மாகாணசபைத் தேர்தல் விரைவில் நடாத்தப்படும் என்று கூறியே அரசாங்கம் காலத்தை நகர்த்தி வருகிறது. ‘மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்கள் உரிய காலத்தில் மேற்கொள்ளப்படாவிட்டால் இவ்வருட இறுதிக்குள் தேர்தலை நடாத்த முடியாத நிலை ஏற்படும்’ என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய சபாநாயகர் கருஜயசூரியவிற்கு கடிதம் மூலம் அறிவித்திருக்கிறார்.
அத்தோடு ‘மாகாணசபைத் தேர்தலை எந்தச் சட்டத்தின் கீழ், புதிய முறைமையின் கீழா அல்லது பழைய முறைமையின் கீழா நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றின் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கோரியுள்ளார். தேர்தலை எந்த முறைமையின் கீழ் நடாத்துவது என சட்டப்பிரச்சினை உருவாகியிருப்பதாலே இதனைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்காக உயர்நீதிமன்றின் அறிவுறுத்தல்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஒன்பது மாகாணசபைகளில் 6 மாகாணசபைகளின் பதவிக்காலம் எப்போதோ காலாவதியாகிவிட்டது. அம்மாகாணங்கள் தற்போது ஆளுநர்களின் அதிகாரத்தின் கீழ் இயங்கிவருகின்றன. ஏனைய மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் இன்னும் சில மாதங்களில் காலாவதியாகவுள்ளன.
மாகாணசபை தேர்தல் சட்டத்தில் கடந்த ஏப்ரல் 5 ஆம் திகதிக்கு முன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் தேர்தலை நடாத்த முடியும்’ என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2017 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க மாகாணசபை தேர்தல் சட்டத்தின் கீழ் புதிய கலப்பு முறைமையில் தேர்தலை நடாத்துவதென்றால் மாகாண சபை தேர்தல் தொகுதி எல்லை நிர்ணய மீளாய்வு அறிக்கை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட வேண்டும். ஆனால் மீளாய்வு அறிக்கை இதுவரை சமர்ப்பிக்கப் படவில்லை. இன்றேல் பழைய முறைமையின் கீழ் 1988 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாணசபைகள் தேர்தல் சட்டத்தின் கீழ் தேர்தலை நடத்துவதென்றால் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
ஆனால் இதில் எந்த ஏற்பாடுகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வரவு – செலவுத்திட்ட வாக்கெடுப்புடன் பாராளுமன்றம் ஒருமாத காலம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மே மாதம் முதல் வாரத்திலே பாராளுமன்றம் கூடவுள்ளது. அதன் பின்பு மாகாணசபைத் தேர்தல் திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டாலும் இவ்வருடத்தில் மாகாணசபைத் தேர்தல் நடத்துவது சாத்தியப்படாது.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சிகளான ஸ்ரீல.சு கட்சி மற்றும் ஐ.தே.கட்சி என்பன மாகாண சபைத்தேர்தல் பிற்போடப்படுவதை எதிர்ப்பதாகத் தெரிவித்தாலும் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவருவதற்கான எந்த நடவடிக்கையையும் அவை முன்னெடுக்கவில்லை. இதிலிருந்து மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்ள இக்கட்சிகள் தயாராக இல்லை என்பது தெளிவாகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவை பிரதானமாகக் கொண்டுள்ள பொதுஜன பெரமுன மாத்திரமே எந்தத் தேர்தலையும் எதிர்கொள்வதற்குத் தயாராக இருப்பதாகத் தெரிவித்து வருகிறது.
மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறைமையின் கீழேயே நடாத்தவேண்டும் என அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். எதிர்க்கட்சித் தலைவரும் இதற்கு ஆதரவு வழங்கியுள்ளார். இந்நிலையில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டு 2/3 பெரும்பான்மையின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
மீண்டும் பாராளுமன்றம் கூடுவதற்கு முன்பு விசேட பாராளுமன்ற அமர்வொன்றின் மூலம் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் பழைய முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவேண்டும்.
-Vidivelli