இன அடிப்படையில் பாடசாலைகள் பிரிக்கப்பட்டிருப்பது பெரும் குறையே
குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியீட்டில் ஜனாதிபதி
அரசியல்வாதிகளின் பிழையான நடவடிக்கையாலே மொழியின் அடிப்படையில் நாங்கள் பிளவுபட்டிருக்கின்றோம். அதேபோன்று இன அடிப்படையில் பாடசாலைகளை பிரித்திருப்பதும் இன நல்லிணக்கத்துக்கு பெரும் குறையாகவே நான் பார்க்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவினால் அல் குர்ஆன் சிங்கள மொழி பெயர்ப்பு வெளியீட்டு நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் மொழிபெயர்ப்பின் முதல் பிரதியை பெற்றுக்கொண்ட பின்னர் அங்கு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
அல்குர்ஆன் சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் இந்த தினம் வரலாற்று முக்கியத்துவமிக்க தினமாகவே நான் காண்கின்றேன். அனைத்து மதங்களின் போதனைகளையும் அனைவரும் தெரிந்து வைத்துக்கொண்டிருந்தால் பல இனத்தவர்கள் வாழும் எமது நாட்டில் இனக்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படுவதில்லை. அதனால்தான் அல் குர்ஆனை சிங்கள மொழியில் மொழிபெயர்த்து வெளியிடும் இந்த தினத்தை வரலாற்று முக்கியமான தினமாக நான் கருதுகின்றேன்.
மேலும் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டத்தில் சிங்களம் தமிழ் முஸ்லிம் வீரர்கள் ஒன்றிணைந்து போராடியதால்தான் அன்று வெள்ளையர்கள் எமக்கு சுதந்திரத்தை தந்து வெளியேறினார்கள். என்றாலும் எமது அரசியல்வாதிகளின் பிழையான நடவடிக்கையால் நாங்கள் மொழி ரீதியாக பிளவுபட்டு ஒருவருக்கொருவர் வைராக்கியத்துடன் செயற்பட்டு சந்தேக கண்கொண்டு பார்க்க ஆரம்பித்தோம். மொழியினாலே இந்த நிலை ஏற்பட்டது.
மேலும் வரலாற்றில் சிங்கள,தமிழ் முஸ்லிம்களின் இணைபிரியாத செயற்பாடுகளினால் மகிழ்ச்சியடைக்கூடிய காரணங்கள் இருப்பதுபோல் மகிழ்ச்சியடைய முடியாத காரணங்களும் இருக்கின்றன. இதில் பிரதானமாக நான் குற்றம்சாட்டுவது மொழி அடிப்படையில் மக்களை பிளவுபடுத்திய அரசியல்வாதிகளையாகும். இந்தியாவில் பல மொழிகளை பேசக்கூடியவர்கள் இருக்கின்றனர். பல இனத்தவர்கள் இருக்கின்றனர். ஆனால் அவர்களிடம் தமது இனம் என்ன என்று கேட்டால் யாராக இருந்தாலும் இந்தியன் என்றே கூறுவார்கள். எங்கள் நாட்டில்தான், நான் சிங்களம், தமிழ், முஸ்லிம் இனம் என்ற பிளவு இருக்கின்றது. இது எமது நாட்டின் முன்னேற்றத்துக்கு பாரிய தடையாக இருக்கின்றது.
அதேபோன்று வரலாற்றில் எமது அரசியல்வாதிகள் செய்திருக்கும் பாரிய தவறுதான் தமிழ் சிங்கள, முஸ்லிம் மகாவித்தியாலயங்கள் என்று பாடசாலைகளை பிரித்ததாகும். இது எமது இன நல்லிணக்கத்துக்கு பெரும் குறையாகவே நான் பார்க்கின்றேன். பொலன்னறுவையில் நான் ஒருபாடசாலைக்கு சென்றேன் அங்கு தமிழ்,சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அனைவரும் இருக்கின்றனர். இந்த முன்மாதிரியை இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன் முன்னெடுத்திருந்தால் நாட்டில் பிளவு, சந்தேகம் முற்றாக இல்லாமல்போயிருக்கும். அல் குர்ஆன் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருப்பது இன நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாகும். சிங்கள மொழியில் இருப்பதால் மாணவர்கள் படிக்க வாய்ப்பாக இருக்கின்றது. அதன் மூலம் இதன் சிந்தனை என்ன என்பதை உணர்ந்துகொள்ளலாம்.
அதனால் சகல இன மதங்களின் மூல வேதங்கள் மொழி பெயர்க்கப்படுவதன் ஊடாக அந்த மதங்களின் சிந்தனைகளை அனைவரும் விளங்கிக்கொள்ளலாம். அதன் மூலம் மனிதர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினையை இல்லாமலாக்கிக்கொள்ளலாம். அத்துடன் சிங்கள, முஸ்லிம் தமிழ் இனத்தவர்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படுவதும் அந்த மதங்களைச்சேர்ந்தவர்களிடம் தான் சார்ந்த மதத்தின் கொள்கையை பின்பற்றி நடக்க தவறியமையாகும். அதேபோன்று சில மதத்தலைவர்களும் தான் சார்ந்த மக்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் செயற்படுகின்றார்களே அன்றி ஏனைய இனத்தவர்களின் நிலையை ஏற்றுக்கொள்ள தயார் இல்லை.
எனவே இவ்வாறான காலகட்டத்தில் அல்குர்ஆன் சிங்கள மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பது இனங்களுக்கிடையில் ஒற்றுமையை, நல்லிணக்கத்தை எற்படுத்த மேற்கொண்ட சிறந்த முயற்சியாகும். இதனை மேற்கொள்ள முன்னின்று செயற்பட்டவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் நான் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன் என்றார்
-Vidivelli