- எம்.ஐ.அப்துல் நஸார்
ஷரீஆ தண்டனைகள் கடந்த புதன்கிழமை (03) தொடக்கம் புரூணையில் அமுலுக்கு வந்துள்ள நிலையில், ஆண் ஒருபால் உறவு, முறைபிறழ்புணர்ச்சி போன்றவற்றிற்கு கல்லெறிற்து கொல்லுதல் உள்ளிட்ட கடுமையான புதிய ஷரீஆ தண்டனைகளை அமுல்படுத்தி நாட்டில் இஸ்லாமியப் போதனைகளைப் பலப்படுத்த வேண்டுமென புரூணை சுல்தான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அனைத்து அதிகாரங்களையும் கொண்ட சுல்தான் ஹஸனல் பொல்கியாவினால் ஆட்சி செய்யப்படும் சின்னஞ்சிறு சிறிய போர்னியோ தீவில் நீண்ட கால தாமதத்திற்குப் பின்னர் இறுக்கமான குற்றவியல் சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்படுகின்றது.
சவூதி அரேபியா போன்று பெரும்பாலான மத்திய கிழக்கு நாடுகளில் அமுல்படுத்தப்படும் திருடினால் கைகளை வெட்டி அகற்றுதல் உள்ளடங்கலான இக் குற்றவியல் சட்டங்களை தேசிய மட்டத்தில் அமுல்படுத்தும் கிழக்கு மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் முதலாவது நாடாக புரூணை இடம்பிடித்துள்ளது.
பாலியல் வன்புணர்வு மற்றும் கொள்ளை ஆகிய குற்றச் செயல்களுக்கு இக் குற்றவியல் சட்டக்கோவையின் கீழ் மரண தண்டனை விதிக்கப்படும் அதேவேளை, இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு புதிய சட்டத்தில் மரண தண்டனை விதிக்கப்படவுள்ளது. இச் சட்டங்கள் முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கும் ஏற்புடையதாகும்.
இத் தண்டனைகளை அமுலுக்கு கொண்டு வருவதென எடுக்கப்பட்ட தீர்மானம் உலகம் முழுவதிலும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை ‘கொடூரமானதும் மனிதாபிமானமற்றதுமான’ தண்டனைகளாக அடையாளப்படுத்தியுள்ள அதேவேளை, புரூணைக்குச் சொந்தமான ஹோட்டல்களை புறக்கணிக்குமாறு நடிகர் ஜோர்ஜ் குலூனி மற்றும் பொப்பிசைப் பாடகர் எல்டன் ஜோன் ஆகியோர் தலைமையிலான பிரபலங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இஸ்லாமிய நாட்காட்டியின் விஷேட தினமொன்றைக் குறிக்கும் விதத்தில் பொதுமக்களுக்கு உரையாற்றிய சுல்தான் இஸ்லாமியப் போதனைகள் பலப்படுத்த வேண்டுமென தெரிவித்தார், எனினும் புதிய குற்றவியல் சட்டக்கோவை பற்றி நேரடியாக எதனையும் குறிப்பிடவில்லை.
‘இந்த நாட்டில் இஸ்லாமியப் போதனைகள் பலமிக்கதாக வளர்வதைக் காண விரும்புகின்றேன்’ என தலைநகர் பந்தர் சேரி பெகாவானுக்கு அருகில் மாநாட்டு மத்திய நிலையமொன்றில் தேசிய ரீதியாக ஒளிபரப்பப்பட்ட தொலைக்காட்சி உரையில் குறிப்பிட்டார்.
‘எப்போதும் அல்லாஹ்வை மாத்திரம் வணங்குகின்ற ஒரு நாடே புரூணை என சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்’ எனவும் அவர் தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு அவர்களது மார்க்கக் கடமையை நினைவூட்டுவதற்காக தொழுகைக்கான அழைப்பு வெறுமனே பள்ளிவாசல்களில் மாத்திரமல்லாது அனைத்து இடங்களிலும் ஒலிக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஐந்து தசாப்தங்களாக பதவி வகித்துவரும் சுல்தான் ‘புரூணை நீதியானதும் மகிழ்ச்சிகரமானதுமான நாடாகும்’ எனவும் தெரிவித்தார். யாராவது இந்த நாட்டிற்கு விஜயம் செய்தால், இனிமையான அனுபவங்களை பெற்றுக்கொள்வதோடு பாதுகாப்பானதும் அமைதியானதுமான சூழ்நிலையையும் அனுபவிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஷரீஆ குற்றவியல் சட்டக்கோவை அமுலுக்கு வந்துவிட்டதா இல்லையா என்பதை அதிகாரிகள் உடனடியாக உறுதிப்படுத்தவில்லை. எதிர்வரும் புதன்கிழமை புதிய தண்டனைகள் அமுலுக்கு வரும் என கடந்தவார இறுதியில் புரூணை அரசாங்கம் விடுத்திருந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த இறுக்கமான தண்டனைகள் உலகளாவியரீதியில் கண்டனங்களை உருவாக்கியுள்ளன.
இந்த சட்டக்கோவை, குற்றமாகக் கருதப்படக்கூடாத செயற்பாடுகளுக்கும் புராதனகால தண்டனைகளை அமுல்படுத்துவது காட்டுமிராண்டித்தனத்தின் அடிப்படையாகும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதி ஆசியப் பணிப்பாளர் பில் ரொபட்சன் தெரிவித்துள்ளார்.
உலகின் முதல்நிலை செல்வந்தர்களில் ஒருவரும் தங்கக் குவிமாடம் கொண்ட மிகப்பெரும் அரண்மனையில் வசித்து வருபவருமான சுல்தானினால் 2013 ஆம் ஆண்டு இந்த சட்டக்கோவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இரு ஆண்கள் ஒருபால் உறவில் ஈடுபடுமிடத்து அவர்களுக்கு கல்லெறிந்து கொல்லுவதைத் தண்டனையாக விதித்துள்ள இச் சட்டம் பெண்கள் இருவர் பாலியல் உறவினைக் கொண்டிருப்பார்களாயின் அவர்களுக்கான அதிகபட்ச தண்டனையாக 40 பிரம்படிகள் அல்லது 10 வருட சிறைத் தண்டனை விதிக்கவுள்ளது.
2014 ஆம் ஆண்டு இச் சட்டக்கோவையின் முதலாவது பகுதி அறிமுகப்படுத்தப்பட்டதோடு ஒழுங்கீனமான நடத்தை மற்றும் வெள்ளிக்கிழமை தொழுகையினைத் தவறவிடுதல் உள்ளிட்ட குற்றங்களுக்கு தண்டப்பணம் அல்லது சிறைத் தண்டனை போன்ற இறுக்கம் குறைந்த தண்டனைகள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
கடந்த வாரம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள ஒன்பது புரூணைக்குச் சொந்தமான ஹோட்டல்களை புறக்கணிக்குமாறு நடிகர் ஜோர்ஜ் குலூனி விடுத்திருந்த வேண்டுகோள் சர்வதேசரீதியாக தலைப்புச் செய்தியாக இடம்பிடித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, கண்டனக் கூக்குரலில் தமது பெயர்களையும் பதிவு செய்து கொள்வதற்காக முன்னாள் அமெரிக்க உப ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் நடிகை ஜாமி லீ கேர்டிஸ் உள்ளிட்ட பிரபல பிரமுகர்களும் வரிசையாக வந்து இணைந்துகொண்டுள்ளனர்.
அரசாங்கம் இது தொடர்பில் மதிப்பீடு செய்து வருவதாகத் தெரிவித்துள்ள அமெரிக்கா இந்தத் தண்டனைகள் புரூணையின் சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கு முரணானதாகக் காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளது.
ஆபத்திற்கு இலக்காகக் கூடிய குழுக்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள், குற்றமாகமாற்றுதல் மற்றும் பாகுபாடுகளை அமெரிக்கா கடுமையாக எதிர்ப்பதாக இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதிப் பேச்சாளர் ரொபேட்டோ பல்லாடினோ தெரிவித்துள்ளார்.
உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்வதில் இரண்டாவது இடத்திலுள்ள சுல்தான் 1990களின் பிற்பகுதியில் குறித்த தண்டனைக்கோவை தொடர்பில் முதன் முதலில் பிரஸ்தாபித்தார். அதனைத் தொடர்ந்து பிரித்தானியாவின் முன்னாள் ஆள்புலப் பிரதேசமாக இருந்த புரூணையின் சுமார் 400,000 பேர் அதற்கு ஆதரவளித்தனர்.
அண்மைய ஆண்டுகளில் எண்ணெய் வளத்தில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியினால் பொருளாதாரப் பின்னடைவு ஏற்பட்டு வருவதால் இஸ்லாம் தொடர்பான தனது அடையாளத்தினை புதுப்பிப்பதோடு நாட்டிலுள்ள பழைமைவாதிகளின் ஆதரவை பெருக்கிக்கொள்ள வேண்டிய தேவை அவருக்கு ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கல்லெறிந்து கொல்லும் தண்டனை நிறைவேற்றப்படுமா என்பது தெளிவற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது. ஏனெனில் அவ்வாறான தண்டனை வழங்கப்படுவதற்கு மிகவும் பலமான ஆதாரங்கள் அவசியமாகும். பல தசாப்தங்களாக எவருக்கும் இதுவரை அவ்வாறான தண்டனை விதிக்கப்படவில்லை.
புரூணை
கணிசமான எண்ணெய் வளமும் எரிவாயு சேமிப்பையும் கொண்டுள்ள உலகின் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தைக் கொண்டுள்ள சிறிய தேசமே புரூணையாகும்.
தேசத்தின் தலைவரான சுல்தான் ஹஸனல் பொல்கியாவின் தலைமையிலான ஆளும் அரச குடும்பத்தினருக்கு பெருமளவான சொத்துக்கள் இருப்பதோடு அதில் பெரும்பான்மையாகக் காணப்படும் மலாயர்கள் அபரிமிதமான அரச உதவிகளைப் பெறுவதோடு வரி விலக்கினையும் பெற்றுள்ளனர்.
1888 ஆம் ஆண்டு தொடக்கம் பிரித்தானியாவின் ஆள்புலப் பிரதேசமாக இருந்த புரூணை 1963 ஆம் ஆண்டு தொடக்கம் மலேசியாவுடன் இணைந்திருந்தது. பின்னர் 1984 ஆம் ஆண்டு முழுமையான சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது.
குறிப்பிடத்தக்க முஸ்லிமல்லாத சிறுபான்மையினர் புரூணையில் வாழ்ந்துவரும் நிலையில், மனித உரிமைகள் அமைப்பின் கடுமையான எதிர்ப்புக்கும் மத்தியில் 2014 ஆம் ஆண்டு முறைபிறழ்புணர்ச்சி குற்றத்திற்கு கல்லெறிற்து கொல்லுதல் மற்றும் திருடினால் கைகளை வெட்டி அகற்றுதல் உள்ளடங்கலான தண்டனைகளுக்கு அனுமதியளிக்கும் கடுமையான இஸ்லாமிய சட்டத்திற்கு அங்கீகாரம் வழங்கிய முதலாவது கிழக்காசிய நாடாக புரூணை மாறியது.
புரூணை சுல்தான் ஹஸனல் பொல்கியா பற்றிய உண்மைகள்
உலகின் மிக நீண்டகாலம் பதவி வகிக்கும் மன்னர்களுள் ஒருவரான சுல்தான் ஹஸனல் பொல்கியா 1969 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் மன்னரானார். அவரது தந்தை சேர் ஹாஜி ஒமர் அலி சைபுதீன் பதவி விலகியதைத் தொடர்ந்து 1968 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பட்டம் சூட்டப்பட்டார்.
தற்போது உலகிலுள்ள முழுமையான ஆட்சி அதிகாரம் கொண்ட மன்னர்களுள் ஒருவரான சுல்தான் ஹஸனல் பொல்கியா பெருமளவான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவிலிருந்து கிடைக்கும் ஏராளமான வருமானத்தைக் கொண்டு தனது சின்னஞ்சிறு நாட்டை உலகின் மிகப் பொருளாதாரச் செழிப்புமிக்க நாடாகவும் சமூகப் பாதுகாப்புமிக்க சமூகமாகவும் மாற்றியுள்ளார். உலகின் மிகப் பெரும் செல்வந்தர்களுள் ஒருவரான சுல்தான் ஹஸனல் பொல்கியா, ஆடம்பர வாழ்க்கை முறைக்கும் சாதனையாகக் கருதப்படும் வசதி வாய்ப்புக்களுக்கும் பிரபலமானவராகக் காணப்படுகின்றார்.
உத்தியோகபூர்வ பட்டமாக சுல்தான் ஹஸனல் பொல்கியா முஇஸ்ஸதீன் வதாஉல்லாஹ் என்பதனைக் கொண்டுள்ள புரூணை சுல்தான், வட கிழக்குக் கரையில் அமைந்துள்ள பொர்னியோ தீவினை ஆட்சி செய்துவரும் பாரம்பரிய இஸ்லாமிய ஆட்சியாளர் 25 பில்லியன் அமெரிக்க டொடருக்கும் அதிகமான செல்வத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றார் என நிதித்துறை ஊடகம் தெரிவித்ததையடுத்தே உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
அக் காலத்தில் உலகில் முதலாவது பணக்காரராக கருதப்பட்டார். 1990 களில் அந்தப் பட்டத்தினை அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடம் பறிகொடுத்தார். தற்போது உத்தியோகபூர்வமாக அரசாங்கத்தின் சொத்துக்களாகக் கருதப்படும் சுல்தான் ஹஸனல் பொல்கியாவின் சொத்துக்களின் பெறுமதி 40 பில்லியன் அமெரிக்க டொடருக்கும் அதிகமானதென நம்பப்படுகின்றது. இந்த சொத்துக்கள் இதே வீதத்தில் அதிகரித்துச் செல்லுமாயின் சுல்தானின் மூத்த மகன் உலகின் முதலாவது கோடீஸ்வரனாக (ரில்லியனராக) மாறுவதற்கு பெரும்பாலும் வாய்ப்புக்கள் உள்ளன.
1991 ஆம் ஆண்டு மலாய் இன முஸ்லிம் ஆட்சியாளர் ‘நம்பிக்கையாளர்களின் பாதுகாவலர்’ என அழைக்கப்படும் பழைமைவாத சிந்தனையினை சுல்தான் அறிமுகம் செய்தார்.
இந்தக் கருத்து ஜனநாயகக் கோரிக்கையினை மழுங்கடிப்பதனையும் புரூணையில் அதிக எண்ணிக்கையில் வாழும் சீனர்கள் மற்றும் வெளிநாட்டவர்களை ஓரம்கட்டுவதனை நோக்கமாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
20 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த புரூணை பாராளுமன்றத்தை 2004 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுல்தான் மீளத் திறந்தார். இது நாட்டின் குடிமக்களுக்கு சில அரசியல் அதிகாரங்களை வழங்குவதற்கான உத்தேச நடவடிக்கை என அவதானிகள் கருதுகின்றனர்.
1946 ஆம் ஆண்டு பிறந்த சுல்தான் மலேசியாவிலும் பிரித்தானியாவிலும் கல்வி கற்றார். சுல்தானுக்கு இரண்டு மனைவியர்கள் உள்ளனர். அவர்களுள் ஒரு மனைவி உலகின் செல்வந்தப் பெண்களுள் ஒருவராவார்.
-Vidivelli