என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள். பாராளுமன்றத்தில் தவறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
அளுபோமுல்ல எஸ்.மஹிந்த வித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில்,
என்னையும், எனது குடும்பத்தவர்களையும் பழிவாங்கும் நோக்கிலேயே 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை கொண்டுவந்து, ஜனாதிபதியையும் ஏமாற்றி அதனை நிறைவேற்றிக் கொண்டார்கள். அதனூடாக பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்குக் காணப்பட்ட உரிமையையும் பறித்துக்கொண்டார்கள். பாராளுமன்றத்தில் தவறான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதற்கு அமைவாகவே நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்.
அதேபோன்று தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தின் முக்கிய பண்புகள் எவையெனெ அறியாத ஓர் அரசாங்கமாகும். மாகாணசபைத் தேர்தல்களை இன்னும் எத்தனை வருடங்களில் நடத்துவார்கள் எனத் தெரியவில்லை. அந்தவகையில் மக்களின் வாக்களிக்கும் உரிமைக்கும் தடையேற்படுத்தி இருக்கின்றார்கள். பிறர் தவறிழைப்பதாகக் குற்றஞ்சாட்டியவாறு இந்த அரசாங்கமே தவறிழைக்கின்றது.
அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டத்தில் ஒரு பகுதியை எமது இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோற்கடித்துள்ளனர். நாங்கள் இந்த அரசாங்கத்தைத் தோற்கடித்த இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கு முன்னர் 52 நாட்களுக்கு இவ்வரசாங்கத்தை பதவியிலிருந்து இறக்கியிருந்தோம். அதுவும் எம்முடைய வெற்றியென்றே கூறவேண்டும்.
உள்ளூராட்சி மன்றங்கள் தான் மக்களுக்கு மிகவும் நெருக்கமான கட்டமைப்பாகும். கிராமமொன்றின் அனைத்து வேலைத்திட்டங்களும் அதனையே சார்ந்திருக்கும். எம்முடைய ஆட்சிக்காலத்தில் பெருமளவான நிதியை பிரதேச சபைகளுக்குப் பெற்றுக்கொடுத்தோம். கிராம அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கு முக்கியத்துவம் வழங்கினோம் என்றும் சுட்டிக்காட்டினார்.
-Vidivelli