கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு கோரி,கடந்த வெள்ளிக்கிழமை (22) புத்தளத்தில் கறுப்புக் கொடி போராட்டம் முன்னெடுத்த பொதுமக்கள் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்றிட்டத்தின் நிறைவு விழா வெள்ளிக்கிழமை புத்தளம் சேர்விஸ் வீதியிலுள்ள சக்தி விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது, குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள், ஜனாதிபதி கலந்துகொண்ட சக்தி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக செல்ல முற்பட்டபோதே ஆண்கள், பெண்கள் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர்.
“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” புத்தளம் மாவட்டத்துக்கான செயற்திட்டதின் நிறைவு விழா மற்றும் புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானம் மற்றும் கேட்போர் கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெள்ளிக்கிழமை புத்தளம் நகருக்கு விஜயம் செய்தார்.
கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டுமெனக் கோரி புத்தளத்தில் நீண்ட காலமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விடயத்தில் ஜனாதிபதியை நேரில் சந்தித்து கலந்துரையாடுவதற்கு சர்வமதகுழு மற்றும் ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பினருக்கு சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்குமாறு தொடர்ச்சியாக வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
எனினும், அந்தக் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதை கண்டித்தும், புத்தளத்திற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதியை சந்திப்பதற்கு சர்வமத குழு உள்ளிட்டோருக்கு சந்தர்ப்பத்தை பெற்றுக் கொடுக்குமாறும் கோரியே இந்த கறுப்புக் கொடி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
புத்தளம் தபால் நிலையத்திலிருந்து பேரணியாக சென்று, புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில், காலை 8.30 மணிக்கு ஒன்றுகூடிய மக்கள், குப்பைக்கு எதிரான பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களையும் ஏந்தியவாறு, குப்பைக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
இதன்போது, ஸ்மார்ட் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தை புத்தளம் பிரதேச செயலகத்தில் ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி வருகை தரவிருந்த பிரதேச செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது, அதனை பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
இதனால் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அங்கு பதற்றநிலை காணப்பட்டது. விஷேட அதிரடிப்படை, கலகம் தடுக்கும் பொலிஸாரும், நீர்த் தாரை பீச்சும் கவச வாகனமும் தயார் நிலையில் இருந்தன. அத்துடன், ஜனாதிபதி கலந்துகொள்ளவிருந்த அனைத்துப் பிரதேசங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
புத்தளம் பொலிஸார், இந்தப் போராட்டக்காரர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, புத்தளம் நீதிமன்றத்தினால் பெற்றுக்கொண்ட தடையுத்தரவை பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் வாசித்துக் காட்டினர். எனினும், குறித்த போராட்டம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் பிரதேச செயலகத்திற்கு செல்வதை பொலிஸார் தடுத்து நிறுத்திய போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்துசென்று புத்தளம் பஸ் நிலையத்திற்கு முன்பாக திறந்து வைக்கப்படவிருந்த விளையாட்டு மைதானம் வரை நடந்து சென்றனர்.
புத்தளம் நகர விளையாட்டு மைதானத்திற்கு அருகில் ஒன்று கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் குப்பைக்கு எதிரான சுலோகங்களை ஏந்தியவாறு, கோஷங்களையும் எழுப்பிக் கொண்டு கவனயீர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன்போது அங்கும் அமைதியின்மை ஏற்பட்டது. இதனால், குறித்த விளையாட்டு மைதானத்தை திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி கலந்துகொள்ளவிருந்த போதிலும் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையால், புத்தளம் நகரில் நிர்மாணிக்கப்பட்ட கேட்போர் கூடத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, பிரதான நிகழ்வு இடம்பெற்ற சக்தி விளையாட்டு மைதானத்திற்கு சென்றார்.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸ் உள்ளிட்டோர் குறித்த விளையாட்டு மைதானத்தை திறந்துவைத்தனர்.
இதன்போது, குப்பை பிரச்சினை தொடர்பில் சமயத் தலைவர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவொன்றுக்கு சக்தி விளையாட்டு மைதானத்தில் வைத்து ஐந்து நிமிடங்கள் ஜனாதிபதியை சந்திப்பதற்காக அனுமதி பெற்றுத் தருவதாக ஜனாதிபதி செயலக அதிகாரியொருவர் வாக்குறுதியளித்து, அந்த ஐவரையும் சக்தி விளையாட்டு மைதானத்திற்கு அழைத்துச் சென்ற போதிலும் இறுதி நேரத்தில் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ புத்தளம் மாவட்டத்துக்கான செயற்றிட்டதின் பிரதான நிகழ்வு புத்தளம் சக்தி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டுள்ளார் என்பதை அறிந்துகொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், கறுப்புக் கொடிகளை ஏந்திக்கொண்டு புத்தளம் பஸ் நிலையத்திலிருந்து சக்தி விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக செல்ல முற்பட்டனர்.
சக்தி விளையாட்டு மைதானத்தைச் சுற்றி பலத்த பொலிஸ், விஷேட அதிரடிப்படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்ததுடன், அந்த மைதானத்திற்கு செல்லும் சேர்விஸ் வீதியிலும் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது, சக்தி விளையாட்டு மைதானத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்ல முற்பட்ட போது, அவர்களை அங்கு செல்ல விடாது, பொலிஸாரும், கலகம் தடுக்கும் பொலிஸாரும் தடுத்து நிறுத்தினர். இதன்போது, அங்கும் அமைதியின்மை ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் மீது பொலிஸார் தடியடி பிரயோகம் மேற்கொண்டனர். இந்த தடியடிப் பிரயோகத்தினால் ஆண்கள், பெண்கள் காயமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நீதிமன்றத்தின் உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் வெள்ளிக்கிழமை (22) இரண்டு இளைஞர்களும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும், சனிக்கிழமை (23) புத்தளம் மாவட்ட நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவ்விருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
அத்துடன், குறித்த போராட்டத்துடன் தொடர்புடைய மேலும் சிலரையும் கைது செய்வதற்கும் புத்தளம் பொலிஸார் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
இதன் அடிப்படையில், சனிக்கிழமை (23) காலை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்காக அழைக்கப்பட்ட ‘க்ளீன் புத்தளம்’ அமைப்பின் உறுப்பினர் ஒருவர் விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, புத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, இந்த குப்பை விவகாரம் தொடர்பில் பேசாதது, சர்வமத குழு மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பினரை சந்திப்பதற்கு அனுமதி வழங்காதமை, ஜனாதிபதியை சந்திப்பதற்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் அடிதடிப் பிரயோகம் மேற்கொண்டமையை சமயத் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கண்டித்துள்ளனர்.
எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் இந்த சரித்திர போராட்டத்தில் ஈடுபடுவோரை தடியடிப் பிரயோகம் மேற்கொண்டாலும், கைது செய்து சிறையில் அடைத்தாலும் இந்தப் போராட்டத்திலிருந்து மக்கள் பின்வாங்கப் போவதில்லை எனவும் புத்தளம் மக்களின் இந்தப் போராட்டத்திற்கு புத்தளம் மாவட்ட சர்வமத குழுவின் ஆதரவு எப்போதும் உண்டு என புத்தளம் மாவட்ட சர்வமத குழுவின் பொருளாளர் ஸ்ரீலஸ்ரீ வெங்கட சுந்தரராம குருக்கள் தெரிவித்தார்.
கடந்த 200 நாட்களுக்கு மேல் இந்த மக்கள் புத்தளத்தில் குப்பைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 19 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலிலும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. அப்போது, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றுக்குச் சென்று அதிகாரிகளை சந்தித்து இந்த குப்பைத் திட்டம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சர்வமத குழு நேரில் சந்திக்க வேண்டும் எனவும் அதற்கு ஏற்பாடு செய்து தருமாறும் கேட்டுக்கொண்டோம்.
அதற்கு விரைவில் அதற்கான சந்தர்ப்பங்களை பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர்.
இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை சில நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த ஜனாதிபதியை ஒரு பத்து நிமிடங்கள் சந்திப்பதற்கு சர்வமத குழு மற்றும் க்ளீன் புத்தளம் அமைப்பினருக்கு சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறும் சு.க. அமைப்பாளர்களான விக்டர் அன்டனி மற்றும் என்.டி.எம்.தாஹிர் ஆகியோரைக் கேட்டுக்கொண்டோம்.
ஜனாதிபதியுடன் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டதே தவிர, உறுதியாக நேரம் பெற்றுத் தரவில்லை. இதனையடுத்து, புத்தளம் மக்கள் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் அமைதியான முறையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதென தீர்மானித்து, ஜனாதிபதி வருகையை அடுத்து மக்கள் மிகவும் அமைதியான முறையில்தான் போராட்டம் நடத்தினார்கள்.
மக்கள் தெரிவு செய்த ஜனாதிபதியை சந்திப்பதற்கும், பிரச்சினைகளை சொல்வதற்கும் அந்த மக்களுக்கு உரிமைகள் இருக்கின்றன. அதை யாராலும் தடுக்க முடியாது.
எனவே, இவ்வாறு போராட்டம் நடத்தியவர்கள் மீது பொலிஸார் நடந்துகொண்ட விதமும், இதுபற்றி ஜனாதிபதி கவனம் செலுத்தாமல் இருப்பதும் வேதனையை ஏற்படுத்துகிறது.எனவே, அரசாங்கம் இன்னமும் கடும் போக்குடன் நடந்துகொள்ளாமல், வெளிநாட்டு ஆலோசனைகளைப் பெற்று, கொழும்பு குப்பைகளை வேறு பகுதிக்கு எடுத்துச் சென்று மீள்சுழற்சிக்கு உட்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
எந்தப் பாதிப்புக்களும் வராதென்று வாக்குறு வழங்கி அமைக்கப்பட்ட அனல் மின்சாரம், சீமெந்து தொழிற்சாலை என்பவற்றால் மக்கள். இன்றும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மீண்டும் இந்த அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்துகிறோம்.
இதேவேளை, குப்பை விவகாரம் தொடர்பில் புத்தளம் மக்கள் பொறுமையாக செயற்படுவதுடன், அதிகமாக துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் புத்தளம் பெரியபள்ளிவாசல் பொதுமக்களை கேட்டுள்ளது.
இத்தொடரில் புத்தளம் பெரியபள்ளிவாசல் விடுத்துள்ள அறிக்கையில்,புத்தளம் நகருக்கு வருகைதந்த ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி வழங்க கோரி அமைதியான போராட்டத்தை நடத்திய மக்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகள் வேதனையை அளிக்கிறது.
இன, மத வேறுபாடுகளின்றி, தியாகங்களுக்கு மத்தியில் எதிர்கால சந்ததியினரை பாதுகாக்கும் இந்த சரித்திரப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான புத்தளம் மக்களின் உணர்வுகளை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதே சிவில் தலைமைகளின் எதிர்பார்ப்பாகும்.
அத்துடன், இத்தகைய அசம்பாவிதங்கள் மற்றும் சமூகத்தை அழிக்கக் கூடிய திட்டங்களிலிருந்து எமது ஊரையும், எமது சமூகத்தையும் பாதுகாக்க இறையச்சத்துடனும், உளத்தூய்மையுடனும் இறைவனிடம் துஆப் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.அத்தோடு, வெள்ளிக்கிழமை அசம்பாவிதங்களில் காயப்பட்ட, வேதனைப்பட்ட, சட்ட சிக்கல்களுக்கு உட்பட்டுள்ளவர்களுக்கு இறைவன் உடல், உள சுகத்தை தர நாம் அனைவரும் பிரார்த்திக்கிறோம்.இதேவேளை, சமூகங்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்க நினைக்கும் சில தீயசக்திகளின் முயற்சியில் மாட்டிக்கொள்ளாத வகையில் பொதுமக்கள் சமயோசிதமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்கிறோம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
-Vidivelli