எம்.ஆர்.எம்.வஸீம்
தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறும், வைத்திய சாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதால் தேவையான இடங்களுக்கு இரத்தத்தை தானமாக வழங்க முன்வருமாறும் ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன், நாட்டில் அமைதியும் சமாதானமும் ஏற்பட குனூத் அந்நாஸிலா ஓதுவோம் என்றும் உலமா சபை வேண்டியுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் முப்தி எம்.ஐ.எம் ரிஸ்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நாட்டில் இடம் பெற்ற மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது
நாட்டில் பல இடங்களிலும் அப்பாவி மக்கள் மீது நடாத்தப்பட்ட மனிதாபிமானமற்ற தாக்குதல்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. கிறிஸ்தவ சகோதரர்களின் முக்கிய தினங்களில் ஒன்றான இன்று அவர்களது மதஸ்தலங்களை இலக்கு வைத்து தாக்கப்பட்டிருப்பதானது எந்தவிதத்திலும் ஏற்க முடியாத ஒன்றாகும்.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதுடன் இந்த தாக்குதல்கள் தொடர்பான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், புரிந்துணர்வையும் பாதுகாக்க முன்வர வேண்டுமென அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கின்றது.
இத்தருணத்தில் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வருமாறும், குறிப்பாக வைத்திய சாலைகளில் இரத்தப் பற்றாக்குறை நிலவுவதால் தேவையான இடங்களுக்கு இரத்தத்தை தானமாக வழங்க முன்வருமாறும் அனைவரையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.
அனைத்து மத, சிவில் தலைவர்களும் ஒன்றிணைந்து தத்தம் பிரதேச மக்களை சரியாக வழிநடாத்துவதினூடாக சமூகங்களுக்கிடையிலான இன வாதப் பிரச்சினைகளில் இருந்து எமது நாட்டு மக்களை பாதுகாக்க முன்வருமாறும், சமூக ஊடகங்களில் வலம் வருகின்ற வதந்திகளை பரப்புவதிலிருந்து சகலரும் தவிர்ந்து நடக்குமாறும் அன்பாக வேண்டிக் கொள்கின்றது.
அதே நேரம் அரசாங்கமும் பாதுகாப்புத்துறையும் நாட்டில் உள்ள அனைத்து மதஸ்தலங்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்குமாறும் வேண்டிக் கொள்கின்றது.
அத்துடன், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பத்வாக் குழு செயலாளர் அஷ்-ஷைக் எம்.எல்.எம். இல்யாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எமது நாட்டில் நடைபெற்ற மிருகத்தனமான தாக்குதலை அடுத்து, ஏற்பட்டுள்ள அசாதாரண நிலை நீங்கி, சுமூக நிலை ஏற்பட்டு, சமாதனமும் சாந்தியும் இன ஜக்கியமும் ஏற்பட முஸ்லிம்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் கையேந்துமாறும், தமது பாவங்கள் மன்னிக்கப்பட தௌபா, இஸ்திக்பார் போன்றவற்றில் ஈடுபடுமாறும், அத்துடன், தொழுகைகளில் குனூத் அந்நாஸிலா ஒதுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.
மேலும், இத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுமாறும், காயமடைந்தவர்கள் மிக விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யுமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கிறது.
அத்தோடு, மஸ்ஜித்களில் இமாம்கள் குனூத் அந்நாஸிலாவை ஓதும்பொழுது தேவையான துஆக்களை மாத்திரம் ஓதி சுருக்கமாக அமைத்துக்கொள்ளுமாறும் ஆலோசனை கூறுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாசபை மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து நேற்று மேல்மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.
அங்கு, அப்பாவி மக்களை கொலை செய்யும் இவ்வாறான மிளேச்சத்தனமான தாக்குதல்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேக் ரிஸ்வி முப்தி தெரிவித்தார்.
அத்துடன் அப்பாவி மக்கள் மீது இவ்வாறான மிளேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்ளவோ தற்கொலை தாக்குதல்கள் மற்றும் தீவிரவாத செயல்களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதித்ததில்லை. அது பெரும் பாவமான செயலாகவே கருதுகின்றது. சகல மனிதர்களுக்கும் கருணை காட்டுமாறும் நீதியுடன் செயற்படுமாறே போதிக்கின்றது. இலங்கை முஸ்லிம்களாகிய நாம் சகலவகையிலுமான வன்செயல்களையும் தீவிரவாதத்தையும் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை வரலாற்றில் முஸ்லிம்கள் இதுபோன்ற தீவிரவாத செயல்களில் ஒருபோதும் ஈடுபட்டதில்லை. அத்துடன் இலங்கை முஸ்லிம்கள் எப்போதும் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த அரச அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட்டு வந்திருக்கின்றார்கள் என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.
vidivelli