எம்.ஆர்.எம்.வஸீம்
சமூகத்தில் உட்புகுத்தப்பட்டிருக்கும் தீவிரவாதத்தை களைவதற்கு அவசரமான நடவடிக்கைகள் தேவை என முஸ்லிம் அரசியல் தலைமைகள் வலியுறுத்தியுள்ளன.
தபால் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று முஸ்லிம் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
இதன்போது, குற்றப்புலனாய்வு துறையினரை விமர்சிப்பதைவிட்டு இதன் பின்னர் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தீவிரமாக செயற்பட்டவேண்டும். அத்துடன் தீவிரவாத செயற்பாடுகளை சமூகத்தில் இருந்து முற்றாக கலைந்தெரிவதற்கு மிகத்தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன், அப்துல் ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பெளசி, முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரிக்கார் உட்பட பாதுகாப்பு பிரிவு உறுப்பினர்கள் ஜம்இய்யதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.
அமைச்சர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பாதிக்கப்பட்டவர்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்வதுடன் எமது கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம். அத்துடன் இதுதொடர்பாக கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகையுடன் முஸ்லிம் அமைச்சர்கள் ஜம்இய்யதுல் உலமா சபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடி எமது சமூகத்தின் அதிர்ச்சி நிலையை தெரித்தோம்.
அத்துடன் இவ்வாறான சம்பவங்கள் இதன் பிறகு இடம்பெறாமல் தடுக்க இணைந்து செயற்படுவதன் தேவை குறித்தும் கலந்துரையாடினோம். மேலும் தீவிரவாத செயற்பாடுகளை சமூகத்தில் இருந்து முற்றாக கலைந்தெரிவதற்கு மிகத்தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். இதுதொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடவே இன்றையதினம் (நேற்று)இந்த கூட்டத்தை நடத்த தீர்மானித்தோம்.
மேலும் மனித படுகொலைகளை இஸ்லாம் மார்க்கம் ஒருபோதும் அனுமதித்ததில்லை. அவ்வாறான நிலையில் இவ்வாறான செயல்களை தங்களது ஈடேற்றமாக யாராவது கருதி செயற்படுவார்களாக இருந்தால் அதனைவிட பெரும் மடமைத்தனம் இருக்க முடியாது. அதனால் இந்த சம்பவங்களை வன்மையாக கண்டிப்பதுடன் இதனை தடுப்பதற்கு ஒன்றுபட்டு செயற்படவேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாட தீர்மானித்திருக்கினறோம்.
மேலும் மாவனெல்லை சம்பவத்துக்கு முஸ்லிம் அரசியல் வாதிகளும் சிவில் அமைப்புக்களும் பாதுகாப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையும் வழங்கியிருந்தோம். அதில் யாருக்கும் குற்றம் சுமத்த முடியாது.
மேலும் இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு நாட்டில் ஆங்காங்கே தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறுமாக இருந்தால் அதுதொடர்பில் அரசியல் தலைமைகளுக்கும் சிவில் அமைப்புகளுக்கும் அறிவிக்க முடியும். அத்துடன் அனைத்து மதஸ்தலங்களுக்கும் பாதுகாப்பு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது என்றார்.
vidivelli