- கல்ஹின்னை பஹ்மி ஹலீம்தீன்
அமைதியுடன், நிம்மதியாக வாழும் மக்கள். இயற்கை எழிலுடன் ஐக்கியம் கலந்த சமாதான சூழல். இதுவரை கறைபடியாத பக்கங்களில் எழுதப்பட்ட நியூசிலாந்து சரித்திரத்தில் இரத்தக்கறை படிந்துவிட்டது.
துப்பாக்கி ரவைகளால் துளைக்கப்பட்ட அந்த தினம் நியூசிலாந்தின் வரலாற்று அத்தியாயத்தில் மிகவும் சோகங்கள் நிறைந்த கறுப்பு தினமாகியது. 2019 மார்ச் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று க்ரைஸ்ட்சேர்ச் என்னுமிடத்தில் முஸ்லிம் மக்கள் தொழுகைக்காக இறையில்லத்தில் ஒன்று கூடியவேளை ஐம்பது அப்பாவி முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலையாளி தனது பயங்கரவாதச் செயலை நேரடியாக வீடியோ கமெராவில் காட்சிப்படுத்தியவாறே துப்பாக்கிச்சூட்டை நடத்தியதைப் பார்க்கும்போது அக்காட்சி ஒருகணம் இதயத் துடிப்பை ஸ்தம்பிக்கச் செய்தது.
உலகையே அதிர்வடையச் செய்த இச்செயல், அமைதியை விரும்பும் நாடான நியூசிலாந்தில் நடந்தது அதிர்ச்சியைத் தரும் ஒரு சம்பவமாகவே உலக நாடுகளால் பார்க்கப்படுகின்றன. பெரும்பாலான உலக நாடுகளின் தலைவர்களது இரங்கல் செய்திகளும் , கண்டனங்களும் வேகமாகப் பதிவாகின. உலக மக்களின் கவலைபடிந்த எண்ணங்களும் சமூக வலைத்தளங்களில் கோடிக்கணக்கில் பதிவாகின. நியூசிலாந்து அரசாங்கமும் பாதுகாப்புப் பிரிவினரும் உடனேயே செயற்பட்டுத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதால் கொலையாளிகளை உடனேயே கைதுசெய்ய முடியுமாக இருந்தது.
1990 இல் காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கும் அதிகமான முஸ்லிம்களை சுட்டுக் கொன்ற சம்பவம் இலங்கைத் தீவிரவாத இயக்கமான விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்டதை இச்சம்பவம் நினைவுபடுத்தியது . அதன்பின் நடந்த மற்றுமொரு கோழைத்தனமான சம்பவமே நியூசிலாந்தில் தற்போது நடந்துள்ளது. வணக்க வழிபாடுகள் என்பது எல்லா மதத்தவரும் அவரவரது இறை நம்பிக்கையின் பேரில் மேற்கொள்ளும் செயலாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் நடத்தப்படும் இவ்வாறான கோழைத்தனமான சம்பவங்கள் மிகவும் மோசமான அல்லது கீழ்த்தரமான மனித செயற்பாடாகும். இதைச் செய்வது எம்மதமாக இருப்பினும் இது மிகவும் கேவலமான ஒரு தீவிரவாத செயல் என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான ஈனச் செயல்களுக்கான பிரதிபலன்களும் இறைவன் புறத்திலிருந்து கிடைத்து முற்றாக அழிந்து போனவர்களும் உண்டு என்பதற்கான மிகத் தெளிவான அத்தாட்சிகள் வரலாறுகளில் அழகாகப் பதியப்பட்டுள்ளன.
நியூசிலாந்தில் நடந்த இந்தப் பயங்கரவாத துப்பாக்கிச்சூட்டு சம்பவம் வித்தியாசமான முறையில் நீண்டகாலம் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டிருப்பதாகவே அறியமுடிகிறது. தீவிரவாதியின் மனதில் பதிந்திருந்த வக்கிரம், கோபம், பகையை வெளிப்படுத்துவதாகவே அவர் வைத்திருந்த துப்பாக்கியில் எழுதப் பட்டிருந்த பல வாசகங்களும் உறுதி செய்தது .
அவ்வாசகங்களில் சில, “refugees welcome to the Hell” என அகதிகளுக்கெதிரான வெறுப்புணர்வை உணர்த்துவதாக ஒரு வாசகம் இருந்தது. அத்துடன் உஸ்மானிய கிலாஃபத்துக்கு எதிராக கிறிஸ்தவ உலகம் பெற்ற வெற்றியின் குறியீடுகளாகவும் சில வாசகங்கள் காணப்பட்டன.
“Turkofagos” எனும் கிரேக்க மொழிச் சொல் “துருக்கி கொலைகாரர்கள்” என்பதாகும் .
“John Hunyadi” இது கொன்ஸ்டாந்திநோபில் வெற்றியின் பின் 1456 ஆம் ஆண்டு நடை பெற்ற யுத்தத்தில் சுல்தான் மஹ்மூதின் படைக்கெதிராகப் போராடி வென்ற ஹங்கேரி நாட்டு இராணுவத் தளபதியின் பெயராகும்.
“Vienna – 1683 இது உஸ்மானியப் படை வியன்னா போரில் தோல்வியுற்ற ஆண்டு.
“Milos – Obilic” இது 1389 ஆம் ஆண்டு உஸ்மானிய சுல்தான் முராத் –-1 அவர்களை படுகொலை செய்த செர்பியத் தளபதியின் பெயர்.
இவ்வாறான வாசகங்கள் முஸ்லிம்கள் மீது வரலாற்று ரீதியான பகையையும் வெறுப்புணர்வையும் பிரதிபலிப்பதாக இருப்பதுடன் பாஸிஸ தீவிரவாதிகளின் திட்டமிடப்பட்ட சதியையே உணர்த்தி நிற்கின்றன. வரலாற்றை நாம் மறந்தாலும் அவர்கள் மறக்கவில்லை என்பதற்கான சிறந்த ஒரு சான்று இது.
தாக்குதலில் ஈடுபட்டு கைதாகியிருக்கும் பிரதான குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய பிரென்டன் டெரன்ட் என்பவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது சிறைக் கைதிகள் அணியும் வெள்ளைநிற ஆடையுடன் விலங்கிடப்பட்ட நிலையில் அவர் காணப்பட்டதாகவும் அவர் அழைத்து வரப்படும்போது அவரது கை விரல்களினால் வெள்ளையர்களின் சின்னத்தை அடையாளப்படுத்தி ஊடகங்களுக்குக் காட்சிப்படுத்தியதாகவும் காணொலிகள் வெளியாகி இருந்தன. இவர்மீது படுகொலைக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதும் இவர் தனக்குப் பிணை வழங்குமாறோ அல்லது தன்னை விடுதலை செய்யுமாறோ எந்தவித வேண்டுகோள்களையும் முன்வைக்கவில்லையெனக் குறிப்பிடப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் பிறந்த இவர் உடற்பயிற்சி நிலையமொன்றில் ஆலோசகராகக் கடைமையாற்றியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு ஒரு சில மணி நேரத்துக்கு முன் இப்பயங்கரவாதி இணையத்தள பதிவொன்றில் 74 பக்கங்களைக் கொண்ட பல தகவல்களும் அடங்கிய அறிக்கையொன்றை வெளியிட்டிருந்ததாக செய்திகள் கூறுகின்றன. அதில் முக்கியமான ஒரு விடயமாக, கடந்த 2011 ஆம் ஆண்டு நோர்வேயில் 77 பேரைக் கொலை செய்த “அன்டர்ஸ் பிரேய்விக்” என்பவரைத் தான் முன்மாதிரியாகக் கொண்டு இத்தாக்குதலை நடத்தப் போவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறான பல தகவல்களையும் நோக்கும்போது இவருக்குப்பின் பல உண்மைகளும் மறைந்திருப்பதை உணர முடிகிறது. அந்த உண்மைகள், தீவிர விசாரணைகளின் பின் உலக மக்கள் முன் வெளிச்சத்திற்கு வரத்தான் போகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான சதிமுயற்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்பட்டாலும் இஸ்லாத்தை அழிக்க பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டாலும் அவை அனைத்தும் இறுதியில் பகல் கனவாகவே முடிந்து விடுகின்றன.
க்ரைஸ்ட்சேர்ச்சில் நடந்த இப்பயங்கரவாதத் தாக்குதல் உலக மக்களை இஸ்லாத்தின் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அமெரிக்காவில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலின் போது உலகில் அதிகமாகப் பேசப்பட்ட மதம் இஸ்லாம் என்றாலும் அத்தாக்குதலில் மறைக்கப்பட்ட உண்மைகளும் , சதிகளும் பின்னர் மெதுவாக அம்பலமாகின. அதன்பின் அமெரிக்கர்கள் மட்டுமன்றி ஏனைய மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்களும் இஸ்லாத்தை பற்றி ஆராய ஆரம்பித்தனர். அதன் விளைவு இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மைத் தன்மையுடன் ஒரிறைக் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கானவர்கள் அப்போது புனித இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டது மட்டுமன்றி, தொடர்ச்சியாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்பவர்கள் அதிகமாகிக் கொண்டே போவதால், உலகில் இஸ்லாத்தின் வளர்ச்சியின் வேகம் துரிதமாகிக் கொண்டே போவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இன்று உலகில் மிகவும் வேகமாகப் பரவும் மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. அதேபோன்றுதான் க்ரைஸ்ட்சேர்ச் தாக்குதலின் பின்னரும் நியூசிலாந்தில் இஸ்லாத்தின் பால் ஈர்க்கப்பட்டு ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மக்கள் அதிகரித்திருப்பதாக ஊடக செய்திகளில் காண முடிகிறது. இன்னும் ஏராளமான நாடுகளில் வாழும் மக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளை ஆராய ஆரம்பித்திருப்பது இஸ்லாமிய எதிர்ப்பாளர்களுக்கு பேரிடி தரும் செய்தியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
உலகில் அன்றாடம் நடக்கும் பல தீவிரவாதச் செயல்களையும் யூத ஸியோனிஸ சக்திகள்தான் திரைக்குப் பின்னாலிருந்து இயக்குகின்றன என்ற உண்மை இன்னும் மறைக்கப்பட்ட இரகசியமாகவே இருந்து வருகிறது. எது நடந்தாலும் அது இஸ்லாமியத் தீவிரவாதம் என உலகுக்குக் காட்டிக் காட்டியே உண்மைகள் மூடி மறைக்கப்படுகின்றன. உலக ஊடகங்களும் அவற்றை ஊதிப் பெரிதுபடுத்தி இஸ்லாத்திற்கு களங்கம் ஏற்படுத்துவதையே வழக்கமாக்கி செயற்படுகின்றன. ஆனால் நியூசிலாந்து தாக்குதல், பள்ளிவாசலுக்குள்ளேயே முஸ்லிம்கள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டது உலக நாடுகளின் கண்டனத்தையும் முஸ்லிம்கள் மீது அனுதாப உணர்வுகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. க்ரைஸ்சேர்ச் தாக்குதலின்பின் நியூசிலாந்து மக்களின் மனிதாபிமானம், மலர் வளையங்களாக பள்ளிவாசலின் முன் குவிந்து காணப்பட்டன. நியூசிலாந்தில் 1.5 சதவிகித முஸ்லிம்களே வாழ்ந்தாலும் வீரமரணமடைந்த முஸ்லிம் சகோதரர்களை முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி 100 சதவிகித நியூசிலாந்து மக்களும் ஒன்றுசேர்ந்து சகோதர வாஞ்சையுடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாதையோரங்களில் “நாம் முஸ்லிம்களின் விரோதிகளல்ல” என்றும் “முஸ்லிம்கள் நம் சகோதர்கள்” என்றும் பதாதைகளைச் சுமந்து இறந்தவர் குடும்பங்களுக்கும் உலக முஸ்லிக்களுக்கும் நட்பு கலந்த அனுதாபங்களையும், ஆதரவையும் தெரிவிக்கின்றனர். இது நியூசிலாந்தில் மட்டுமன்றி ஏனைய பல நாடுகளிலும் நடக்கும் ஒரு சிறந்த பண்புள்ள மனித நேய நிகழ்வாகக் காணக் கூடியதாக உள்ளது. நியூசிலாந்தில் ஏனைய பள்ளிவாசல்களிலும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், பிற மதத்தவர்கள் பள்ளிவாசல்களுக்கு வெளியே ஒன்றுகூடி தொழுகை நேரங்களில் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாக இருந்து தமது உயர்ந்த பண்புகளை காட்டி வருகின்றனர். எத்தனை தீய சக்திகள் சதிகளைச் செய்தாலும், இனத் துவேஷமும் , மதவெறியுமற்ற மனிதர்கள் உலகில் அதிகமாக வாழ்கிறார்கள் என்பதற்கு இதுவே நல்லதோர் சான்று.
நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டா ஆர்டன் ஸ்தலத்திற்கு சமுகமளித்து இறந்தவர்களின் குடும்பத்தவர்களைக் கட்டித்தழுவி தனது அனுதாபங்களை தெரிவித்து ஆறுதலும் கூறினார். முஸ்லிம் பெண்களைப் போல் தலையை மறைத்தவராக அவர் அவ்விடத்திற்கு வந்தது பலரையும் ஈர்த்தது. இறுதி அஞ்சலிக்கான செலவுகளுக்காக தலா பத்தாயிரம் டாலர்களை வழங்கியதும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி கூறியதும் மனிதாபிமானமுள்ள ஒரு நல்ல தலைவருக்கான உதாரணம். அது மட்டுமன்றி கடந்த செவ்வாய்க்கிழமை பயங்கரவாதத் தாக்குதல் சம்பந்தமான சிறப்பு அமர்வு பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. சபாநாயகரும் பிரதமரும் தமது உரைகளை ஆரம்பிக்கும் போது அரபு மொழியில் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்று கூறி ஆரம்பித்ததும், அதன் பின் முஸ்லிம் மதபோதகர் ஒருவரால் புனித குர்ஆனின் சில வசனங்கள் ஓதப்பட்டு அதன் மொழி பெயர்ப்பையும் கேட்க முடிந்தது. பிரதமர் ஜெசின்டா ஆர்டனின் உரையில் “பயங்கரவாத நடவடிக்கையில் பல உயிர்களையும் அவன் பலி வாங்கியுள்ளான், சட்டம் அவன்மீது முழுவீச்சில் பாயும். அவன் ஒரு பயங்கரவாதி, குற்றவாளி, ஒரு போதும் நான் அவனது பெயரை உச்சரிக்கமாட்டேன். நீங்களும் அவனது பெயரை உச்சரிப்பதை விடுத்து, அவனால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்துப் பேசுங்கள் என அனைவரிடத்திலும் வேண்டுகோள் விடுக்கிறேன்” என தாக்குதல் மீதான தமது மிகுந்த வெறுப்புணர்வையும், பாதிக்கப்பட்டவர்கள் மீதான தனது பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தியுள்ளார்.
இது, ஒரு நாட்டுத் தலைவர் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் உரையாகும்.
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் போன்றவர்களோடு நியூசிலாந்துப் பிரதமர் ஜெசின்டா ஆர்டனும் உலக மக்களை ஈர்த்த தலைவராகிவிட்டார். இவ்வாறான தலைவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது ஏனைய தலைவர்களுக்கு சிறந்த ஒரு முன்மாதிரி. இன அழிப்புக்களுக்குத் துணைபோகும் தலைவர்களும், துவேஷங்களைத் தூண்டும் தலைவர்களும், தம்மை நம்பிய மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தலைவர்களையும் பார்த்துப் பழகிப் போன எமக்கு இதுபோன்ற நற்குணமுள்ள தலைவர்கள் கண் குளிர்ச்சியை தருகிறார்கள். இப்படிப்பட்ட நல்லவர்களால் உலகம் ஒருநாள் அமைதிபெறும் என்ற நம்பிக்கையைத் தருகிறார்கள். இறைவன் அவர்களது நற் செயல்களை ஏற்று மேலும் அவனது நேரான வழியை அவர்களுக்குக் காட்ட வேண்டும்.
அண்மையில் காஷ்மீரில் நடந்த தாக்குதல் மற்றும் க்ரைஸ்ட்சேர்ச் தாக்குதல் என்பனவற்றை நோக்கும்போது இஸ்லாம், தீவிரவாதத்திற்கு எதிரான மதம் என்பதை உலகம் புரிந்துகொள்ளும் நாள் வெகு தூரத்திலில்லை என்பதை உணர முடிகிறது.
படிப்படியாக ஸியோனிஸத் தீவிரவாதம் உலகில் வெளிப்படையாகவே தலைதூக்க ஆரம்பித்துவிட்டது. இலுமினாட்டிகளின் முகத்திரை கிழிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டு வருகின்றது. இஸ்லாமிய எதிர்ப்பாளர்கள் தோல்விகளை மெதுவாகச் சந்திக்கத் தொடங்கிவிட்டனர். இஸ்லாத்தை இழிவுபடுத்தும் சதிமுயற்சிகளும் பெரும்பாலும் தோல்வியில் முடிவது மட்டுமன்றி அவை இஸ்லாத்தின் மீது பிற மதத்தவர்களை ஈர்க்கச் செய்வதைக் காண முடிகின்றது. சாந்தியும் சமாதானமும் தழைத்தோங்கி யுத்தமற்ற சுத்தமான காற்றை சுவாசிக்கும் நாள் வருமா…?
-Vidiveli