ஜனாதிபதித் தேர்தல்: சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுவார்த்தை வேண்டாம்
பொதுஜன பெரமுனவினர் மஹிந்தவுக்கு வலியுறுத்து
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரை களமிறக்க எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ விருப்பம் தெரிவித்துள்ளார். எனினும் வெற்றிபெறும் வேட்பாளர் யார் என்பது குறித்து ஆராயவும் வலியுறுத்தியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும்- ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் எதிர்வரும் 10 ஆம் திகதியும் ஒரு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தரப்பினர் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது, இந்த சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் நகர்வுகள் மற்றும் வேட்பாளர் குறித்தே அதிகமாக பேசப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் -ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் எதிர்வரும் 10 ஆம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ள நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் நடத்தப்படும் சந்திப்பை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கோத்தாபய தரப்பாக அடையாளப்படுத்தும் கூட்டணியும் பின்வரிசை உறுப்பினர்கள் பலரும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிற்கு வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கடந்த வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தை எதிர்த்து வாக்களிக்காதமை மறைமுகமாக அரசாங்கத்தை ஆதரிக்கும் செயற்பாடு என்பதையும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அதிகமானவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் நெருக்கத்தை கையாண்டு வருகின்றமை ஆபத்தானது என்பதையும் வலியுறுத்தியுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியினர், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இனியும் கூட்டணியை அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்பதை கூறியுள்ளனர். கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெறுபேறுகள் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தனித்த வெற்றிக்கு வழிவகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேபோல் மாகாணசபைகள் தேர்தலை இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்த முடியாது என்ற காரணத்தை சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராவதே சிறந்த நகர்வுகள் என்பதை வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இது குறித்து பேச்சுவார்த்தை ஒன்றினை நடத்த தீர்மானம் எடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் கோத்தா அணியினருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. கோத்தாபய ராஜபக் ஷவை களமிறக்கி வெற்றியை தக்கவைக்க முடியாது என்பதை நேரடியாகவே எதிர்க்கட்சி தலைவரிடம் சிரேஷ்ட உறுப்பினர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உள்ளார். அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்து பயணிப்பது அர்த்தமில்லை. அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியுடன் நெருக்கத்தை கையாண்டு வருகின்றனர். ஆகவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியை முன்னிலைப்படுத்தி கோத்தாபய ராஜபக் ஷ போன்ற ஒருவரை களமிறக்கி வெற்றிபெற வேண்டும் என்பதையை வலியுறுத்தியுள்ளனர்.
இதன்போது வெற்றிபெறும் வேட்பாளர் ஒருவரை களமிறக்க ஆராய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக் ஷ இரு தரப்பினருக்கும் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தரப்பில் ஒருவரை களமிறக்க அவசியம் இல்லை என மஹிந்த ராஜபக் ஷ இறுதியாக தெரிவித்துள்ளதாகவும், பொதுஜன முன்னணி வேட்பாளர் ஒருவரையே மக்களும் கேட்பார்கள் ஆகவே எமது தரப்பில் ஒருவரை களமிறக்க முடியுமானால் நல்லது என்றும் கூறியுள்ளார் பொதுஜன முன்னணியின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
-Vidivelli