துருக்கியில் உள்ளூர் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. உள்ளூர் நேரப்படி நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்ததாக அந்நாட்டு தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கலவரம் ஏதும் ஏற்படாத வண்ணம் குறிப்பாக ஆயுதமேந்திய பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி தையீப் அர்துகானை பதவி விலகுமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. தனது ஆட்சியை தக்கவைத்து கொள்ள வேண்டுமாக இருந்தால் இந்தத் தேர்தலில் அவர் அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும்.
துருக்கி உள்ளூர் தேர்தலில் தையீப் அர்துகானின் கட்சி தலைநகர் அங்காராவில் பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, துருக்கியின் அதிக மக்கள் தொகை கொண்ட நகரான இஸ்தான்புல்லிலும் எதிர்க்கட்சி ஒன்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், தமது ஆளும் கட்சி சில நகரங்களின் ஆட்சியை இழந்துள்ளமையை ஜனாதிபதி அர்துகான் ஏற்றுக்கொண்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இடம்பெற்றிருந்தன. இந்த உள்ளூர் தேர்தலானது நாட்டின் தலைமையை தீர்மானிக்கும் வாக்கெடுப்பு என பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இத்தேர்தலானது 16 ஆண்டுகளாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்திவரும் தமது கட்சியினது நிலைத்தன்மையை தீர்மானிப்பதற்கானது என ஜனாதிபதி அர்துகான் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli