புத்தளம் அறுவாக்காடு குப்பை திட்டத்தை எதிர்ப்பவர்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்
அடிபணியமாட்டேன் என்கிறார் சம்பிக்க
புத்தளம் அறுவாக்காடு பகுதியில் நிறுவப்படும் கொழும்பு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்துக்கு தெரிவிக்கப்படும் எதிர்ப்பின் பின்னணியில் அரசியலே இருக்கிறது. தங்கள் அரசியல் சுயநலம் கருதிய அரசியல்வாதிகள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள். அரசியல் ரீதியான எதிர்ப்புப்போராட்டங்களுக்கு நான் அடிபணியப் போவதில்லை. அறுவாக்காடு குப்பைத் திட்டம் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆராய்ந்து இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அறுவாக்காடு குப்பைத் திட்டம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவித்துள்ளதாவது;
தற்போது அறுவாக்காடு குப்பை முகாமைத்துவத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டு விட்டது. மார்ச் 16 ஆம் திகதியிலிருந்து எவருக்கும் குப்பைகளை இங்கு கையளிக்க முடியும். குப்பைப் பிரச்சினை எனதோ புத்தளத்து மக்களினதோ அமைச்சர் ரிசாத் பதியுதீனினதோ பிரச்சினை அல்ல. இதுவோர் தேசிய பிரச்சினையாகும். சூழலுக்கு பாதிப்பற்ற வகையிலேயே இங்கு குப்பை முகாமைத்துவம் செய்யப்படவுள்ளது. அந்த வகையிலேயே இந்தத் திட்டம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதியாகக் கூறுகிறேன்.
கொழும்பு மாநகரசபை உட்பட ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்கள் தங்களது குப்பைகளுக்கு என்ன செய்வது என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும். ஏனையவர்களின் குப்பைகளைச் சுமப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. அவர்கள் குப்பை முகாமைத்துவம் செய்யாது உறங்கிக்கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அறுவாக்காடு குப்பைத் திட்டத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு மறைமுகமாக உதவிக்கொண்டிருக்கிறார்கள். கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மாளிகாவத்தையிலுள்ள மக்கள் அழைத்துவரப்பட்டு ஈடுபடுத்தப்பட்டார்கள்.
சூழலியலாளர்களின் ஆய்வுக்குப்பின்பே குப்பை முகாமைத்துவத் திட்டத்துக்கு நாம் அறுவாக்காட்டை தேர்ந்தெடுத்தோம். நாட்டிலுள்ள உயர்நிலையிலுள்ள 16 சூழலியலாளர்களே இந்த இடத்தைத் தெரிவு செய்தார்கள். நாம் இரு ஆய்வுகளை நடத்தினோம். 17 விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தினோம். குப்பை முகாமைத்துவத் திட்டம் புத்தளத்தில் இருப்பதாக கிளீன் புத்தளம் அமைப்பு தெரிவித்தாலும் புத்தளத்திலுள்ள 13 பிரதேச சபைகளின் கீழ் குப்பை முகாமைத்துவத்திட்டம் இல்லை.
கொழும்பு பகுதியிலிருந்து குப்பைகளை எடுத்துச்செல்வதற்கு எதிர்வரும் டிசம்பர் மாதத்திலிருந்து புகையிரதமும் தயார் நிலையில் இருக்கும். இதை நடைமுறைப்படுத்துவதா இல்லையா? என்பதை ஜனாதிபதி, பிரதமர் ஆராய்ந்து தீர்மானிக்க வேண்டும். நான் எனது கடமையைச் செய்து விட்டேன். அடிப்படைவாத அரசியல் அச்சுறுத்தல்களுக்கு நான் அடிபணியப்போவதில்லை. எதிர்கால பரம்பரை மீது அக்கறையற்ற சுயநலவாத அரசியல்வாதிகள் தாம் விரும்பியவாறு செயற்படுவதற்கு இடமளிக்க முடியாது.
இன்று எவருக்கும் குப்பைகளை கையளிக்கக்கூடிய இடமொன்று நிர்மாணிக்கப் பட்டுள்ளமை குறித்து நாட்டு மக்கள் பெருமைப்படவேண்டும் என்றார்.
-Vidivelli