யெமனில் பாடசாலை ஒன்றின் அருகில் சவூதி கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 சிறுவர்கள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளதோடு 100 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், யெமன் தலைநகர் சனாவில் அல் ரேய் பாடசாலை அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் 13 பேர் பலியாகினர்.
உயிரிழந்தவர்களில் 7 பேர் சிறுவர்கள். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த குண்டு வெடிப்பில் பாடசாலையின் கட்டடங்களும் பாதிக்கப்பட்டன” என்று செய்தி வெளியிட்டுள்ளன.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களில் கட்டுப்பாட்டுப் பகுதியில் யெமன் அரசு – சவூதி படைகள் கூட்டாக இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
தலைநகர் சனா, 2014 இலிருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வசம் இருப்பதால் அப்பகுதிகளுக்கு முற்றுகை இடப்பட்டுள்ளது.
தென் மேற்கு ஆசிய நாடான யெமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவூதி அரேபியா செயற்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.
சவூதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறி வைத்து யெமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.
இந்த போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். யெமன் அரசுடன் இணைந்து சவூதி நடத்தும் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli