தனியார் சட்ட திருத்த விவகாரம்: முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அக்கறையின்றி இருக்கிறார்கள்
வை.எம்.எம்.ஏ கவலை தெரிவிப்பு
முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் தலைவர் முன்னாள் நீதியரசர் சலீம் மர்சூப், நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளித்த அறிக்கையை ஆராய்ந்து இறுதித்தீர்வுக்கு வரும்படி அமைச்சர் தலதா அத்துகோரள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்விவகாரத்தில் அக்கறையின்றி இருப்பதாக தெரிவித்துள்ள வை.எம்.எம்.ஏ. அமைப்பு உடனடியாக இதுபற்றி ஆராய்ந்து தீர்வுக்கு வரும்படி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதியமைச்சர் தலதா அத்துகோரளவிடம் கையளிக்கப்பட்ட அறிக்கை, குழு உறுப்பினர்கள் அனைவரும் ஓர் இணக்கப்பாட்டில் அல்லாது முரண்பட்ட வகையில் சிபாரிசுகள் கையளிக்கப்பட்டிருப்பதால் வை.எம்.எம்.ஏ. குழு உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடி இரு தரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையிலான சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையொன்றினை நீதியமைச்சிடம் வை.எம்.எம்.ஏ. சமர்ப்பித்திருப்ப தாகவும் வை.எம்.எம்.ஏ. யின் தேசிய பொதுச்செயலாளர் சஹீட் எம். ரிஸ்மி ‘விடிவெ ள்ளி’ க்குத் தெரிவித்தார்.
குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற நீதியரசர் சலீம் மர்சூப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா ஆகியோரை நேரில் சந்தித்து கலந்துரையாடியதன் பின்பே வை.எம்.எம்.ஏ. ஒரு நடுநிலையான அறிக்கையைத் தயாரித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
10 வருட காலமாகியும் முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத் திருத்தங்கள் தொடர்ந்தும் இழுபறி நிலையில் இருக்கின்றது. இது தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் அக்கறையின்றி இருக்கிறார்கள். அதனால், அவர்களை இது விடயத்தில் விரைந்து செயற்படுமாறு வை.எம்.எம்.ஏ கோரியுள்ளது.
நீதியமைச்சர் இறுதித்தீர்மானம் எடுக்கும் பொறுப்பினை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கியுள்ளார். அதனால் அவர்கள் தொடர்ந்தும் தாமதிக்கக் கூடாது என்றார்.
இதேவேளை, முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்வதற்கு காலதாமதம் ஏற்படுவதற்கு நான் காரணமல்ல. முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்டத்தில் திருத்தங்களைச் சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு அங்கத்தவர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொண்டு இரு வேறான சிபாரிசுகளை முன்வைத்திருப்பதே தாமதத்திற்குக் காரணமாகும் என்று நீதியமைச்சர் தலதா அத்துகோரள பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமிடம் வினவியபோது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் விவாக, விவாகரத்துச் சட்ட திருத்த சிபாரிசுகள் குறித்து ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளும் பொறுப்பினை அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஏற்றிருக்கிறார். விரைவில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி இது தொடர்பில் ஆராய்வோம் என்றார்.
-Vidivelli