ஹஜ் முகவர்கள் ஆள் மாறாட்டம்
அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்ய தீர்மானம்; விண்ணப்பித்தோரும் உடந்தை என குற்றச்சாட்டு
இவ்வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகளில் சில ஹஜ் முகவர்கள் ஆள்மாறாட்ட நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும், அரச ஹஜ் குழுவுக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ள ஹஜ் முகவர்களின் ஹஜ் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விண்ணப்பித்து உரிய பதிவுக் கட்டணத்தையும் செலுத்தியுள்ள, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஹஜ் கடமைக்காக தெரிவு செய்யப்பட்டுள்ள ஹஜ் விண்ணப்பதாரிகளில் சிலர் இவ் ஆள்மாறாட்ட நடவடிக்கைகளுக்கு முகவர் நிலையங்களுக்கு உடந்தையாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறானவர்கள் தாம் இவ்வருடம் ஹஜ் கடமையை மேற்கொள்வதில்லை எனத் தெரிவித்து ஹஜ் முகவர் ஊடாக அவ்வெற்றிடத்துக்கு வேறு ஒருவரை அனுப்பி வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதற்கென ஹஜ் முகவர்களிடமிருந்து ஒரு தொகைப் பணத்தையும் பெற்றுக்கொள்வதாக அரச ஹஜ் குழுவுக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி எம்.ரி. சியாத் தெரிவித்தார்.
இவ்வாறான செயல்களில் ஈடுபட்டுள்ள ஹஜ் விண்ணப்பதா ரிகளுக்கு அடுத்த வருடம் ஹஜ் கடமைக்கான வாய்ப்பு வழங்கப்பட மாட்டாதெனவும் அவர் கூறினார்.
ஹஜ் கடமைக்காக இவ்வருடம் தெரிவு செய்யப்பட்டு கடமையை ஏதோ காரணங்களினால் மேற்கொள்ள முடியாத விண்ணப்பதாரிகள் அது பற்றி எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்பு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்துக்கு எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கப்பட்டாலே அவர்களுக்கு அடுத்த வருடம் ஹஜ் கடமைக்கான வாய்ப்பு வழங்கப்படுமெனவும் அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இவ்வருடம் ஹஜ் கடமைக்காக விண்ணப்பித்து பதிவுக்கட்டணத்தையும் செலுத்தியுள்ள, ஹஜ் கடமைக்காக இவ்வருடம் தெரிவு செய்யப்படாத விண்ணப்பதாரிகளில் 155 பேர் அரச ஹஜ் குழுவுக்கு மேன்முறையீடு செய்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
கிடைக்கப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் பரிசீலனைக்குட் படுத்தப்பட்டு நியாயமான காரணங்கள் குறிப்பிடப்பட்டிருந்தால் சிலர் ஹஜ் கடமைக்குத் தெரிவு செய்யப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.
vidivelli