வில்பத்து வன பாதுகாப்பு பகுதியில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. வன பாதுகாப்பு அதிகார சபையினால் வில்பத்து வன பாதுகாப்பு பிரிவு மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு விடுவிக்கப்படவும் இல்லை. இந்த வன பாதுகாப்பு நில அபகரிப்பு இடம்பெறுவதாக குறிப்பிடுவது போலி குற்றச்சாட்டுக்கள் என்றும் குறித்த வில்பத்து வனபாதுகாப்பு பகுதி வன பாதுகாப்பு அதிகார சபையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுற்றாடல் துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மன்னபெரும தெரிவித்தார். மேலும் வில்பத்து வனப்பகுதிக்கு அப்பாலுள்ள மன்னார் பிரதேசத்தின் மறிச்சிக்கட்டி, கரண்டியன் குளம் மற்றும் விளத்தி குளம் ஆகிய வன பிரதேசங்களின் சில பகுதிகளே இவ்வாறு மீள் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வில்பத்து வனபாதுகாப்பு பகுதியில் ஆக்கிரமிப்புகள் இடம்பெறுவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறிப்பிட்ட பிரதேசங்களுக்கு திடீர் விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை அவர் அவதானித்தார். அத்துடன் நிலவும் பிரச்சினை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பொன்று சுற்றூடற்றுறை அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வில்பத்து வனபாதுகாப்பு பகுதியில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எதுவும் இடம்பெறவில்லை. அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டத்திலேயே வில்பத்து வனபாதுகாப்பு பகுதி அமைந்துள்ளது. அங்கு நில அபகரிப்பு சம்பவங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பும் இல்லை. குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது போன்று எவ்வித பிரச்சினைகளும் அங்கு இடம்பெறவில்லை என்றே குறிப்பிட வேண்டும்.
ஆனால், குறித்த வில்பத்து வனபாதுகாப்பு பகுதிக்கு அப்பாற்பட்ட வனப்பகுதி ஒன்றில் நில அபகரிப்பு தொடர்பான பிரச்சினை காணப்படுகின்றது. அதாவது மன்னார் பிரதேசத்தின் மறிச்சிகட்டி, கரண்டியன் குளம் மற்றும் விளத்திகுளம் ஆகிய வன பிரதேசங்களிலேயே இதுபோன்று மீள் குடியேற்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக கடந்த அரசாங்கம் முன்னெடுத்த வேலைத்திட்டங்களின் காரணமாகவே இந்த வனப்பகுதிகளில் இவ்வாறான நில அபகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன. யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் மஹிந்த ராஜபக் ஷவின் அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையை சீரமைக்கும் நோக்கில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்திருந்தது.
இந்த ஆணைக்குழுவினூடாக வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுக்கும் கொடுப்பதற்காக கடந்த அரசாங்கத்தின் ஜனாதிபதி வடக்கு கிழக்கின் மீள் குடியேற்றம், அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பின் நிமித்தம் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. இந்தக் குழுவில் முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் உள்ளடங்கலாக 19 .பேர் நியமிக்கப்பட்டிருந்தனர். இதனூடாக அந்த மக்களின் மீள் குடியேற்றத்துக்கான நிலப்பகுதியை பெற்றுக்கொடுப்பதற்கான பரிசீலனைகளும் இடம்பெற்றுள்ளன.
அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைவாக 2012 ஆம் ஆண்டு வன பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு திணைக்களங்களிடம் , 22 ஆயிரத்து 586 குடும்பங்களை மீள குடியேற்றுப்படவுள்ளதாகவும், இவற்றுள் 15 ஆயிரத்து 189 குடும்பங்களே மீள் குடியேற்றப்பட்டுள்ளதாகவும் ஏனைய குடும்பங்களை மீள் குடியேற்றுவதற்குத் தேவையான காணிகளை பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வேண்டுக்கோளுக்கு இணங்கவே இந்த வனப்பகுதி குடியேற்றங்களுக்காக பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்தப் பரிந்துரைகளுக்கு அமைவாக இது தொடர்பில் வனபாதுகாப்பு திணைக்களத்துக்கு அறிவிக்காமல் குறித்த வனப்பகுதிகள் மீள்குடியேற்றத்துக்காக விடுவிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று மறிச்சிக்கட்டி, காண்டியன் குளம் மற்றும் விளத்தி குளம் ஆகியனவற்றின் நிலப்பரப்புக்கள் அன்று இருந்த நிலத்தோற்றத்திலேயே இன்றும் காட்சியளிக்கின்றன. கடந்த அரசாங்கத்தின் இந்த செயறபாட்டுக்கு வன பாதுகாப்பு திணைக்களம் எதிர்ப்பினை வெளியிட்டிருந்த போதிலும் அதற்கு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் இராண்டாவது முறையும் இதுகுறித்து ஆராய குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.. அந்தக்குழு மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கான பிரதான 5 பிரதேசங்களை விடுவிக்குமாறு பரிநதுரைகளை முன்வைத்துள்ளது. அதற்கமைய பாலைக்குளி வனப்பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பும், மரிச்சக்கட்டி பிரதேசத்தில் 100 ஏக்கரும் , கரண்டினகுளி பிரதேசத்தில் 80 ஏக்ரும், காக்கநாயன் குளம் 500 ஏக்கர் மற்றும் சன்னார் பிரதேசத்தில் 300 ஏக்கரும் வடுவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் பரித்துரைக்கமைய 2012 ஆம் ஆண்டும் இவவாறு 1080 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிப்பதற்கான அனுமதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அந்தப் பரிந்துரைகளுடன் அந்தப் பிதேச பொறுப்பதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் , மேலதிகமாக 2007 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவிக்குமாறும் அந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் பரிந்துரைக்கு வனபாதுகாப்பு திணைக்களம் மறுப்பினை வெளியிட்டிருந்தது. .2015 ஆம் ஆண்டு நாங்கள் ஆட்சி பொறுப்பினை ஏற்றதன் பின்னர் இந்த வனப்பகுதி தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றமையினால் அதனை பாதுகாக்கப்பட்ட வன பிரதேசமாக அறிவித்திருந்தோம் என்றார்.
-Vidivelli