மன்னார் மனித புதைகுழி: 3 மாதங்களுக்கு அகழ்வு பணிகள் இடைநிறுத்தம்
மன்னார் நீதிவான் தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
மன்னார் மனித புதைகுழியின் மேலதிக அகழ்வுப் பணிகள் அனைத்தும் அடுத்துவரும் மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு மன்னார் நீதிவானின் தலைமையில் நடைபெற்ற இப்புதைகுழி தொடர்பிலான கூட்டத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த மூன்று மாதத்துக்குள் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரின் தொல்பொருள் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மனித புதைகுழியை மேலும் அகழ்வதாவெனத் தீர்மானமெடுக்க இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், அகழ்வுப் பணிகளுக்குப் பொறுப்பாகவிருக்கும் சட்டவைத்திய நிபுணர் சமிந்த ராஜபக் ஷவும் அவரது குழுவினரும் கலந்துகொண்டதுடன் அவர்களுக்கு மேலதிகமாக இப்புதைகுழி தொடர்பிலான அகழ்வுகளில் பங்கேற்றுள்ள தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் குழுவினரும் பங்கேற்றனர்.
இவர்களுக்கு மேலதிகமாக காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர், பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் என சம்பந்தப்பட்ட தரப்பினர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இதுவரை இடம்பெற்ற அகழ்வுகளை மையப்படுத்தி தொல்பொருள் அறிக்கையை மூன்று மாதங்களுக்குள் முன்வைக்க பேராசிரியர் ராஜ் சோமதேவ குழுவினர் இணக்கம் தெரிவித்தனர்.
இதனையடுத்து அவ்வறிக்கை கிடைத்ததும் மீளக் கலந்துரையாடி புதைகுழியை தொடர்ந்து அகழ்வதா இல்லையா என முடிவெடுக்கப்படவுள்ளது.
இந்நிலையில் இப்புதைகுழி தொடர்பிலான மேலும் பல விசேட நிபுணர்களின் அறிக்கைகளும் கிடைக்கவுள்ளதால் அவை கிடைக்கும்வரை புதைகுழியுள்ள பிரதேசத்தின் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போதும் அடையாளம் காணப்பட்டுள்ள மீட்கப்படாத எலும்புக்கூடுகள் அவ்வாறே கைவிடப்பட்டால் அவை பழுதடையலாம் எனும் சந்தேகத்தில் அவற்றை மண்கொன்டு மீள மூடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மன்னார் மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டு மாதிரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை என தெரியவந்திருந்தது.
அமெரிக்காவின் ப்ளோரிடாவைத் தளமாகக் கொண்ட பீட்டா அனலெடிக் நிறுவனம் மேற்கொண்ட கார்பன் பரிசோதனை அறிக்கையின் மூலம் இந்த விடயம் தெரியவந்தது.
கடந்த 2018 மார்ச் மாதம் ஏ–14 வீதியான மதவாச்சி – தலைமன்னார் பிரதான வீதியருகே அமைந்துள்ள மன்னார் ச.தொ.ச. காட்சியறையை விருத்திசெய்ய அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதன்போது அந்த நிறுவனத்துக்கு அருகிலுள்ள பகுதி பெக்கோ இயந்திரம் கொண்டு தோண்டப்பட்டது.
இந்நடவடிக்கைகளின் போது அங்கு தோண்டப்பட்ட மண், தனி நபர்களுக்கு விற்கப்பட்டன. அவ்வாறு தோண்டப்பட்ட மண்ணை எடுத்துச் சென்ற மன்னார் எமில் நகர் வர்த்தகர் ஒருவர் அதில் எலும்புக் கூடொன்று இருப்பதை அவதானித்து மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டிருந்தார்.
கடந்த 2018 மார்ச் 26 ஆம் திகதி இந்த முறைப்பாடு பொலிசாருக்கு கொடுக்கப்பட்ட நிலையில், நீதிமன்ற அனுமதியுடன் மன்னார் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக் ஷ ஸ்தலத்தை பார்வையிட்டு மேலதிக விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
இந்நிலையில் நீதிமன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட அனுமதிக்கமைய சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக் ஷவின் கீழ் கடந்த 2018 மே 28 ஆம் திகதி முதல் அந்தப் பகுதியில் விஷேட அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. 2019 மார்ச் 7 ஆம் திகதிவரையில் 155 நாட்கள் அகழ்வுப் பணிகள் இடம்பெற்றிருந்த நிலையில் அதன்போது 325 மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதில் 318 எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றில் 29 எலும்புக் கூடுகள் சிறுவர்களினுடையதாக இருக்குமென சந்தேகிக்கப்படுகின்றது. கடந்த மார்ச் 8 ஆம் திகதி முதல் அங்கு அகழ்வுப் பணிகளை முன்னெடுக்க நீதிமன்றம் தடை விதித்தது. அதன்படியே நேற்று முன்தினம் அது தொடர்பில் தீர்மானிக்க கூட்டம் இடம்பெற்றது. அதிலேயே மூன்று மாதங்களுக்கு அகழ்வுப் பனிகளை நிறுத்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
-Vidivelli