கருமலையூற்று பள்ளிவாசலை ரமழானுக்கு முன்னர் விடுவிக்குக
கிழக்கு ஆளுநரிடம் பள்ளிவாசல் நிர்வாகம் கோரிக்கை
தரைப்படை கவசவாகன 4 ஆம் படைப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கருமலையூற்று பள்ளிவாசலுக்குச் சொந்தமான 139 பேர்ச் காணியை எதிர்வரும் ரமழான் மாதத்துக்கு முன்பு விடுவித்து தருமாறு கருமலையூற்று பள்ளிவாசல் நிர்வாகம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கோரிக்கை விடுத்துள்ளது. பள்ளிவாசல் 4 ஆம் படைப் பிரிவினரால் 2014 ஆம் ஆண்டு உடைக்கப்பட்டு விட்டதால் இப்பகுதி மக்கள் தற்போது தற்காலிக கூடாரம் அமைத்து ஜும்ஆ தொழுகையில் மாத்திரம் ஈடுபட்டு வருவதாகவும் மழைகாலத்தில் தொழுகையில் ஈடுபட முடியாத நிலை உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பள்ளிவாசல் நிர்வாகம் எதிர்வரும் நோன்புக்கு முன்பு பள்ளிவாசலுக்குரிய முழுக்காணியையும் பெற்றுத்தராவிட்டால் அதற்கான போராட்டங்களில் ஈடுபட வேண்டி நேரிடும் எனவும் தெரிவித்துள்ளது.
கருமலையூற்று பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவர் எம். ஐ. ஜவாஹிர் இது தொடர்பில் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில்;
‘கருமலையூற்று பள்ளிவாசல் 400 வருட காலம் பழைமை வாய்ந்ததாகும். பள்ளிவாசலுக்குச் சொந்தமான காணி 139 ஏக்கரையும் பள்ளிவாசலையும் தரைப்படை கவச வாகன 4 ஆம் படைப்பிரிவு ஆக்கிரமித்துக்கொண்டுள்ளது. பழைமை வாய்ந்த பள்ளிவாசலை படைப்பிரிவினர் 2014 ஆம் ஆண்டு உடைத்து தரைமட்டமாக்கிவிட்டார்கள்.
படைப்பிரிவு பள்ளிவாசலை நிர்மாணித்துக் கொள்வதற்கு 20 பேர்ச்சஸ் காணியை வழங்குவதாக பேச்சுவார்த்தைகளின் பின்பு உறுதியளித்தாலும் அதற்கான சட்டபூர்வ உறுதி வழங்கப்படவில்லை. பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு பிரதேச செயலகம் அனுமதி தர மறுக்கிறது.
இதனால் பள்ளிவாசலை நிர்மாணிக்க முடியாமலிருக்கிறது. நாங்கள் பள்ளிவாசலுக்குச் சொந்தமான 139 பேர்ச்சஸ் காணியை எம்மிடம் மீள கையளிக்க வேண்டுமெனவே கோருகிறோம். பள்ளிவாசலில் தற்போது வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆ தொழுகை மாத்திரமே கூடாரம் அமைத்து பாயில் நடைபெறுகிறது. சுமார் 500 பேர் ஜும்ஆவில் கலந்து கொள்கிறார்கள். மழைகாலங்களில் ஜும்ஆ தொழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அக்காலங்களில் சுனாமி பள்ளிவாசலை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எதிர்வரும் நோன்பு மாதத்துக்கு முன்பு பள்ளிவாசல் காணி முழுமையாக எம்மிடம் ஒப்படைக்கப்பட வேண்டுமென கிழக்கு மாகாண ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இல்லையேல் நாம் போராட்டங்களை ஆரம்பிப்போம்.
எமது கோரிக்கைகளை பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.எஸ். தௌபீக், இம்ரான் மஹ்ரூப் ஆகியோரிடமும் முன்வைத்துள்ளோம்.
கருமலையூற்று பள்ளிவாசல் காணி 139 பேர்ச்சுடன் அப்பகுதியில் இருந்த அவ்லியா சியாரம் உட்பட 16 பேர்ச்சஸ் காணியும் அபகரிக்கப்பட்டுள்ளது. அங்கிருந்த அவ்லியா சியாரம் அங்கிருந்து சிதைக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
பள்ளிவாசலுக்குச் செல்லும் பிரதான பாதை படைப்பிரிவினரால் தடை செய்யப்பட்டு மறைக்கப்பட்டுள்ளது. ஜும்ஆ தொழுகைக்காக கடற்கரையூடாக மேட்டு நிலத்தில் ஏறியே செல்ல வேண்டியுள்ளது. மக்களின் இந்த அசௌகரியங்களுக்கு அரசியல்வாதிகள் தீர்வு பெற்றுத் தர வேண்டும்.
அத்தோடு இப்பகுதியில் மக்களின் சுமார் 50 ஏக்கர் நிலம் விமானப் படையினால் சுவீகரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டு வரும் நிலையில் இப்பகுதியில் மக்களது காணிகள் விடுவிக்கப்படாதிருக்கிறது. இது தொடர்பிலும் அரசியல்வாதிகள் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
இது தொடர்பில் உப்புவெளி பிரதேச சபை உறுப்பினர் பைரூஸ் கரீம் (ஐ.தே.க.) கருத்து தெரிவிக்கையில்;
கருமலையூற்றில் தற்காலிக கூடாரமொன்றிலே இப்பகுதி மக்கள் ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுகிறார்கள். அங்கு செல்லும் பிரதான வழியைப் பயன்படுத்த படைப்பிரிவு தடை விதித்துள்ளது. கடற்கரையூடான மாற்று வழியில் கம்புகள் நடப்பட்டு மேட்டு நிலத்தில் ஏறியே அங்கு செல்ல வேண்டியுள்ளது. எமது சமூகத்தின் அரசியல் தலைவர்கள் கருமலையூற்று பள்ளிவாசலுக்குச் சொந்தமான 139 பேர்ச்சஸ் காணியையும் மீட்டெடுக்க செயலில் இறங்கவேண்டும் என்றார்.
கல்வி அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்;
‘கருமலையூற்று பள்ளிவாசலையும் பள்ளிவாசல் காணியையும் படையினர் வசமிருந்து மீட்டெடுப்பதற்காக நான் 2013 முதல் கிழக்கு மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்தகாலம் முதல் முயற்சித்து வருகிறேன். குரல் கொடுத்து வருகிறேன். இப்பள்ளிவாசல் 2014 இல் படையினரால் உடைக்கப்பட்டது. 2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அப்போது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக் ஷ அப்பள்ளிவாசலில் தொழுவதற்கு அனுமதி பெற்றுத் தந்தார். இப்பள்ளிவாசலை சுமார் 1000 குடும்பங்கள் பயன்படுத்தின.
பள்ளிவாசலுக்கு சொந்தமான 139 பேர்ச்சஸ் காணியை படையினரிடமிருந்து மீட்டெடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன் என்றார்.
-Vidivelli