நியூசிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் தாக்குதலில் நடைபெற்றது போன்று சமூக ஊடகத் தளங்களை ஆயுதமாக்குவதிலிருந்தும் வன்முறை குற்றங்களை நேரலையாகக் காண்பிப்பதிலிருந்தும் மக்களைத் தடுப்பதற்கு இறுக்கமான பயங்கரவாதத்திற்கு எதிரான புதிய சட்டத்தினை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
28 வயதான அவுஸ்திரேலிய நபர் முகநூலின் மூலம் பள்ளிவாசலொன்றில் தாக்குதல் நடத்தும் 17 நிமிட துப்பாக்கிப் பிரயோகத்தை நேரலையாகக் காண்பித்திருந்தார். மார்ச் மாத நடுப்பகுதியில் இடம்பெற்ற இத் தாக்குதல் சம்பவத்தில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
இப் புதிய சட்டத்துடன் சமூக ஊடக ஜாம்பவான்களை, அவர்கள் உடனடியாக வன்முறை உள்ளடக்கம் கொண்ட விடயங்களை நீக்காவிட்டால் அவர்களை குற்றவாளிகளாக்கி சிறைத் தண்டனையும் மில்லியன் கணக்கான டொலர் தண்டப்பணமும் விதிக்கும் உலகின் முதலாவது நாடாக உருவாகவுள்ளது.
குறித்த சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
பெரிய சமூக ஊடக நிறுவனங்களுக்கு அவர்களது தொழில்நுட்பவியல் உற்பத்திகள் கொலைகாரப் பயங்கரவாதிகளால் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்படாதிருப்பதை உறுதிப்படுத்த வேண்டியது கடமையாகும் என சட்டமா அதிபர் மற்றும் தொழில்நுட்ப அமைச்சருடன் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் மொறிசன் தெரிவித்துள்ளார்.
புதிய சட்டமூலம் சமூக ஊடக நிறுவனங்கள் தமது தொழில்நுட்பங்கள் ஏற்படுத்தக்கூடிய அச்சுறுத்தல்களை நீக்குவதற்கு தமது செயற்பாடுகளை ஒன்றிணைத்து சட்ட நடைமுறையாக்க அமைப்புக்களோடும் புலனாய்வு முகவரகங்களோடும் பணியாற்ற நிர்ப்பந்திக்கும்.
சமூக ஊடக நிறுவனமொன்று வன்முறைசார்ந்த உள்ளடக்கங்களை நீக்காவிட்டால் குறித்த நிறுவனத்தின் வருடாந்த வருமானத்தில் குறிப்பிட்ட வீதத்தை தண்டப்பணமாகச் செலுத்தவேண்டும். அத்தோடு நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு மூன்று வருடங்கள் வரையான சிறைத் தண்டனையை விதிப்பதற்கான ஏற்பாடுகளை இச் சட்டம் கொண்டுள்ளது என சட்டமா அதிபர் கிரிஸ்டியன் போர்டர் தெரிவித்தார்.
-Vidivelli