பாகும். அத்துடன் பொதுமக்களும் விழிப்புடன் இருக்க வேண்டிய தேவையுள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் இருந்து இந்நாட்டை மீட்டெடுப்பதற்காக இலங்கை வாழ் அனைவரும் ஒன்றுபட்டு பரஸ்பர புரிந்துணர்வுடன் செயற்படுவது அவசியமென ஸலாமா அங்கத்தவர்களையும் நாட்டின் பொதுமக்களையும் வேண்டிக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
vidivelli