‘பலஸ்தீன நிலம்’ தினம் வருடாந்தம் மார்ச் 30 ஆம் திகதி உலகளவில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்போது பலஸ்தீனில் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் பேசப்படுவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இம்முறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இத் தினம் தொடர்பான நிகழ்வுகள் பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந் நிகழ்வுகளில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் தார் ஹம்தல்லா ஸைத் பங்குகொள்கிறார்.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது நிலத்தை விடுவிக்குமாறு கோரி 1976 ஆம் ஆண்டு மார்ச் 30 ஆம் திகதி போராட்டம் நடத்திய மக்கள் மீது இஸ்ரேல் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையிலேயே வருடாந்தம் இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
பலஸ்தீன நில தினத்தை முன்னிட்டு பலஸ்தீன் மத்திய புள்ளிவிபரவியல் திணைக்களம் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நில ஆக்கிரமிப்புகள் தொடர்பான விரிவான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பலஸ்தீனின் 13 மில்லியன் சனத் தொகையில் அரைவாசிக்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் இதுவரை பலஸ்தீனுக்கு வரலாற்று ரீதியாக சொந்தமாக 27 ஆயிரம் சதுர அடி பரப்பளவுள்ள நிலைத்தை அபகரித்துள்ளது. இது மொத்த நிலத்தில் 85 வீதமாகும். மேற்குக் கரையில் மாத்திரம் 2072 ஏக்கர் விவசாய நிலம் இஸ்ரேலினால் அபகரிக்கப்பட்டுள்ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்பரப்பில் 37 வீதமாகும். அங்கு 931.5 ஏக்கர் விவசாய நிலம் மாத்திரமே பலஸ்தீனர்களுக்குச் சொந்தமாகவுள்ளது. இது மேற்குக் கரையின் மொத்த நிலப்பரப்பில் 17 வீதமாகும்.
2000 முதல் 2018 வரையான காலப்பகுதியில் சுமார் 1 மில்லியன் மரங்கள் இஸ்ரேலினால் பிடுங்கியெறியப்பட்டுள்ளன. கடந்த 2018 ஆம் ஆண்டு மாத்திரம் 7122 மரங்கள் பிடுங்கப்பட்டுள்ளன.
2017 வரை மேற்குக் கரையில் 435 இஸ்ரேலிய சட்டவிரோத குடியேற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இவற்றுடன் இணைந்து இராணுவ கேந்திர நிலையங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. 2018 இல் மாத்திரம் மேற்குக் கரையில் இஸ்ரேலினால் 9384 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டில் 9 புதிய குடியேற்றத்திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
2017 ஆம் ஆண்டு வரையான கணிப்பீடுகளின்படி மேற்குக் கரையில் 653,621 பேர் இஸ்ரேலினால் குடியேற்றப்பட்டுள்ளனர்.
பலஸ்தீனைப் பொறுத்தவரையில் மிக மோசமான முறையில் அடக்குமுறையையும் ஆக்கிரமிப்பையும் சந்தித்துள்ள பிரதேசமே காஸா பள்ளத்தாக்காகும். சில தினங்களுக்கு முன்னர் கூட காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் 500 வீடுகள் சேதமாக்கப்பட்டன. இவற்றில் 30 வீடுகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய திறந்த வெளிச் சிறைச்சாலையாக காஸா அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. காஸாவில் வாழும் 10 வீதமான மக்கள் மாத்திரமே சுத்தமான குடி நீரைப் பெறுகின்றனர். மிகுதி 90 வீதமானோர் மனிதப் பாவனைக்குதவாத மாசடைந்த நீரையே பருகுகின்றனர். அதிலும் பலஸ்தீனர்கள் தமக்குச் சொந்தமான நீரை இஸ்ரேலிடமிருந்தே பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேற்குக் கரையின் பிரதான நீர் மூலமான அகுபர் மலையிலிருந்து கிடைக்கும் நீரில் 80 வீதம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அத்துடன் மேற்குக் கரையில் பலஸ்தீன நகரங்களுக்கான நீர் விநியோகம் பல நாட்களுக்கு அல்லது வாரக் கணக்கில் தொடர்ச்சியாக இஸ்ரேலினால் துண்டிக்கப்படுகின்றன.
இவ்வாறு பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பினால் சொல்லொணா துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் தனது ஆக்கிரமிப்பையும் சட்டவிரோத நடவடிக்கைகளையும் நிறுத்துவதற்குப் பதிலாக தொடர்ந்தும் தீவிரமாக முன்னெடுத்தே வருகிறது. இதனை உலகிலுள்ள எந்தவொரு நாட்டினாலும் தட்டிக் கேட்க முடியாத நிலை தோன்றியுள்ளது. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்னரை விடப் பாரிய உதவிகளை இஸ்ரேலுக்கு வழங்கி வருகிறார்.
இவ்வாறானதொரு தீர்க்கமான காலப்பகுதியிலேயே இந்த வருட பலஸ்தீன நிலம் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்த வகையில் நாமும் பலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிவதுடன் அவர்களது விடுதலைக்காக குரல் கொடுக்கவும் பிரார்த்திக்கவும் முன்வர வேண்டும்.
-Vidivelli