வில்பத்துவின் பெயரில் இனவாதம் தூண்டப்படுகிறது
வியாபார நோக்கிலேயே பிரசாரம் முன்னெடுப்பு என முஜிபுர் ரஹ்மான் சுட்டிக்காட்டு
வில்பத்து விவகாரம் காடழிப்பு பற்றிய பிரச்சினையல்ல. இனவாதத்தை தூண்ட மேற்கொள்ளும் நடவடிக்கையே என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன், சித்திரை புத்தாண்டு வருவதனால் வியாபாரிகள் சிலர் ஒருசிலருக்கு பணம்கொடுத்து இனவாதத்தை தூண்டி மீண்டுமொரு முஸ்லிம் – சிங்கள பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு மற்றும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
வில்பத்து சரணாலய பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் குடியமர்த்தப்பட்டிருப்பதாக தெரிவித்து சமூகத்தை பிழையாக வழிநடத்த சிலர் முயற்சிக்கின்றனர். வில்பத்து சரணாலயம் அமைந்திருப்பது அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலாகும். ஆனால் தற்போது மக்கள் குடியமர்த்தப்பட்டிருப்பது மன்னார் மாவட்டத்துக்கு உட்பட்ட பிரதேசத்திலாகும்.
யுத்தகாலத்தில் மன்னாரில் இருந்து விடுதலைப்புலிகளால் விரட்டப்பட்ட மக்கள் தெற்கில் பல்வேறு பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர். 1990இல் தங்கள் சொந்த இடத்தைவிட்டு வெறும் கைகளுடன் வெளியேறிய அந்த மக்கள் யுத்தம் முடிந்த பின்னர் 2013இல் மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள். ஆனால் சூழலியல் வாதிகள் பொய் குற்றச்சாட்டு தெரிவித்து வில்பத்து சரணாலய காட்டை அழித்து அந்த மக்களை குடியேற்றி இருப்பதாக பிரசாரம் செய்கின்றனர்.
மேலும் முஸ்லிம் மக்கள் விடுதலை புலிகளை அன்று ஆதரித்திருந்தால் பிரபாகரனால் அவர்கள் விரட்டப்பட்டிருக்க மாட்டார்கள். என்றாலும் அந்த மக்கள் நாட்டை காட்டிக்கொடுக்காமல், நாட்டின் ஒற்றையாட்சியை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்கள். இல்லாவிட்டால் இன்றும் அவர்கள் தங்கள் சொந்த இடங்களில் வாழ்ந்து வந்திருப்பார்கள்.
என்றாலும் நாட்டை காட்டிக்கொடுக்காததால் அவர்கள் விரட்டப்பட்டபோது தெற்கில் பல பிரதேசங்களிலும் வாழ்ந்தார்கள். அப்போது இந்த சூழலியல்வாதிகள் அந்த மக்கள் தொடர்பில் பார்க்கவில்லை.
அத்துடன் அந்த மக்கள் 1990 இல் தங்கள் சொந்த இடங்களில் இருந்து சென்ற பின்னர் மீண்டும் 2013 இல் மீண்டும் வருகின்றனர். ஆனால் அந்த பிரதேசங்கள் பெரும் காடாக இருந்ததால் 2012இல் அந்த பிரதேசங்களை வனப்பாதுகாப்பு பிரதேசமாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுகின்றது. இதனை பயன்படுத்திக்கொண்டே காடழிப்பதாக சூழலியல்வாதிகள் பிரசாரம் செய்கின்றனர்.
அத்துடன் வவுனியா கருங்காகம் குளம் பிரதேசம் பாதுகாப்பு வனாந்திரம் என 1921ஆம் ஆண்டு வனபாதுகாப்பு திணைக்களத்தால் வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த பிரதேசத்தில் 3ஆயிரம் ஏக்கரில் காடுகளை அழித்து நாமல்கம என்ற கிராமத்தை அமைத்து அம்பாந்தோட்டை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து மக்களை கொண்டுசென்று நாமல் ராஜபக் ஷ குடியேற்றினார். அப்போது இந்த சூழலியல்வாதிகள் எங்கிருந்தார்கள். வில்பத்து தொடர்பாக கதைப்பவர்கள் நாமல் ராஜபக் ஷ காடழிப்பது தொடர்பாக கதைப்பதில்லை.
எனவே இது காடழிக்கும் பிரச்சினையல்ல. இனவாதத்தை தூண்ட மேற்கொள்ளும் நடவடிக்கையாகும். சித்திரை புத்தாண்டு வருவதனால் வியாபாரிகள் சிலர் ஒருசிலருக்கு பணம்கொடுத்து இனவாதத்தை தூண்டி மீண்டுமொரு முஸ்லிம், சிங்கள பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இவர்கள் தொடர்பில் தேடிப்பார்க்கவேண்டும் என்றார்.
-Vidivelli