2015 ஆம் ஆண்டிலிருந்து குறைந்தது 6000 பலஸ்தீன சிறுவர்கள் இஸ்ரேலினால் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீன கைதிகள் அமைப்பு கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வருடாந்தம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் பலஸ்தீன சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அரச சார்பற்ற நிறுவனமான பலஸ்தீன கைதிகள் அமைப்பு வெளியிட்ட ஊடக அறிக்கையில் இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 98 வீதமான சிறுவர்கள் ஒன்றில் உளரீதியான அல்லது உடல்ரீதியான அல்லது இரு வகையானதுமான துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
டசின் கணக்கான சிறுவர்கள் முதலில் இஸ்ரேலியப் படையினரால் சுடப்பட்டு காயம் ஏற்படுத்தப்பட்டதன் பின்னர் இஸ்ரேலிய அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் 18 வயதிற்கு உட்பட்ட சுமார் 250 பலஸ்தீன சிறுவர்கள் தொடர்ந்தும் இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
48 பெண்களும் 250 சிறுவர்களும் உள்ளடங்கலாக 5,700 பலஸ்தீனர்கள் இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக ரமல்லாஹ்வை தலைமையகமாகக் கொண்ட பலஸ்தீன அதிகாரசபையின் கைதிகள் விவகாரத்திற் கான குழு தெரிவித்துள்ளது.