கொழும்பு குப்பை பிரச்சினைக்கு தீர்வே அருவாக்காடு! கழிவு முகாமைத்துவம் தொடர்பில் தெளிவின்மையினாலேயே எதிர்க்கின்றனர்
பாராளுமன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு
கொழும்பில் சேரும் குப்பை பிரச்சினைக்கு இன்னும் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதால் வெளிநாட்டு உதவியுடன் புத்தளம் அருவாக்காடு பிரதேசத்தில் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றோம்.
எமது நாட்டில் இருக்கும் பிரச்சினைதான் எந்த அரசாங்கமானாலும் குப்பைகளை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு பிரதேசத்துக்கு கொண்டு செல்லும்போது அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகும். இதற்கு அனைத்து மதகுருமாரும் தலைமைத்துவம் வழங்குவார்கள். அனைத்து பிரதேசங்களிலும் இது இடம்பெறுகின்றது. நவீன தொழில்நுட்பங்களைக் கொண்டு குப்பைகளை சுழற்சி செய்வது தொடர்பாக மக்களுக்கு சரியான தெளிவு இல்லாமையே இந்த எதிர்ப்புக்கு ஒரு காரணமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் ஜனாதிபதியின் கீலுள்ள பாதுகாப்பு அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கொலன்னாவ குப்பை மேடு சரிந்து விழுந்த பின்னர் அரசாங்கம் என்ற வகையில் குப்பை பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுத்து வந்தோம். கொழும்பில் சேரும் குப்பை பிரச்சினைக்கு இன்னும் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள முடியாமல் போயுள்ளதால் வெளிநாட்டு உதவியுடன் புத்தளம் அருவாக்காடு பிரதேசத்தில் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றோம்.
எமது நாட்டில் இருக்கும் பிரச்சினைதான் எந்த அரசாங்கமானாலும் குப்பைகளை ஒரு இடத்தில் இருந்து வேறு ஒரு பிரதேசத்துக்கு கொண்டுசெல்லும்போது அந்த பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகும். இதற்கு அனைத்து மதகுருமாரும் தலைமைத்துவம் வழங்குவார்கள்.
அனைத்து பிரதேசங்களிலும் இது இடம்பெறுகின்றது. நவீன தொழிநுட்பங்களைக்கொண்டு குப்பைகளை சுழற்சி செய்வது தொடர்பாக மக்களுக்கு சரியான தெளிவு இல்லாமையே இந்த எதிர்ப்புக்கு ஒரு காரணமாகும்.
அதனால் அரசாங்கம் என்ற வகையில் குப்பை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக பொது தீர்மானம் ஒன்றுக்கு செல்லவேண்டிய நிலை இருக்கின்றது. அதுதொடர்பாக கொள்கை தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டியிருக்கின்றது. அப்போது நாட்டுக்காக, எதிர்ப்புகள் வந்தாலும் தீர்மானங்கள் எடுக்க வேண்டி ஏற்படுகின்றது. குப்பைகளை அகற்றும் போது ஏற்படுகின்ற எதிர்ப்புகள் காரணமாகவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாமல் இருக்கின்றது. அதனால் குப்பை அகற்றுவதற்கு தேசிய வேலைத்திட்டம் ஒன்று தேவையாக இருக்கின்றது.
அத்துடன் குப்பைகளை அகற்றும் பொறுப்பு உள்ளூராட்சி மன்றங்களுக்குரியதாகும். என்றாலும் அந்த மன்றங்களுக்கு குப்பைகளை அகற்றத் தேவையான இயந்திரங்கள் வாகனங்கள் இல்லை. அதனால் குப்பைகளை வேறு பிரதேசங்களுக்கு முறையாக அகற்ற முடியாத பிரச்சினை இருக்கின்றது. அதனால் மாகாண சபை அமைச்சினூடாக இந்த மன்றங்களுக்கு தேவையான இயந்திர உபகரணங்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் மகாவலி அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் மொரஹாகந்த , களுகந்த திட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம். அத்துடன் உமா ஓயா திட்டத்தையும் இந்த வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருவோம். மகாவலி வேலைத்திட்டத்தில் காணி வழங்கும் நடவடிக்கைகளில் முறைகேடுகள் இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எவ்வாறாயினும் காணிகளை வழங்கும் போது அரசியல் ரீதியில் அதனை செய்ய முடியாது. காணி இல்லாத, விவாகமான, பிள்ளைகள் இருக்கின்ற, வழங்கப்படும் புள்ளிகள் போன்ற முறைமைகளை பின்பற்றியே அது முன்னெடுக்கப்படுகின்றது. எந்தவொரு அரசியல் வாதிகளின் தேவைகளுக்கும் ஏற்றால் போன்று எந்த பட்டியலையும் தயாரிக்க முடியாது. எந்த வகையிலும் ஊழல் மோசடிகள் இடம்பெறவில்லை என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.
அத்துடன் பாதுகாப்பு அமைச்சு தொடர்பாக கதைக்கும் போது முப்படையினரும் பொலிஸாரும் நாட்டுக்காக பாரிய பங்களிப்பை வழங்குகின்றனர். வடக்கு அரசியல்வாதிகள் படையினர் தொடர்பில் எந்த நிலைப்பாட்டில் இருந்தாலும் வடக்கில் சாதாரண மக்கள் இராணுவத்தினருடன் நெருங்கி பழகுகின்றனர். அங்கு வெள்ள அனர்த்தம் ஏற்பட்ட போது முப்படையினரும் அவர்களுக்கு உதவினர். முப்படையினருக்கும் வளங்கள் தொடர்பான குறைபாடுகள் இருக்கின்றன. இவற்றை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
அத்துடன் நாட்டில் பொலிஸ் சேவையில் 85 ஆயிரம் பேர் இருக்கின்றனர். இவர்களுள் விசேட அதிரடிப் படையினரும் அடங்குகின்றனர். இவர்கள் போதைப் பொருளை ஒழிப்பதற்காக பாரிய பங்களிப்பை செய்கின்றனர். புதிய தொழில்நுட்பம் இல்லாத நிலையிலும் இவர்கள் அந்த பணிகளை செய்கின்றனர். திறமையின் மூலமே அதனை அவர்கள் முன்னெடுக்கின்றனர். போதைப்பொருளை கண்டுபிடிக்க நவீன தொழில்நுட்டபம் எமக்கில்லை. நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் இருக்கும் நாடுகளில் இந்த பிரச்சினை இல்லை. அதனால் நாங்களும் அவ்வாறான நவீன தொழில்நுட்ப இயந்திரங்களை கொள்வனவு செய்ய இருக்கின்றோம். இதேவேளை பொலிஸ் திணைக்களத்தின் பணிகளை கௌரவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பொலிஸ் சட்ட திட்டங்களை மாற்றியமைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேவேளை சுற்றாடல் , மகாவலி இராஜாங்க அமைச்சராக மான்னப் பெரும இருப்பதுடன் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக ருவன் விஜேவர்தன இருக்கின்றார். இவர்கள் இருவரும் நேர்மையானவர்கள். சிறந்த அரசியல்வாதிகள். எனது கொள்கைக்கு பொருத்தமானவர்களே எனக்கு கிடைத்துள்ளனர். இவர்கள் இருவரையும் மிகவும் கஷ்டப்பட்டே கண்டுபிடித்தேன். நான் அவர்களுக்கு எனது நடவடிக்கைகளை முன்னெடுக்கும் அதிகாரங்களை வழங்கியுள்ளேன். அத்துடன் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்கு கட்சி பேதமின்றி அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியதால்தான் இதனை மேற்கொண்டு செல்ல முடியுமாக இருக்கின்றது என்றார்.
-Vidivelli