தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக ஒய்வுபெற்ற இலங்கை நிர்வாகசேவை அதிகாரியான ஏ.எம்.நஹியா அரசியலமைப்பு பேரவையின் விதந்துரையின்பேரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்த நியமனம் மார்ச் 11 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும்வகையில் வழங்கப்பட்டிருக்கிறது.
பொதுநிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் எல்லை நிர்ணயக்குழுவிலும் உள்ளூராட்சி, மாகாணசபைகள் அமைச்சின் எல்லை நிர்ணயக்குழுவிலும் ஏற்கெனவே உறுப்பினராக பணியாற்றிய நஹியா எல்லை நிர்ணய விவகாரங்களில் மிகுந்த அனுபவமுடையவர். அரசசேவையில் பணியாற்றிய காலத்தில் புனர்வாழ்வு பணிப்பாளர் நாயகமாகவும் மீனவர் வீடமைப்பு மற்றும் மீனவர் நலன் பணிப்பாளர் நாயகமாகவும் தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சின் நிபுணத்துவ ஆலோசகராகவும் அதற்கு முதல் கொழும்பு ஸாஹிரா கல்லூரி உப அதிபராகவும் இந்து சமய கலாசார இராஜாங்க அமைச்சின் தமிழ் அலுவல்கள் உதவிப்பணிப்பாளராகவும் நஹியா முக்கிய பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் தற்போதைய பொருளாளரான இவர் இலங்கை முஸ்லிம் கல்விச்சேவை சகாயநிதியின் நம்பிக்கையாளர் சபையினதும் அதன்நிருவாக சபையினதும் அங்கத்தவராகவும் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் பவுண்டேசனின் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். அத்துடன் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி நிதியம் (CDDF) இன் முக்கியஸ்தராகவும் உள்ளார். நஹியாவின் பணிகளைப் பாராட்டி கொழும்பு பல்கலைக்கழக பழைய மாணவர் சங்கம் கடந்த வருட இறுதியில் விருது வழங்கி கௌரவித்தது. இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தத்துவமாணிப் பட்டம் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-Vidivelli