அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதுவராக இளவரசி ரீமா பிந்த் பந்தர் பின் சுல்தான் கடந்த செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். இதன் மூலம் இராஜதந்திர வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றை அவர் தோற்றுவித்துள்ளார்.
ரியாதில் அமைந்துள்ள அல்-யெமாமாஹ் அரண்மனையில் மன்னர் சல்மான் முன்னிலையில் இளவரசி ரீமா சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இதன்மூலம் சவூதி அரேபியாவின் முதலாவது பெண் தூதுவராக இவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.
நான் எனது மார்க்கத்திற்கும், மன்னருக்கும் எனது நாட்டுக்கும் விசுவாசத்துடன் இருப்பேன் என்றும், எனது நாட்டின் இரகசியங்களை வெளியிடமாட்டேன் என்றும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அரசாங்கத்தின் நலன்களையும் சட்டங்களையும் பேணிக் காப்பேன் என்றும் உண்மையாகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்புடனும் எனது கடமைகளை நிறைவேற்றுவேன் எனவும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் சத்தியம் செய்கின்றேன்” எனக் கூறி தனது பதவியினை ஏற்றுக்கொண்டார்.
இளவரசி ரீமாவின் தந்தையான இளவரசர் பந்தர் பின் சுல்தான் அமெரிக்காவுக்கான சவூதி அரேபியத் தூதுவராகப் பதவி வகித்தபோது ரீமாவும் தனது இளைமைக் காலத்தில் நீண்டகாலம் அமெரிக்காவில் வாழ்ந்துள்ளார். ஜோர்ஜ் வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் நூதனசாலை கற்கைகள் துறையில் தனது பட்டப் படிப்பினையும் பூர்த்தி செய்துள்ளார்.
குறிப்பிடத்தக்க தொழில் முயற்சியாளரும் பரோபகாரியுமான இளவரசி ரீமா இராஜதந்திர நியமனம் கிடைக்கப் பெறுவதற்கு முன்னதாக 2016 ஆம் ஆண்டு தொடக்கம் பொது விளையாட்டு அதிகார சபையில் பெண்கள் விவகாரப் பிரிவின் பிரதித் தலைவியாக பதவி வகித்திருந்தார்.
இந்த சத்தியப்பிரமாண நிகழ்வில் ஒஸ்ரியாவுக்கான சவூதி அரேபிய தூதுவராக இளவரசர் அப்துல்லாஹ் பின் காலித் பின் சுல்தான், கெமரூனுக்கான சவூதி அரேபிய தூதுவராக அப்துல்லாஹ் மொஹமட் அல் ஷுஐபி மற்றும் சைபிரஸுக்கான சவூதி அரேபிய தூதுவராக காலித் பின் மொஹமட் அல்-ஷாரிப் ஆகியோரும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிகழ்வில் பங்குபற்றிய இளவரசர் காலித் பின் பந்தர், மன்னர் சல்மானுக்கும் பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் தன்னை ஐக்கிய இராச்சியத்திற்கான சவூதி அரேபிய தூதுவராக நியமித்தமைக்காக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
vidivelli