கண்டி – திகன வன்முறை: நஷ்டஈடுகள் வழங்க அமைச்சரவை அனுமதி
ஏப்ரலின் பின் கையளிக்க பிரதமர் உத்தரவு என்கிறார் ஹலீம்
கடந்த வருடம் மார்ச் மாதம் கண்டி– திகனப் பகுதிகளில் இடம்பெற்ற வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட அனைத்து சொத்துகளுக்குமான நஷ்டஈடுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நஷ்டஈடுகள் அனைத்தையும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குப் பின்பு வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார் என அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தெரிவித்தார்.
கண்டி– திகன வன்செயல்கள் நஷ்டஈடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
கண்டி – திகன வன்செயல்களினால் பாதிக்கப்பட்ட சொத்துகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் தாமதமில்லாமல் நஷ்டஈடு வழங்கப்படவேண்டுமென விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரான பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அழுத்தங்களைப் பிரயோகித்ததன் காரணமாகவே குறிப்பிட்ட நஷ்டஈடுகள் வழங்குவது துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது 174 சொத்துகளுக்கு நஷ்டஈடுகள் வழங்கப்படவேண்டியுள்ளது. இதற்கென 170 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது. கண்டி – திகன வன்செயல்களினால் 546 சொத்துகள் சேதமாக்கப்பட்டன. மற்றும் எரியூட்டப்பட்டன. இவற்றில் 372 சொத்துகளுக்கு நஷ்டஈடாக ஏற்கனவே 19 கோடி 48 இலட்சத்து 45 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டு விட்டது என்றார்.
நஷ்டஈடுகள் தொடர்பில் புனர்வாழ்வு அதிகார சபையின் மேலதிகப் பணிப்பாளர் எஸ்.எம். பதுர்தீனைத் தொடர்புகொண்டு வினவியபோது பாதிக்கப்பட்ட மேலும் 16 சொத்துகளுக்கான மதிப்பீடுகள் மேற்கொள்வதில் சில சிக்கல்கள் உருவானதால் அதற்கென குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாகக் கூறப்படும் சொத்துக்களின் பெறுமதியை மதிப்பீடு செய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் சிபாரிசுகளுக்கு அமைய அவற்றுக்கு நஷ்டஈடு வழங்கப்படும் என்றார்.
-Vidivelli