யாரையும் வீழ்த்துவதற்காக அ.இ.ம. காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தடம்பதிக்கவில்லலை
கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்
அம்பாறை மாவட்டத்தில் யாரையும் வீழ்த்த வேண்டும் என்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி தடம் பதிக்கவில்லை. இம்மாவட்டத்தில் உள்ள நமது மக்கள் பெற வேண்டிய எத்தனையோ விடயங்களைப் பெறாமல் நிர்க்கதியாக்கப்பட்டிருக்கின்றார்கள். அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவும், சமூக விடுதலையினைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும் எமது கட்சி இம்மாவட்டத்திற்கு வந்ததே தவிர யாருக்கும் தீங்கு விளைவிப்பதற்காக எமது கட்சி இங்கு வரவில்லை. நாம் சமூகத்தின் நலனுக்காக செயற்படுவதால்தான் இன்று எத்தனையோ இடங்களில் எனக்கெதிராக கொடும்பாவிகள் எரிக்கின்றார்கள் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
அக்கரைப்பற்று பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள வருமானம் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 375 குடும்பத்தவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வும் அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமா சபை கட்டட நிர்மாண நிதியுதவிக்கான அனுமதிப்பத்திரம் கையளிக்கும் நிகழ்வும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், நமது சமூகத்தின் நலனுக்காக துணிந்து நின்று செயற்படுவதையும், சமூகத்தின் நன்மைக்காய் குரல் கொடுப்பதையும் விரும்பாத சில சக்திகள் எமக்கெதிராக அம்புகளை எய்வதை நாம் காண்கின்றோம். அதன் அடிப்படையில்தான் பல நகரங்களிலே எனக்கெதிராக கொடும்பாவிகளைச் செய்து எரித்திருக்கின்றார்கள். எனக்கெதிராக இவ்வாறு அம்புகள் எய்யப்படுவது ஏன் என்பதை நமது சமூகத்தவர்கள் நன்கு சிந்திக்க வேண்டும்.
எமது கட்சி ஆரம்பிக்கப்பட்ட மிக நீண்ட காலத்திற்குப் பின்னரே நாம் அம்பாறை மாவட்டத்தில் எமது கட்சியின் செயற்பாட்டினை மேற்கொள்ள முனைந்தோம்.
இந்த மாவட்டத்தில் உள்ள மக்களின் எத்தனையோ விடயங்கள் தீர்க்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றது, இம்மாவட்ட மக்களின் காணிப் பிரச்சினைகள் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருக்கின்றது, இம்மாவட்ட மக்களின் எத்தனையோ பல அடிப்படைப் பிரச்சினைகள் முழுமைப்படுத்தப்படாமல் முடங்கிக் கிடக்கிறது என்பதற்காகவே இம்மாவட்டத்தில் எமது கட்சியின் செயற்பாடுகளை முடுக்கி விட்டோம்.
நமது மக்களின் உரிமைகளைப் பேசாமல் வாய்மூடிகளாக இருந்து கொண்டும், நமது மக்களுக்கு வேண்டியதை இதுவரை எந்தப் போராட்டத்தின் மூலமாகவேனும் பெற்றுக் கொள்ளாமல் மௌனிகளாகவும் சிலர் இருந்ததனாலேயே நாம் இம்மாவட்ட மக்களுக்காக குரல் கொடுப்பதற்கு ஆயத்தமானோம்.
நாம் எந்தவித அபிவிருத்திகளைப் பற்றியும் பேசமாட்டோம். நமது உரிமைகளை மட்டுமே பேசுவோம் என்று வாய்ப்பேச்சுக்களில் வீரர்களாக இருந்தவர்கள் எமது வருகைக்குப் பின்னர் யாருக்கு அபிவிருத்தி வேண்டும்.
யாருக்கு பாதை வேண்டும், யாருக்கு வாழ்வாதாரம் வேண்டும் என சிந்தித்து செயற்படத் தொடங்கியிருக்கின்றார்கள்.
அதற்குக் காரணம் எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் வேகமான செயற்பாடுகள் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
வில்பத்துப் பிரச்சினை போன்று அம்பாறை மாவட்டத்தில் பல நூற்றுக்கணக்கான பிரச்சினைகள் உள்ளன. வட்டமடு காணிப் பிரச்சினை என்றும், பொத்துவில் காணிப்பிரச்சினைகள் என்றும், நுரைச்சோலை வீட்டுத் திட்டப் பிரச்சினை என்றும் எத்தனையோ பிரச்சினைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம்.
அவ்வாறான பிரச்சினைகள் இதுவரை ஏன் தீர்க்கப்படாமல் உள்ளன என்பதை நாம் இன்னும் சிந்திக்காமல் இருப்பதன் மர்மம்தான் என்ன?
அம்பாறை மாவட்டத்தில் நமது முஸ்லிம் சமூகத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்று மார் தட்டிக் கொண்டிருக்கின்றோமே இம்மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் அரசாங்க அதிபரை நாம் நியமிக்க முடியாமல் இருக்கும் கையாலாகாத்தனத்தினைப் பற்றியும் நமது அரசியல் வீரம் பேசும் வாய்ப் பேச்சாளர்களைப் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டாமா?
கிழக்கு மாகாணத்தில் உள்ள மூவின சமூகங்களும் செறிந்து வாழும் விகிதாசாரத்திற்கு ஏற்ப நமது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள இனத்தினைச் சேர்ந்த ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு இன அரசாங்க அதிபர்களை நியமிக்க இந்த அரசியல் உரிமைப் பேச்சாளர்களால் முடியாமல் போனது ஏன் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
பத்து சதவீதமாக நமது முஸ்லிம்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். 25 மாவட்டங்கள் எமது நாட்டில் உள்ளன. விகிதாசார அடிப்படையில் பார்த்தால் எமது சமூகத்தில் இருக்கும் மூவர் மாவட்ட அரசாங்க அதிபர்களாக நியமிக்கப்பட வேண்டும்.
இந்தப் போராட்டத்தின் ஒரு முயற்சியாக நான் வவுனியா மாவட்டத்திற்கு முஸ்லிம் இனத்தினைச் சேர்ந்த ஒருவரை அரசாங்க அதிபராக நியமித்திருக்கின்றேன் என்றார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, பிரதி அமைச்சர் அப்துல்லா மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், இஸ்ஹாக் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
-Vidivelli