பங்களாதேஷின் தெற்கு கொக்ஸ் பஸார் மாவட்டத்தில் தற்காலிக தங்குமிடங்களில் வசித்துவரும் ரோஹிங்ய மக்களின் மீள் திரும்புகை பாதுகாப்பானதாக அமைய வேண்டும் என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா வேண்டுகோள் விடுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.
ரோஹிங்ய மக்கள் தமது சொந்த நாட்டுக்கு அவர்களது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் விரைவாக மீளத் திரும்புவதே சிறந்ததாகும் என கடந்த செவ்வாய்க்கிழமை டாக்காவுக்கான புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ரொபட் சட்டேடன் டிக்சனை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் வரவேற்கும் நிகழ்ச்சியில் ஷேக் ஹஸீனா தெரிவித்தார்.
அதிக எண்ணிக்கையான ரோஹிங்கிய அகதிகளினால் உள்ளூர் பங்களாதேஷ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பிலும் உரையாற்றிய பங்களாதேஷ் பிரதமர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதில் தனது அரசாங்கம் முடிந்தளவு சேவையாற்றி வருவதாகத் தெரிவித்தார்.
பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் பங்களாதேஷின் ரோஹிங்ய மக்களின் மீள் திரும்புகை விரைவாக இடம்பெற வேண்டும் என பங்களாதேஷ் பிரதமரின் வேண்டுகோளுக்கு டிக்சன் ஆதரவு தெரிவித்ததாக பங்களாதேஷின் தனியார் ஊடகமான யுனைட்டட் நியூஸ் தெரிவித்துள்ளது.
ரோஹிங்ய நெருக்கடியை தீர்ப்பதற்கு காலம் சென்ற முன்னாள் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனான் தலைமையில் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த மியன்மார் அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் ஹஸீனா வேண்டுகோள் விடுத்தார்.
நெருக்கடிமிக்க முகாம்களில் தற்போது சுமார் 40,000 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
-Vidivelli