மனித வாழ்வின் மூன்று பிரதான கட்டங்களில் இளமைப் பருவம் என்பது அல்லாஹ்வின் மிகப்பெரும் ஓர் அருளாகும், இப்பருவத்தின் சிறப்பையும் பெறுமதியையும் அறிந்து கொள்ள, முதலில் நாம் இறைச்செய்திகளை அவதானிக்க வேண்டியிருக்கிறதுஇலக்காகக் .
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான் ; அல்லாஹ்தான் உங்களைப் பலவீனத்திலிருந்து படைத்தான். பின்பு, அவனே பலவீனத்தின் பின்னர் பலத்தை ஏற்படுத்தினான். பின்பு, பலத்தின் பின்னர் பலவீனத்தையும் (முதுமையின்) நரையையும் அவன் ஏற்படுத்தினான். அவன் நாடுவதைப் படைப்பான். அவன் யாவற்றையும் அறிந்தவன், பேராற்றலுடையவன்.’ (30:54)
இரண்டு பலவீன நிலைகளுக்கிடையே உள்ள பலமான பருவமாக அல் குர்ஆன் இப்பருவத்தை அடையாளப்படுத்துகிறது, உடல், உள ரீதியாக வலிமை நிறைந்து காணப்படும் இப்பருவத்தை இறைவனின் அன்பைப் பெறுவதனை மாத்திரம் இலக்காகக் கொண்டு இயங்குவதனால் கிடைக்கும் சிறப்பும் அருளும் மிக மகத்தானது. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அறிவுரை கேட்டு வந்த ஒருவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுரை பகர்ந்தவண்ணம் கூறினார்கள்: “நீர் ஐந்து விடயங்களை ஐந்து விடயங்களுக்கு முன் அரிய வாய்ப்பாய்க் கருதுவீராக!
- நீர் முதுமையடைவதற்கு முன்னால் உம் இளமையையும், 2. நீர் நோயுறுவதற்கு முன்னால் உம் ஆரோக்கியத்தையும், 3. நீர் ஏழ்மையடைவதற்கு முன்னால் உம் செல்வநிலையையும், 4. நீர் பணிகளில் ஈடுபடுவதற்கு முன்னால் உமக்கு கிடைக்கும் ஓய்வையும், 5. நீர் மரணமடைவதற்கு முன்னால் உமது வாழ்நாளையும் நீர் அரிய வாய்ப்பாய்க் கருதி பயன்படுத்திக் கொள்வீராக! நூல் – ஹாகிம் – 7846 ஸஹீஹுல் ஜாமிஃ – 1077
மறுமை நாளில் ஓர் அடியான் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கும் வரை அவனது கால்கள் இரண்டும் நகர முடியாது. அவை:
- தனது (உலக) வாழ்வை எவ்வாறு கழித்தான்?
- தனது வாலிபப் பருவத்தை எவ்வழிகளில் ஈடுபடுத்தினான்?
- செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தான் ?
4- அதை எவ்வாறு செலவழித்தான் ?
5- பெற்ற அறிவின் மூலம் என்ன செய்தான் ? என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) நூல் : திர்மிதி – 2416
ஸஹீஹுல் ஜாமிஃ – 7299
மேலுள்ள இரண்டு நபிமொழிகளும் இளமைப் பருவம் என்பது எம்மை விட்டு நழுவிப் போய் விடுவதற்கு முன் சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டிய காலம் வரையறுக்கப்பட்ட ஓர் அருள் என்றும் அது குறித்து நிச்சயமாக ஒவ்வொருவரும் மறுமையில் விசாரிக்கப்படுவார்கள் என்பதனையும் எமக்கு விளக்குகின்றன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் ஏழு நபர்களுக்கு நிழல் கொடுப்பான்.
- நீதமாக நடந்து கொண்ட ஆட்சியாளன்.
- அல்லாஹ்வின் வணக்கத்திலேயே வளர்ந்த இளைஞன்.
- தனது உள்ளத்தைப் பள்ளியுடன்; தொடர்பு படுத்திக் கொண்டிருந்த மனிதன்.
- அல்லாஹ்வுக்காக நேசம் கொண்டு அதற்காகவே இணைந்து அதற்காகவே பிரிந்த இரு மனிதர்கள்.
- அந்தஸ்தும் அழகுமுள்ள பெண் தவறு செய்ய அழைத்தபோது நிச்சயமாக நான் அல்லாஹ்வைப் பயப்படுகிறேன் எனக் கூறிய மனிதன்.
- வலது கை கொடுப்பதை இடது கை அறியாவண்ணம் தர்மம் செய்யும் மனிதன்.
- தனித்திருந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து கண்ணீர் வடித்த மனிதன்.
நூல் – புஹாரி. 629 முஸ்லிம் 1031
இறைச்செய்திகளில் இளைஞர்கள் என்று குறித்து சொல்லப்படுகின்ற அனைத்து இடங்களிலும் யுவதிகளும் உள்ளடங்குவர், அவர்களும் தம் செயல்கள் குறித்து விசாரிக்கப்படுவார்கள், அவர்களின் செயல்கள் நல்லவையாக இருந்தால் நன்மையும் தீயவையாக இருந்தால் தீமையும் அவர்களுக்கு உண்டு, இறையன்பை இலக்காகக் கொண்டு தமது இளமைப் பருவத்தை அவர்கள் கழிக்கும் பட்சத்தில் இறைவனின் அன்பும் அர்ஷின் நிழலும் உயர்ந்த சுவனமும் நிச்சயம் மறுமையில் கிடைக்கும்.
உன்னதமான இந்த சிறப்புக்களை அடைந்து கொள்ள, அருள் நிறைந்த இந்தப் பருவத்தை நெறிப்படுத்த வேண்டிய தேவை உள்ளது, தனது செயற்பாடுகளால் இறைவனை நெருங்குகின்ற ஓர் இளைஞன் அதற்கு சவாலாக அமைகின்ற அனைத்துக் காரியங்களையும் திட்டமிட்டு தவிர்த்துக் கொள்வதில் முனைப்புடன் செயற்பட வேண்டும், அவற்றில் மிக முக்கியமான சிலவற்றை மாத்திரம் இங்கு நாம் அடையாளப்படுத்துகிறோம்.
தகாத உறவு முறைகள்
இளமைப் பருவத்தில் ஏற்படுகின்ற நட்புக்களோ உறவுகளோ எதுவாயினும் அவை அல்லாஹ்வை நோக்கி அழைத்துச் செல்லுகின்ற உறவாக இருக்க வேண்டும்.
நல்லொழுக்கமுள்ள ஒருவர் தனது நண்பர்களால் தீய குணமுடையவராக மாற்றப்படலாம் தீய குணமுள்ளவர் நல்லவராக மாறுவதற்கான வாய்ப்பும் உண்டு. நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல நண்பனுக்கும் தீய நண்பனுக்கும் உதாரணம் கஸ்தூரி வைத்திருப்பவரையும் கொல்லனின் உலையையும் போன்றதாகும். கஸ்தூரி வைத்திருப்பவரிடமிருந்து உமக்கு ஏதும் கிடைக்காமல் போகாது. நீர் அதை விலைக்கு வாங்கலாம். அல்லது அதன் நறுமணத்தையாவது பெற்றுக் கொள்ளலாம். கொல்லனின் உலை உமது வீட்டையோ அல்லது உமது ஆடையையோ எரித்துவிடும். அல்லது அவனிடமிருந்து கெட்ட வாடையை நீர் பெற்றுக்கொள்வீர்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரழி)
நூல்: புஹாரி (2101)
நாம் யாரோடு நட்புக்கொள்கின்றோம் என்ற விடயத்தில் மிகவும் கரிசனையுடன் இருக்க வேண்டும்.
போதைப் பொருட்களுக்கு அடிமையாகுதல்
போதைப் பொருள் பாவனை என்பது இன்று சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என எவ்வித பாகுபாடுமின்றி அனைத்து தரப்பினரும் சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்ற நிலை உருவாகியிருக்கின்றது, குறிப்பாக இளைஞர்கள் தமது நண்பர்களோடு சேர்ந்து ஓரிரு நாட்கள் என பயன்படுத்த துவங்கி பின்பு அதுவே பழக்கமாகி அதற்கு அடிமையாகி விடுகின்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மதுபானத்தையும், அதைப் பருகுபவரையும், பிறருக்கு பருகக் கொடுப்பவரையும், அதை விற்பவரையும், அதை வாங்குபவரையும், அதை (பிறருக்கு) தயார் செய்து கொடுப்பவரையும், (தானே) தயார் செய்து கொள்பவரையும், அதைச் சுமந்து செல்பவரையும், யாருக்காக அது சுமந்து செல்லப்படுகிறதோ அவரையும் அதன் பெறுமானத்தை சாப்பிடக் கூடியவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அஹ்மத் – 5716, அபூ தாவுத் – 3674
போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாகி விட்ட ஒருவரால் ஒரு போதும் ஆன்மீகத்திலோ கல்வியிலோ பொருளாதாரத்திலோ முன்னேற்றம் காண்பதென்பது அசாத்தியமான ஒன்றாகும்.
எனவே போதைப் பொருட்களோடு எவ்வகையிலும் இளைஞர்கள் தொடர்புபடாதிருக்க இது குறித்து அவர்கள் தெளிவூட்டப்பட வேண்டியது காலத்தின் கடமையாகும்.
காதல், சினிமா. இசையில் மூழ்குதல்
காதல், சினிமா, இசை போன்ற இஸ்லாம் தடை செய்த அம்சங்களில் எவ்வித குற்ற உணர்வுமின்றி நேரத்தை விரயப்படுத்துவது மிகப்பெரும் சாபக் கேடாகும். சினிமாவின் தாக்கத்தால் நிஜவாழ்க்கையையும் சினிமா போன்ற கற்பனையாக பார்க்கின்ற மனோ நிலை இன்றைய இளைஞர்களை ஒருவகை உளவியல் சார் பிரச்சினையின் பால் தள்ளியிருக்கின்றது.
சினிமாவில் கரைந்து, இசையில் மூழ்கி, காதலில் சிக்கி தனது எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் தானே அழித்துக்கொள்கின்ற நிலையிலிருந்து இளைஞர்கள் பாதுகாக்கப்பட்டு ஆன்மீகம், கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்.
நேர விரயம்
சமூகம் சார்ந்த பயனுள்ள செயற்பாடுகள், கற்றல், வாசித்தல், போன்ற அறிவு சார்ந்த விடயங்களில் தன்னை ஈடுபடுத்துதல், அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது தூதருக்கு கட்டுப்பட்டு தனக்கும் சமூகத்துக்கும் பயனுள்ளவராக திகழ்தல் என்பது இறையன்பை இலக்காகக் கொண்ட இளைஞர்களிடம் எதிர் பார்க்கப்படும் அழகிய பண்புகளாகும், இதற்கு நேர்மாற்றமாக பயனற்ற விடயங்களில் தன்னை ஈடுபடுத்துதல், அல்லாஹ்வின் கட்டளைகளை பாழ்படுத்துதல், அவனது தூதருக்கு மாறு செய்தல், தனக்கும் சமூகத்துக்கும் எவ்வித பயனுமின்றி நேர காலங்களை விரயப்படுத்துவது என்பது இறையன்பை இழக்கச் செய்து விடும் செயல்களாகும்.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்; அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (7:31)-
முறை கேடான கையடக்க தொலைபேசிப் பாவனை
எமது தொலை தொடர்பாடல் தேவைகளை மிக இலகுவில் நிறைவேற்றிக்கொள்ள எமக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் ஓர் அருளே இந்த கையடக்க தொலைபேசியாகும். இதனை தேவைக்கு மாத்திரம் பயன்படுத்துவது வரவேற்கத்தக்கதாகும், இதனை தவறாக பயன்படுத்தியதன் மூலம் எவ்வகையான பாதிப்புக்களுக்கு இளைஞர், யுவதிகள் ஆளாகியிருக்கின்றனர் என்பதனை நாம் அன்றாடம் சமூக வலைத்தளங்கள் மூலமாக அறிந்து வைத்திருக்கின்றோம். இந்த விடயத்தில் இறையன்பை இலக்காகக் கொண்ட இளைஞர், யுவதிகள் மிகவும் பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும், மூத்தவர்கள், பெற்றோர்கள், பாதுகாவலர்கள் தமது பொறுப்பின் கீழுள்ள இளைஞர், யுவதிகளுக்கு அறிவுரை வழங்கி, வழிகாட்ட வேண்டும்.
இளமைப் பருவம் என்ற மகத்தான அருள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவேன் என்பதனை கவனத்தில் கொண்டு அந்த அருளை உரிய முறையில் பயன்படுத்துவதற்கு சவாலாக அமைகின்ற அம்சங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொண்டு தன்னோடிருப்பவர்களையும் நெறிப்படுத்தி, இறைவணக்கத்தில் காலத்தை கழிப்பதின் பால் வழிகாட்டுகின்ற ஓர் இளைஞனின் இளமைப் பருவம் இறையன்பை இலக்காகக் கொண்டதாகவே அமையப் பெற்றிருக்கும்.
-Vidivelli