கோத்தாபய ராஜபக் ஷதான் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்றால் அவர்கள் உறுதியான நிலைப்பாட்டினை எம்மிடம் தெரிவிக்க வேண்டும். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினருக்கு தனித்து தேர்தலில் களமிறங்க முடியுமென்றால் எம்முடன் பேச்சுவாரத்தை நடத்தவேண்டிய எந்த அவசியமும் இல்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளரும் சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். எதிர்வரும் 10 ஆம் திகதி பேச்சுவார்த்தையே பொது இணைக்கப்பாட்டை எட்டும் இறுதிப் பேச்சுவார்த்தையாக இருக்க வேண்டும். அதற்கு அப்பால் பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் நடத்தவுள்ள பேச்சுவார்த்தை நகர்வுகள் மற்றும் தேசிய அரசாங்கமாக மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பயணிக்கவுள்ளதாக கூறப்படும் காரணிகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜனாதிபதி தேர்தலை எந்தக் கட்சியும் தனித்து வெற்றிகொள்ள முடியாது, இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியாக செயற்படும் சிலர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இல்லாது வெற்றி பெறவேண்டும் எனவும் எம்மை நிராகரித்து செயற்பட வேண்டும் எனவும் கூறுகின்றனர். அந்த தைரியம் இருந்தால் அவர்கள் தனித்து வெற்றி பெற்று காட்ட வேண்டும். தைரியம் இருந்தால் தனித்து களமிறங்கலாம். ஆனால் எந்த கட்சியாலும் தனித்து களமிறங்கி வெற்றிபெற முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக எம்மால் தனித்து வெற்றி பெற முடியாது, எமக்கு இது நன்றாகவே தெரியும். ஆகவே நாம் அவற்றை செய்ய மாட்டோம். கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாம் உள்ளோம். அதற்காகவே நாம் முயற்சித்தும் வருகின்றோம். எம்மால் எவ்வாறு தனித்து வெற்றிபெற முடியாதோ அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினாலும் தனித்து பயணிக்க முடியாது. நாம் பிரதான கட்சி அல்ல. அவர்களுக்கு அதிக பலம் உள்ளது. ஆனால் வேட்பாளர் ஒருவர் குறித்து அவர்கள் மட்டுமே தீர்மானிக்க முடியாது. அவர்களால் தனி வேட்பாளரை களமிறக்கி வெற்றிபெற முடியும் என்றால் அவர்கள் எம்முடன் பேச்சுவார்த்தை நடத்தாது பயணிக்கலாம் அதற்கு நாம் தடை இல்லை. எம்மாலும் வேட்பாளரை களமிறக்க முடியும்.
அதேபோல் மஹிந்த ராஜபக் ஷவினால் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாது, அவர் பிரதமராகலாம். அவரை பிரதமராக நாம் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றோம். இப்போது பிரச்சினை ஜனாதிபதி வேட்பாளர் குறித்ததே. அதில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பல காரியங்களை செய்துள்ளார். அவரை மீண்டும் களமிறக்கி நாட்டினை சரியான பாதையில் கொண்டுசெல்ல முடியும். அப்படி பார்த்தாலும் இரண்டு கட்சிகளின் தலைவர்களும் நாட்டின் தலைவர்களாக இருப்பார்கள். ஆகவே ஜனாதிபதி எமது பக்கமும் பிரதமரை அந்தப்பக்கமும் நியமிப்போம் என்பதே எமது நிலைப்பாடு. அதற்கமைய செயற்பட விரும்பினால் நாமும் கூட்டணிக்கு தயார். எமக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்க வேண்டும். எம்மால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பலவீனப்படுத்த முடியாது. பிரதான இரண்டு பதவிகளும் இரண்டு தரப்பினரும் பகிர்ந்துகொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாது கோத்தாபய ராஜபக் ஷதான் அவர்களின் வேட்பாளர் என்றால் அது குறித்து இறுதி தீர்மானம் எடுத்துவிட்டு எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும். அதன் பின்னர் நாமும் எமது நிலைப்பாட்டினை தெரிவிக்க முடியும். அவ்வாறு இல்லாது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான் செயற்படுவார்கள் என்றால் நாம் எதற்கும் பிடிகொடுக்க தயாரில்லை .
இன்று பொதுஜன முன்னணியாக வீர வசனம் பேசும் அனைவரும் ஸ்ரீலங்கா சுதந்தர கட்சியில் இருந்தவர்களே. அவர்களை மீண்டும் நாம் எம்முடன் இணைந்துகொள்ள அழைப்பு விடுத்தோம். நாம் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேற பிரதான காரணமே அவர்கள் எம்முடன் இணைந்துகொள்வார்கள் என்ற வாக்குறுதிதான். அவர்கள் அந்த வாக்குறுதியை கொடுத்தனர். ஆனால் இப்போது அவர்கள் மாற்று நிலைப்பாட்டில் உள்ளனர். அதேபோல் இப்போது இரண்டு தரப்பினர் இடையிலும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றது, இதில் ஜனாதிபதி வேட்பாளர் குறித்து மட்டுமே பேசுவது ஏன். கட்சியாக இணைந்து பயணிக்க தயாரில்லாது ஜனாதிபதி வேட்பாளர் பற்றி மட்டும் பேசுவது அர்த்தமில்லாத நிலைமையில் அமைந்துள்ளது. இன்று வரையில் இரண்டு தரப்பினரதும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. இவ்வாறு பேச்சுவார்த்தைகள் காலம் கடத்தபட வேண்டிய அவசியமும் இல்லை. இணைவதென்றால் உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி இணைந்து பயணிக்க முடியும். விட்டுக்கொடுப்புக்கு நாம் தயார், ஆனால் அவர்கள் இடம் கொடுக்கவில்லை. அநேகமாக எதிர்வரும் 10 ஆம் திகதி பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வர வேண்டும். இதில் நாம் இணைவதா பிரிவதா என்பது குறித்து இறுதியாக ஒரு முடிவு எட்டப்பட வேண்டும். தீர்மானம் எடுக்கும் இறுதிப் பேச்சுவார்த்தை 10 ஆம் திகதி பேச்சுவார்த்தையாகவே இருக்க வேண்டும்.
மேலும் தேசிய அரசாங்கம் குறித்து நாம் ஆராயவில்லை, தேசிய அரசாங்கம் அமைக்க வேண்டும் என்றால் நான் கட்சியின் செயலாளர் என்ற வகையில் கைச்சாத்திட வேண்டும். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சியுடன் இணையவில்லை. இணையும் நோக்கமும் இல்லை. பொய்யான காரணிகளை பொதுஜன முன்னணியினரே பரப்புகின்றனர். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். எமக்கு அது நன்றாகவே தெரியும் என்றார்.
-Vidivelli