ஏ.ஆர்.ஏ. பரீல்
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதிலுள்ள சிக்கல்களைத் தீர்ப்பதற்காக எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்குமாறு எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் தலைவரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்து ஜனாதிபதி அந்த அறிக்கையை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்ததன் பின்பு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குள்ள அனைத்துத் தடைகளும் நீக்கப்பட்டுவிடுமென தேர்தல்கள் ஆணையாளர் பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதன் மூலம் நாட்டின் ஜனநாயகம் பாதுகாக்கப்படுமெனவும் மக்களின் அடிப்படை உரிமையும் பாதுகாக்கப்படுமெனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எல்லை நிர்ணய மீளாய்வுக்குழுவின் உறுப்பினர் கலாநிதி ஏ.எஸ்.எம். நௌபல் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கை இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை. குழு இதுவரை இரண்டு அமர்வுகளையே நடத்தியுள்ளது. முதலாவது அமர்வில் எல்லை நிர்ணய மீளாய்வில் என்னென்ன விடயங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென ஆராய்ந்தது. இரண்டாவது அமர்வில் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.
எல்லை நிர்ணய அறிக்கை 100 வீதம் பாராளுமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதாகும். எல்லை நிர்ணய அறிக்கையின் 133 ஆவது பக்கத்தில் அவ் அறிக்கையில் குறைகள் இருக்கின்றன என எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் தலைவர் கே.தவலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக பல்வேறு அமைப்புகள் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளன.
ஹரிஸ்பத்துவ தொகுதியில் அக்குறணை முஸ்லிம் பிரதேசத்துடன் சிங்கள பாரம்பரிய கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து 43 பன்சலைகள் இணைந்து முறைப்பாடுகளை முன்வைத்துள்ளன. இந்நிலையில் சிறுபான்மை சமூகத்திற்கும் பாதகமாக அமைந்துள்ள எல்லை நிர்ணய அறிக்கை முறையாக மீளாய்வு செய்யப்படாது வர்த்தமானியில் வெளியிடுவதென்பது பாதகமாகவே அமையும்.கே. தவலிங்கம் தலைமையிலான மாகாணசபைகள் தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டபோது அது முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டது. விடயத்துக்குப் பொறுப்பாகவிருந்த அமைச்சர் பைசர் முஸ்தபாவும் அதற்கு எதிராகவே வாக்களித்தார்.
இந்நிலையிலேயே மாகாணசபைகள் தேர்தல் சட்டத்துக்கமைய எல்லை நிர்ணய மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டு இரு மாத பதவிக்காலம் வழங்கப்பட்டது.
பிரதமர் இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.எனினும் மீளாய்வுக் குழு நியமிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்துவிட்ட பின்பும் எல்லை நிர்ணய மீளாய்வுக் குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் இதுவரை கையளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-vidivelli