சிட்னியில் வாழும் துருக்கிய சமூகத்தினருக்குச் சொந்தமான பள்ளிவாசல்களுக்கு அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் பிரதித் தலைவி கடந்த வெள்ளிக்கிழமை விஜயம் செய்தார்.
இன்று நான் ரெட்பேர்ன் மற்றும் எர்ஸ்க்கின்வில்லே ஆகிய இடங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு விஜயம் செய்தேன். தலைவர்களையும் சமூக உறுப்பினர்களையும் சந்தித்தேன். முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அனைத்து மதங்களைச் சார்ந்தவர்களும் ஒன்றிணைந்து நிற்கின்றனர் என தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவி தன்யா பிலிப்பசேக் வெறுப்புணர்வுக்கு எதிராக அதனை வெற்றி கொள்வதற்கு அன்பையும் ஒற்றுமையையும் உறுதிப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
துருக்கிய சமய விவகார நிறைவேற்று சபையின் கீழ் பராமரிக்கப்படும் சிட்னியிலுள்ள இரண்டாவது பழைய பெரிய பள்ளிவாசலான ரெட்பேர்ன் பள்ளிவாசலுக்கு தன்யா பிலிப்பசேக் விஜயம் செய்தபோது அவுஸ்திரேலிய துருக்கிய ஆதரவுக் கூட்டமைப்பின் பணிப்பாளரான ஹாகென் எவசேக்கும் இணைந்துகொண்டார். இதன்போது எதிர்க்கட்சித் தலைவி, ரெட்பேர்ன் இஸ்லாமிய சமூகத்தின் தலைவர் அஹ்மெட் சோலக்கையும் அவர் சந்தித்தார்.
தன்யா பிலிப்பசேக் அவுஸ்திரேலியாவின் கல்வி மற்றும் பயிற்சி நிழல் அமைச்சராகவும், அதேபோன்று பெண்களுக்கான நிழல் அமைச்சராகவும் செயற்படுகின்றார்.
நியூசிலாந்தில் கடந்த வார பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 50 பேர் உயிரிழந்த நிலையில், பள்ளிவாசல்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அரசாங்கம் அதியுச்ச ஆதரவை வழங்க வேண்டும் என தன்யா பிலிப்பசேக் தெரிவித்தார்.
அடையாளம் காணப்பட்ட பயங்கரவாதி அவுஸ்திரேலியாவில் பிறந்தவராவார். இவர் கிரைஸ்ட்சேர்ச்சில் இரு பள்ளிவாசல்களில் மேற்கொண்ட தாக்குதலில் நான்கு சிறுவர்கள் உட்பட வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டிருந்த குறைந்து ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்.
-Vidivelli