மாவனெல்லை சிலையுடைப்பு விவகாரம்: கைதான 13 இளைஞர்களை பிணையில் விடுவிக்க உதவுக
பெற்றோர்கள் ஹலீம், முஜிபுர் ரஹ்மான், அசாத்சாலியிடம் கோரிக்கை
கண்டி மற்றும் மாவனெல்லையை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 சந்தேக நபர்களினதும் பெற்றோர்கள் நேற்று அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆகியோரைச் சந்தித்து சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு உதவி புரியுமாறு வேண்டிக் கொண்டார்கள்.
மாவனெல்லை, கண்டி பகுதிகளில் புத்தர் சிலை உடைப்பு பிரதான சந்தேக நபர்களான சகோதரர்கள் இருவர் தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவர்களுடன் நட்பு பேணியிருந்தமைக்காக குறிப்பிட்ட 13 சந்தேக நபர்களையும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தயாரித்து தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என்று அவர்களது பெற்றோர் தாம் சந்தித்த அரசியல்வாதிகளிடமும், சட்டத்தரணியிடமும் தெரிவித்தார்கள். இந்தச் சந்திப்புக்கான ஏற்பாடுகளை முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால் ஏற்பாடு செய்திருந்தார்.
சந்தேக நபர்கள் 13 பேரும் கேகாலை சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு இவர்கள் புத்தர் சிலைகளை உடைத்ததாகக் கூறி துன்புறுத்தப்படுவதாகவும் தெரிவித்த பெற்றோர் அவர்களை வேறு சிறைச்சாலைக்கு இடம்மாற்றித் தரும்படியும் வேண்டுகோள் விடுத்தார்கள்.
அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் உடனடியாக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரளவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்தேக நபர்களை கேகாலை சிறைச்சாலையிலிருந்து கண்டி சிறைச்சாலைக்கு இடமாற்றும்படி வேண்டினார். அமைச்சர் தலதா அத்துகோரள இடமாற்றத்துக்கு அமைச்சர் கபீர் ஹாசிம் எதிர்ப்புத்தெரிவிக்காது விடின் ஏற்பாடு செய்வதாகக் கூறவே அமைச்சர் ஹலீம் அமைச்சர் கபீர் ஹாசிமின் விருப்பத்தையும் தொலைபேசியூடாகப் பெற்றுக்கொண்டார்.
சந்தேக நபர்கள் விரைவில் கண்டி சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
13 சந்தேக நபர்களில் மூவரே திருமணமானவர்கள் எனவும் ஏனைய 10 பேரும் திறமையாக சித்தியெய்தி உயர் கல்வி கற்கும் மாணவர்கள் எனவும் சுட்டிக்காட்டினார்கள்.
இவர்களது பிணை கோரிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஏற்பாடுகளைச் செய்வதாக அமைச்சர் ஹலீம் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி ஆகியோர் உறுதியளித்தார்கள்.
குறிப்பிட்ட சந்தேக நபர்கள் 13 பேருக்கும் எதிராக பொலிஸாரினால் பயங்கரவாத சட்டத்தின் கீழேயே குற்றம் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதனால் நீதிவான் நீதிமன்றத்துக்கு பிணை வழங்கும் அதிகாரம் இல்லை, மேல் நீதிமன்றத்தின் மூலமே பிணை வழங்க முடியும். மேல் நீதிமன்றம் பிணை வழங்குவதென்றால் அதற்கான விசேட காரணம் எதுவுமிருக்க வேண்டும்.
பொலிஸார் இவர்களுக்கெதிரான குற்றங்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழிருந்து சாதாரண சட்டத்திற்கு மாற்றினால் மாத்திரமே நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்கக்கூடியதாக இருக்கும். இவ்வாறான நிலையிலேயே 13 சந்தேக நபர்களினதும் பெற்றோர் அரசியல் வாதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கிறார்கள்.
புத்தர் சிலைகள் உடைப்பு சம்பவங்கள் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
-Vidivelli