வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற முறையின் இறுதி அடையாளமே ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்ததினம் மார்ச் 24 ஆம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது கொழும்பில் பிறந்த போதும் விக்கிரமசிங்க பரம்பரை கதையானது காலி, பத்தேகம பிரதேசத்திலேயே முதலில் எழுதப்படுகின்றது. அக்கதையினை அறிவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் பிறப்பு தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தமாகும். அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். ரணில் விக்கிரமசிங்க என நாட்டு மக்களிடத்தில் பிரசித்தி பெற்றிருப்பினும் அவரது பெயரில் இன்னுமொரு பகுதியும் உள்ளது. அவரது முழுப்பெயர் ரணில் ஸ்ரீயான் விக்கிரமசிங்க ஆகும். ரணில், குடும்பத்தில் இரண்டாம் பிள்ளை ஆவார். மூத்த பிள்ளை ஷான் விக்கிரமசிங்க ஆவார். இலங்கைக்கு தொலைக்காட்சி அலைவரிசையொன்றை அறிமுகம் செய்தவர் ஷான்.
- அருண சதரசிங்க
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 70 ஆவது பிறந்ததினம் மார்ச் 24 ஆம் திகதியாகும். அதனையொட்டி இக்கட்டுரை பிரசுரமாகிறது
கொழும்பில் பிறந்த போதும் விக்கிரமசிங்க பரம்பரை கதையானது காலி, பத்தேகம பிரதேசத்திலேயே முதலில் எழுதப்படுகின்றது. அக்கதையினை அறிவதற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவின் பிறப்பு தொடர்பில் கவனம் செலுத்துவது பொருத்தமாகும். அவர் 1949 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி பிறந்தார். ரணில் விக்கிரமசிங்க என நாட்டு மக்களிடத்தில் பிரசித்தி பெற்றிருப்பினும் அவரது பெயரில் இன்னுமொரு பகுதியும் உள்ளது. அவரது முழுப்பெயர் ரணில் ஸ்ரீயான் விக்கிரமசிங்க ஆகும். ரணில், குடும்பத்தில் இரண்டாம் பிள்ளை ஆவார். மூத்த பிள்ளை ஷான் விக்கிரமசிங்க ஆவார். இலங்கைக்கு தொலைக்காட்சி அலைவரிசையொன்றை அறிமுகம் செய்தவர் ஷான். தற்போது அரச தொலைக்காட்சி அலைவரிசையாக உள்ள சுயாதீன ரூபவாஹினி சேவையினை அறிமுகப்படுத்திய பெருமை அவரை சாரும். தற்போது அவர் டி.என்.எல். அலைவரிசையின் பிரதானியாவார். விராஜ், சன்ன மற்றும் ஷானிகா ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவின் இளம் சகோதர, சகோதரிகளாவர்.
ஜே.ஆர். ஜயவர்தன கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டவுடன் எஸ்மண்ட் விக்கிரமசிங்கவினை அரசியலில் ஈடுபடுமாறு அழைப்பு விடுத்தார். எனினும் எஸ்மண்ட் வழமைபோலவே அந்த யோசனையினை மறுத்தார்.
எனினும், ஜே.ஆர். எவ்வாறாவது விக்கிரமசிங்க பரம்பரையில் ஒருவர் அரசியலுக்கு வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார். இறுதியில் ஜே.ஆர்., ரணில் விக்கிரமசிங்கவை தெரிவு செய்தார்.
ரணிலுக்கு எழுத்தினை போதித்தவர் விஜயவர்தன பரம்பரையினரினால் உருவாக்கப்பட்ட விகாரையான ஹுணுப்பிட்டிய கங்காராமய பிரதான தேரர் தேவுந்தர வாசிஸ்ஸர ஆவார். தற்போதுகூட ரணில் விக்கிரமசிங்க கங்காராமய விகாரையினதும், களனி ரஜமகா விகாரையினதும் பரித்தியாக சபையின் தலைவராவார்.
ஏனெனில் களனி விகாரையும், கங்காராமய விகாரையும் விஜயவர்தன குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமான விகாரைகளாக காணப்பட்டமையாகும். ரணில் பௌத்த மதத்தினை கற்றுக் கொண்டது பம்பலப்பிட்டிய வஜிராராமயிலாகும். பௌத்த மதத்தினை மாத்திரமல்லாமல் ரணில் சிறுபராயத்திலிருந்தே நடனம், சங்கீதத்தினையும் கற்றுக் கொண்டார். அவரின் நடன ஆசிரியர் ஸ்ரீ ஜயனா ஆவார். ரணிலுடன் ஜயனாவின் நடன வகுப்பில் கற்ற அவரின் சமகால நண்பியாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க திகழ்ந்தார். அக்காலத்தில் அவர் நடனத்துக்கு மாத்திரமல்லாது பியானோ வாசிப்பதற்கும் திறமையானவராகக் காணப்பட்டார். தமது பரம்பரையில் அனைவரையும் போல இவரும் கொழும்பு ரோயல் கல்லூரியில் தமது கல்வியினை தொடர்ந்தார்.
ரோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்திருந்தார்.
1977ஆம் ஆண்டு தொடக்கம் தொடர்ச்சியாக இந்நாட்டின் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பெருமையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமே உரியதாகும்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், பிரதமர் என்று அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்து அரசியலில் இனி இல்லையென்ற அனுபவத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கையில் ஐந்து தடவைகள் பிரதமராக பதவி வகித்த பெருமையும் அவருக்கே உரியதாகும்.
இலங்கையின் மிகச் சிறந்த அரசியல் தலைவராக, துறை தேர்ந்த ராஜதந்திரியாக, உலகின் கீர்த்திமிகு ஜனநாயக அரசியல்வாதிகளில் ஒருவராகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்தின் மத்தியில் புகழ்பெற்று விளங்குகிறார்.
தனது பல்கலைக்கழக நாட்களிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணியில் பணியாற்றி வந்த அவர், 1975 ஆம் ஆண்டு பியகம தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ரணில் முதலில் களனி தொகுதிக்கே அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். களனி மற்றும் தொம்பே ஆகிய தொகுதிகள் இரண்டும் ஒன்றாக சேர்த்து பியகம தொகுதி உருவாக்கப்பட்ட போது, ஜே.ஆர். ரணிலுக்கு பியகம தொகுதியினை ஒப்படைத்தார். அது 1976 ஆம் ஆண்டிலாகும். 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பியகம தொகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் டேவிட் ஹபன்கமவை தோல்வியடையச் செய்து வெற்றிபெற்றார்.
அந்த தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 22,045 வாக்குகளை பெற்றார். ஜே.ஆர். ஜயவர்தன தனது முதலாவது அமைச்சரவையினை நியமிக்கும்போது தனது மருமகனை மறந்துவிடவில்லை.
அந்தக் காலகட்டத்தில் வயதில் மிகவும் குறைந்த அரசியல்வாதியாக முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தனவின் தலைமையிலான அரசாங்கத்தில் வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். அவரது அசாதாரணமான மதிநுட்பம் மற்றும் பணியாற்றுவதற்கான தனித்துவமிக்க மன ஆற்றல் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு பின்னர், அவர் இளைஞர் விவகார மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
அதன் பின்னர் கல்வி அமைச்சராகவும் பணியாற்றி வந்த ரணில் விக்கிரமசிங்க, அரசியல் விவகாரங்களைப் பற்றிய ஆழ்ந்த அறிவு பெற்றவர் என்ற வகையில், கடந்த 1989 ஆம் ஆண்டில் ஜனாதிபதி பிரேமதாச தலைமையிலான அரசாங்கத்தில் சபை முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவை மட்டுமன்றி, அவர் கைத்தொழில் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சராகவும் பணியாற்றியமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த 1977 தொடக்கம் 1994 வரையிலான 17 வருடகாலப் பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சி தொடர்நதும் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருந்த வேளையில் ஆளுமையுள்ள இளம் அரசியல்வாதியென்ற வகையில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் அபிவிருத்தியில் காத்திரமான தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார்.
அரசியல் வாழ்வில் பெற்றுக் கொண்ட அனைத்துப் பதவிகளும், அமைச்சுக்களும் இளம் வயதிலேயே உரித்தாக்கிக் கொள்ளும் அளவிற்கு அதிஷ்டம் பெற்ற ரணில் விக்கிரமசிங்கவுக்கு தம் துணைவியார் கிடைத்ததும் ஓர் அதிஷ்டமே. ரணில் திருமண பந்தத்தில் இணைந்து கொள்வது அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலப்பகுதியிலாகும். ரணிலின் மனைவியான மைத்திரி விக்கிரமசிங்க களனி பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பிரிவில் பேராசிரியராவார்.
ரணில் விக்கிரமசிங்க 70 ஆவது பிறந்த தினம் மார்ச் மாதம் 24ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. 1994 இலிருந்து ஒரு தேர்தலினை தவிர (2001) கடைசியாக நடந்த தேர்தலில் வெற்றி பெறும் வரையில் நடந்த ஏனைய அனைத்து தேர்தல்களிலும் அவர் தலைமை தாங்கிய ஐக்கிய தேசிய கட்சி தோல்வியினைத் தழுவியது. இந்த நடைமுறையானது தோல்வியிலும் அயராது தொடர்ந்து முன்னோக்கிச் சென்ற வின்ஸ்டன் சேர்ச்சில் பின்பற்றிய நடைமுறையாகும். ரணில் விக்கிரமசிங்க பெற்றுக் கொண்ட வெற்றியானது, இரு தசாப்த காலம் அவர் மேற்கொண்ட உழைப்பின் பிரதிபலனாலேயே அவருக்கு கிடைத்தது. அக்காலப்பகுதியில் அவர் வளைவுகள் நிறைந்த பாதையிலேயே பயணித்தார். இறுதியில் அனைத்து சவால்களையும் கடந்து இலங்கையின் பிரதமராக நான்காவது முறையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.
இதற்கு முன்பு அந்த சாதனையினைப் படைத்திருந்தவர் டட்லி சேனாநாயக்க . டட்லி சேனாநாயக்கவினை போன்று ரணில் விக்கிரமசிங்கவும் அரசியல் உலகத்தில் கனவானாகவே அழைக்கப்படுகின்றார். வெஸ்மினிஸ்டர் பாராளுமன்ற முறையின் இலங்கையின் இறுதி அடையாளமாக ரணில் விக்கிரமசிங்க நோக்கப்படுகின்றார்.
பாடசாலைக் கல்வி மற்றும் கல்வி நிருவாக சேவை ஆகியவற்றின் விசேட பண்புமிக்க முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு அவர் 1980களில் ஆரம்பித்திருந்த தீவிர மாற்றுத் தன்மை கொண்ட கல்விசார் சீர்திருத்தங்களை நாட்டில் அறிமுகம் செய்துள்ளார்.
இளைஞர் கழகங்கள் மற்றும் இளைஞர் முகாம்கள் ஊடாக ஆக்கத்திறன், ஊக்குவிப்புத்தன்மை மற்றும் திறன் அபிவிருத்தி கொண்ட வேலைத் திட்டங்களுடன் இலங்கையில் சக்திபடைத்த இளைஞர் பரம்பரையொன்றை உருவாக்கும் முயற்சிகளை ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்தார்.
அதன் பின்னர், கைத்தொழில், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் என்ற வகையில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் பேட்டைகளை நிறுவுதல் ஆகியவை ஊடாக கிராமப்புறங்களில் கைத்தொழில் ஊக்குவிப்புகளில் கூடிய கவனம் செலுத்தும் ஒருவராக அவர் செயற்பட்டார்.
பியகம தேர்தல் தொகுதிக்கான பாராளுமன்றப் பிரதிநிதி என்ற வகையில், அவர் தனது தொகுதிக்கு பல்வேறு அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டு தனக்கு வாக்களித்த மக்களின் வரவேற்பை தொடர்ந்தும் தக்கவைத்து வருகின்றார்.
அத்துடன் பல்லாயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளுக்கு கணிசமான அளவிலான கைத்தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்களை வழங்கும் வகையில், அவர் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தை உருவாக்கியமை தமக்கு வாக்களித்த மக்களுக்கு செய்த பெரும் சேவையாக இன்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
டட்லி சேனநாயக்க மற்றும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோர் மூன்று தடவைகள் மாத்திரமே பிரதமர்களாக இருந்துள்ள அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க நாட்டின் வரலாற்றில் ஐந்து தடவைகள் (மே 1993, டிசம்பர் 2001, ஜனவரி 2015 மற்றும் ஓகஸ்ட் 2015, 2018 டிசம்பர்) பிரதமராகப் பதவியேற்றவர் என்ற பெருமையைத் தனதாக்கிக் கொண்டுள்ளார்.
மேலும், மூன்று வேறுபட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளின் கீழும் தனது பணியைச் செவ்வனே செய்துள்ள அரசியல் அனுபவசாலி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. முதலாவதாக டி. பீ. விஜேதுங்க, அடுத்து சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றார்.
ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவி வகித்த ஒவ்வொரு காலகட்டத்திலும் நாட்டிற்கு மகத்தான சேவையொன்றையே வழங்கியுள்ளார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையிலான நல்லாட்சி (கூட்டாட்சி) அரசாங்கத்திலும் முக்கிய பல அம்சங்களில் விசேடமாக தங்களின் தேர்தல் கால வாக்குறுதிகளுக்கிணங்க அரசியலமைப்பு சீர்திருத்த விடயத்தில் அவர் பிரதான வகிபாகமொன்றைக் கொண்டுள்ளார். அத்துடன் மொத்தத்தில் அவர் நாட்டின் பொருளாதாரம், கல்வி, வெளிவிவகாரம் மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளையும் துணிச்சலுடன் செய்து வந்தார்.
இன்று ஜனநாயக ஆட்சியினை நாட்டில் நிலைநாட்டிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையில் ஜனநாயக வெற்றிக்காக தன்னையே அவர் அர்ப்பணித்தார். பாராளுமன்ற ஜனநாயகத்தினைப் பாதுகாப்பதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்றும் பேசத்தக்கது. குறித்த நடவடிக்கைகளின் விளைவினால் அவர் ஜனநாயகத்தின் யுகபுருஷர் என்றும் போற்றப்படுகின்றார்.
இந்த நாட்டு வரலாற்றில் சாத்தியப்படாத ஓர் அரசியல் வரலாற்றை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்து சாதித்து வருகின்றார். நாட்டிலுள்ள இரு வேறுபட்ட முரணான கொள்கைகளையுடைய இரு பெரும் கட்சிகளை ஒன்றாக ஓரணியில் இணைத்து அரசாங்கம் அமைந்த ஆளுமைக்கு, ரணில் விக்கிரமசிங்கவே சொந்தக்காரன் என்றால் மிகையாகாது.
பல முரண்பட்ட சிந்தனைகளை அங்கீகரித்து, அனுசரித்து நடக்கும் அவரது அரசியல் போக்கு, எதிர்த்தரப்பு சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளையும் கவர்ந்துள்ளமையை நடைமுறை அரசியல் நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
அத்துடன், இவரது 40 வருட அரசியல் வாழ்க்கையில் இந்நாட்டிலுள்ள சிறுபான்மை சமூகத்துடன் தொடர்ந்தும் நல்லுறவைப் பேணி வந்துள்ளமையை வரலாற்றுத் தகவல்கள் எடுத்துக் காட்டுகின்றன.
சிறுபான்மை மக்களின் இருப்பு, அவர்களது உரிமைகள், அவர்களின் அபிலாஷைகள் என்பவற்றுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்த ஒரு சிறந்த அரசியல்வாதியாக அவர் திகழ்கின்றார்.
நாட்டில் இனவாதிகளின் நடவடிக்கைகள் உக்கிரமடைந்த போதெல்லாம், அவற்றை மட்டுப்படுத்தி மதங்களுக்கிடையிலான நல்லுணர்வுக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பது தொடர்பில், அவசியமாயின் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தவும், பாராளுமன்றத்தில் அதற்காக குரல் எழுப்பவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எப்போதும் பின் நின்றதில்லையென்றே கூறவேண்டும்.
ஏதேனும் ஒரு மதத்திற்கு அல்லது இனத்திற்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோருக்கு எதிராக, சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியான ஒரு நிலைப்பாட்டில் நல்லாட்சி அரசாங்கத்திலும்கூட இவர் செயற்பட்டார்.
-Vidivelli