தமிழ், முஸ்லிம் வாக்குகளால் தெரிவான மைத்திரி கோத்தா அணியுடன் சேரலாமா?
அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வி
பௌத்த சிங்கள வாக்குகளால் தாம் ஆட்சியமைப்போம் எனக் கூறும் கோத்தாபய அணியுடன் தமிழ், முஸ்லிம் மக்களின் முழுமையான ஆதரவில் வெற்றிபெற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எவ்வாறு கைகோர்க்க முடியும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன கேள்வியெழுப்பினார். பொதுஜன முன்னணியினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தலைமைத்துவமாக கொண்டு முன்னோக்கி செல்ல தயாராக இல்லை. இந்த காலப்பகுதியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியலை ஓரங்கட்டி மீண்டும் ராஜபக் ஷ யுகத்தை உருவாக்கவே பொதுஜன பெரமுனவினர் தீர்மானித்துள்ளனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுடன் நாம் ஒன்றிணைந்து ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் ஆட்சியை உருவாக்கினோம். ஜனநாயக ரீதியில் சரியாக ஆரம்பிக்கப்பட்ட ஆட்சியில் இடைநடுவே சில முரண்பாடுகள் ஏற்பட்டு ஜனாதிபதி இணையக்கூடாத கூட்டணியில் இணைந்து இன்று அவர் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இந்த முரண்பாடுகள் அனைத்திற்கும் ஜனாதிபதியின் தவறான புரிதலே காரணமாகும். இதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட பொதுஜன முன்னணியினர் இன்று அவர்களின் கரம் ஓங்கியுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஓரங்கட்ட தீர்மானித்துள்ளனர்.
பொதுஜன பெரமுனவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கே தாக்குதல் நடத்துகின்றனர். ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக் ஷ என்பதை கூறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை முழுமையாக வீழ்த்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். இவ்வாறான நிலையில் ஐக்கிய தேசிய கட்சியாக நாமும் ஜனாதிபதியை தாக்க தயாராக இல்லை. அவர் நெருக்கடியில் உள்ளார், எனவே அவருக்கு கைகொடுக்க நாம் தயாராகவே உள்ளோம். எம்முடன் ஜனாதிபதியை இணைத்துக்கொண்டு பயணிக்க நாம் தயார். ஜனாதிபதி மீண்டும் எம்முடன் இணைய வேண்டும். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பலர் தயாராக உள்ளனர். எனவே இப்போது தீர்மானம் ஜனாதிபதியின் கைகளில் உள்ளது.
அதேபோல் கோத்தாபய ராஜபக் ஷ தான் சிங்கள பெளத்த வாக்குகளில் ஜனாதிபதியாவேன் என இப்போது தெளிவாக கூறுகின்றார். அப்படியென்றால் இந்த நாட்டில் தமிழ் பேசும் மக்களின் வாக்குகள், அவர்களின் உரிமைகள் என்னவாகும். இவ்வாறு கூறும்போதே அவர் தமிழ் மக்களினால் புறக்கணிக்கப்படுகின்றார். அவ்வாறான ஒரு அணியில் ஜனாதிபதி எவ்வாறு தொடர்ந்தும் இணைந்து செயற்பட முடியும். தாம் சிங்கள வாக்குகளை விடவும் முழுமையான தமிழ் முஸ்லிம் வாக்குகளை பெற்றவர் என்பதை ஜனாதிபதி ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. அவர் எம்முடன் இணைந்தால் அவருடன் பயணிக்க நாம் தயார். இந்த ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதை நாம் கவனத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றோம். இந்த ஆட்சியை காப்பாற்ற வேண்டியது எம் அனைவரதும் கடமையாகும் என்றார்.
-Vidivelli