27 நகரங்களிலிருந்து பல குடும்பங்களை நஷ்டயீடு வழங்காது இரவோடு இரவாக வெளியேற்றினார் கோத்தாபய ராஜபக் ஷ
கடுமையாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் அமைச்சர் கபீர்
வீதி அபிவிருத்தியின் போது யாருடைய காணியையும் பலாத்காரமாக பெற்றுக் கொள்ளவில்லை. ஆனால் கோத்தாபய ராஜபக் ஷ நகர அபிவிருத்திக்காக 27 நகரங்களைச் சேர்ந்த பல குடும்பங்களை ஒரு சதமேனும் நஷ்டயீடு வழங்காமல் இரவோடு இரவாக வெளியேற்றினார் என நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.
அத்துடன் மத்திய நெடுஞ்சாலையை எதிர்வரும் ஆகஸ்ட் இறுதிக்குள் திறந்து வைப்போம் எனவும் குறிப்பிட்டார்.
நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
நாட்டின் பிரதான நகரங்களில் இடம்பெற்று வரும் வாகன நெரிசல் காரணமாக தொழிலுக்கு வருவதும் மாலையில் வீடு செல்வதும் பாரிய சவாலாக மாறியுள்ளது. அதேபோல் கிராமங்களில் இருக்கும் வீதிகள் மோசமான நிலையில் இருப்பதால் மாணவர்கள் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியிலேயே பாடசாலைக்குச் செல்கின்றனர். அதனால் இந்த குறைபாடுகளை, சவால்களை குறைப்பதே எமது நோக்காக இருக்கின்றது.
மேலும் கொழும்பு நகரில் ஏற்படுகின்ற வாகன நெரிசல் காரணமாக நாளொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது. நாளொன்றுக்கு 3 இலட்சம் வாகனங்கள் கொழும்புக்குள் வருவதுடன் அதில் 2 இலட்சம் வாகனங்கள் தனி நபருக்கு சொந்தமானதாகும். அதேபோன்று 10 இலட்சம் மக்கள் வருகின்றனர். இவ்வாறு நாட்டில் இருக்கும் பிரதான நகரங்களில் இந்த பிரச்சினை இருந்து வருகின்றது. அதனால் இம்முறை வரவு செலவு திட்டத்தில் எமது அமைச்சுக்கு 20 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனூடாக நாட்டின் பிரதான நகரங்களை அடிப்படையாகக் கொண்டு வீதி அபிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவிருக்கின்றோம்.
அத்துடன் மத்திய அதிவேகப்பாதையின் பணிகள் பூர்த்தியாகும் கட்டத்தில் இருக்கின்றது. எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் மக்கள் பாவனைக்கு திறந்து விட எதிர்பார்க்கின்றோம். அதன் பின்னர் ஓரளவு வாகன நெரிசல் குறைவடையலாம். தேசிய வீதி வலையமைப்பில் தற்போது நிலவுகின்ற போக்குவரத்து நெருக்கடிகளை குறைப்பதன் மூலம் மக்கள் வீதிகளில் செலவிடும் நேரத்தை குறைத்து அதனூடாக எரிபொருள் செலவினதும் பொருளாதார வீண்விரயத்தை குறைப்பதுமே எமது நோக்கமாகும்.
மேலும் பிரதான நகர வீதி அபிவிருத்தியைப் போன்று கிராமங்களில் இருக்கும் வீதிகளையும் அபிவிருத்தி செய்ய பிரத்தியேகமாக நிதி ஒதுக்கீடு செய்திருக்கின்றோம். ஒவ்வொரு தேர்தல் தொகுதிக்கும் 180 மில்லியன் ரூபாவை வீதி அபிவிருத்திக்கு வழங்க நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். அதேபோன்று தோட்டப்புற வீதிகள், மதஸ்தலங்களுக்கான வீதிகள் மற்றும் வடக்கு கிழக்கில் சேதமாகி இருக்கும் வீதிகளையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுத்திருக்கின்றோம்.
அத்துடன் நாங்கள் வீதி அபிவிருத்திக்கு மக்களின் காணிகளை அவர்களின் அனுமதியுடனேயே பெற்றுக் கொள்கின்றோம். அதற்கான நஷ்டயீட்டு தொகையையும் உடனடியாக வழங்குகின்றோம். ஆனால் கடந்த காலத்தில் வீதி அபிவிருத்திக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட மக்களின் காணிகளுக்கான நஷ்டயீட்டை எமது அரசாங்கமே வழங்கியிருந்தது. 5 ஆயிரத்து 500 கோடி ரூபா நஷ்டஈடாக இதுவரை வழங்கப்பட்டிருக்கின்றது. அதில் கடந்த அரசாங்க காலத்தில் வழங்கவிருந்த தொகை 3 ஆயிரத்து 500 கோடியாகும்.
அதேபோன்று நகர அபிருத்திக்கு பொறுப்பாக இருந்த கோத்தாபய ராஜபக் ஷ நகரங்களை அபிவிருத்தி செய்யும் போது பலாத்காரமாகவே மக்களின் காணிகளை பெற்றுக் கொண்டார். 27 நகரங்களில் ஒரு சதமேனும் வழங்காமல் அந்த மக்களை இரவோடு இரவாக அவர்களின் சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றியே நகர அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அவ்வாறான எந்த நடவடிக்கையையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை. மக்களின் விருப்பத் துக்கமையவே காணிகளை பெற்றுக்கொண்டு வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம் என்றார்.
-Vidivelli