வட இந்தியாவிலுள்ள வீடொன்றினுள் புகுந்த கும்பலொன்று பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என கூறியவாறு அங்கிருந்த முஸ்லிம் குடும்பத்தின் மீது ஹொக்கி விளையாட்டுக்கான தடிகளாலும் இரும்புக் கம்பிகளாலும் தாக்குதல் நடத்தியதாக கடந்த சனிக்கிழமை உள்ளூர் ஊடகங்களும் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை இரவு பொன்ஸியின் கீழுள்ள கிராமத்தில் கிரிக்கெட் விளையாடுவது தொடர்பில் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்போது 11 அங்கத்தவர்கள் கொண்ட குடும்பமொன்று காயமடைந்தது என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. 25 தொடக்கம் 30 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இரண்டு வயதுக் குழந்தை உட்பட இக் குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்கள், சிறுவர்கள் காயமடைந்தனர் என என்.டி.ரீ.யின் உள்ளூர் ஒளிபரப்பு தெரிவித்தது.
வடக்கு மாநிலமான ஹரியானாவில் குருகிராம் பகுதியில் பெரும்பாலான மக்கள் இந்துப் பண்டிகையான ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த வேளையில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உள்ளூர் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கைதுகளை மேற்கொண்டனர்.
ஆரம்பத்தில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறியது.
இதன் பின்னர் மேலும் ஆட்கள் திரட்டப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என குருகிராம் பொலிஸ் நிலைய பேச்சாளரான சுபாஸ் போக்கன் தெரிவித்தார். அவர்கள் முஸ்லிம் குடும்பத்தினர் வசித்த வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தம்மை பாகிஸ்தானுக்குச் செல்லுமாறு கூறியே தம்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர்.
-Vidivelli