மாவனெல்லை சம்பவத்துடன் தொடர்புபடுத்தி வனாத்தவில்லுவில் கைதான இருவர் விடுதலை
ஏனைய இருவரும் தொடர்ந்தும் தடுப்புக்காவலில்
மாவனெல்லை புத்தர் சிலையுடைப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு சி.ஐ.டி. யினரால் வனாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நால்வரில் இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டனர்.
புத்தளத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களான மொஹமட் நபீஸ் மொஹமட் நப்ரிக் (21) மற்றும் மொஹமட் நபீஸ் மொஹமட் நவீத் (19) ஆகிய இருவருமே
நேற்று முன்தினம் சி.ஐ.டி.யினரால் மாவனெல்லை நீதிவான் நீதிமன்றில் வழக்கு இல. B/11330/18 ன் கீழ் ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றப்புலனாய்வு பிரிவின் (CID) பிரதம பொலிஸ் பரிசோதகர் மாரசிங்க குறிப்பிட்ட சந்தேக நபர்கள் இருவரும் இவ்வழக்கிற்கு தேவைப்படமாட்டார்கள் என நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து நீதிவான் இருவரையும் விடுதலை செய்தார்.
இவர்கள் இருவரும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் 9 (1) ன் கீழ் 2019.01.11 ஆம் திகதி முதல் மூன்று மாத காலம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்தனர். இரு சந்தேக நபர்களையும் குற்றங்களிலிருந்தும் விடுதலை செய்த நீதிவான் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு சமூகமளித்து கையொப்பமிட வேண்டுமெனவும் தங்களது வசிப்பிடத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். ஊடகங்களில் இவர்கள் வெடி பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தாலும் சந்தேக நபர்கள் இருவரும் குற்றமற்றவர்கள்– அப்பாவிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.
வனாத்தவில்லுவில் கைது செய்யப்பட்டவர்களில் ஏனைய இரு இளைஞர்களும் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மாவனெல்லை மற்றும் கம்பளையில் புத்தர் சிலை உடைப்பு தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
மாவனெல்லை சிலை உடைப்பு சம்பவங்களுடன் தொடர்புபட்ட குழுவினர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வனாத்தவில்லுவில் 4 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். குறிப்பிட்ட இரு இளைஞர்களினது விடுதலைக்காக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் ஐ.என்.எம். மிப்லால், சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் மற்றும் சட்டத்தரணி சஜாத் மொஹமட் உட்பட சில அரசியல்வாதிகளும் முயற்சிகள் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli