வில்பத்து வன பாதுகாப்புப் பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடம் பெறுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை. வில்பத்து குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு 2017 இல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட வேண்டும். பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் ஆணைக்குழுவின் அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை. இதனாலேயே பல்வேறு சந்தேகங்கள் தொடர்கின்றன என கைத்தொழில், வர்த்தகம் மற்றும் நீண்டகாலமாக இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றல் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
வில்பத்து வன பாதுகாப்பு பகுதி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் ரிசாத் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் திகதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தபோது அங்கிருந்து மாவில்லு பாதுகாக்கப்பட்ட வன பிரதேசம் என 40 ஆயிரத்து 30 ஹெக்டயர் நிலத்தினை வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிட்டார். இந்த நிலப்பரப்பில் மக்கள் குடியேற்ற நிலங்கள், மேய்ச்சல் நிலம், வயற்காணிகள் உள்ளடங்கியிருந்தன. மாவில்லு, வேப்பல், கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, விலாத்திக்குளம் ஆகிய பகுதிகள் இதில் உள்ளடங்கியிருந்தன. அதனால் அப்பகுதிமக்கள் மறிச்சுக்கட்டி பள்ளிவாசல் முன்னால் 43 நாட்கள் சத்தியாக்கிரக போராட்டம் நடத்தினர்.
சத்தியாக்கிரகத்தின் 42 ஆவது நாளில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இது தொடர்பான கலந்துரையாடலொன்று இடம் பெற்றது. இதில் நான் உட்பட அன்றைய அமைச்சர் பைஸர் முஸ்தபா, அசாத்சாலி, முஸ்லிம் கவுன்ஸில் மற்றும் வை.எம்.எம்.ஏ உட்பட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்தச்சந்திப்பின் போதே இவ்விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியினால் சுயாதீன ஆணைக்குழுவொன்று நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டு ஆணைக்குழுவும் நியமிக்கப்பட்டது. ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு 3 மாத காலத்தில் அறிக்கையையும் சமர்ப்பித்தது. ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவில்லை. பல தடவைகள் அறிக்கையை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரை வெளியிடப்படாமலிருப்பதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து அறிக்கையை வெளியிடுமாறு கோரியும் பலன் ஏற்படவில்லை.
இந்த ஆணைக்குழுவை பௌத்த குரு ஒருவரின் தலைமையிலான குழுவொன்று அச்சுறுத்தியும் வந்தது. தற்போது மீண்டும் வில்பத்து வன பிரதேசம் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதாக பொய்க் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முடிவு காணும் வகையில் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த சுயாதீன ஆணைக்குழுவின் அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என்றார்.
-Vidivelli