வெறுப்பை தோற்கடிப்பதில் நியூஸிலாந்தின் முன்மாதிரி

0 763

நியூ­ஸி­லாந்தின் க்ரைஸ்ட்சேர்ச் நக­ரி­லுள்ள இரு பள்­ளி­வா­சல்­களில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை நடாத்­தப்­பட்ட மிலேச்­சத்­த­ன­மான பயங்­க­ர­வாதத் தாக்­குதல் மனித குலத்­துக்கே விரோ­த­மா­ன­தாகும். இந்தத் தாக்­கு­தலை நாம் வன்­மை­யாகக் கண்­டிப்­ப­துடன் குறித்த கொலை­யா­ளிக்கு உச்­ச­பட்ச தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் எனவும் வலி­யு­றுத்த விரும்­பு­கிறோம்.

உலக வர­லாற்றில் பல பள்­ளி­வாசல் படு­கொ­லைகள் பதி­வா­கி­யுள்­ளன. இவற்றுள் பலஸ்தீன், இலங்­கையின் காத்­தான்­குடி, புத்­தளம் மற்றும் எகிப்து ஆகி­ய­வற்றில் இடம்­பெற்ற பள்­ளி­வாசல் படு­கொ­லைகள் குறிப்­பி­டத்­தக்­கவை. அந்த வரி­சை­யில்தான் தற்­போது நியூ­ஸி­லாந்து பள்­ளி­வாசல் படு­கொ­லையும் பதி­வா­கி­யுள்­ளது.

எனினும் இந்தத் தாக்­கு­தலை நடத்­திய நபர் அவுஸ்­தி­ரே­லியப் பிரஜை என அடை­யாளம் காணப்­பட்­டுள்ளார். இதற்கு முன்னர் எந்­த­வித தீவி­ர­வாத சக்­தி­க­ளு­டனும் இவர் தொடர்­பு­பட்­டி­ருக்­க­வில்லை என்றும் அவ்­வா­றான சிந்­த­னை­களைக் கூட அவர் கொண்­டி­ருக்­க­வில்லை என்றும் விசா­ர­ணை­யா­ளர்கள் கூறு­கின்­றனர். அவ்­வா­றெனின் இத் தாக்­கு­த­லுக்­காக அவரைத் தூண்­டிய காரணி என்ன என்­பது பற்றி விரி­வாக ஆரா­யப்­பட வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இந்தத் தாக்­கு­தலில் உயி­ரி­ழந்­த­வர்­களில் சக­ல­ருமே வேறு நாடு­களில் இருந்து வந்து குடி­யே­றி­ய­வர்­களே. அதுவும் தத்­த­மது நாடு­களில் இடம்­பெறும் அசம்­பா­வி­தங்­க­ளி­லி­ருந்து தமது உயிரைப் பாது­காத்துக் கொள்­ளவும் தமது பிள்­ளை­களின் கல்வி, தொழில் உள்­ளிட்ட எதிர்­கா­லத்தைக் கருத்திற் கொண்­டுமே நியூ­ஸி­லாந்தில் இவர்கள் குடி­யே­றினர். எனினும் அங்கும் இன்று பயங்­க­ர­வாதம் தலை­தூக்­கி­யுள்­ளது.

இருந்­த­போ­திலும் நியூ­ஸி­லாந்து பாது­காப்­பற்ற நாடல்ல என்­பதை நிரூ­பிக்­கவும் இந்தத் தாக்­கு­தலின் அதிர்ச்­சி­யி­லி­ருந்து அந்­நாட்டு முஸ்­லிம்­களை மீட்­டெ­டுப்­ப­தற்­கா­கவும் அந்­நாட்டு அர­சாங்கம் எடுக்கும் நட­வ­டிக்­கைகள் மெச்­சத்­தக்­க­வை­யா­கவும் வியப்­பூட்­டு­ப­வை­யா­கவும் உள்­ளன.

குறிப்­பாக நியூ­ஸி­லாந்து பிர­தமர் ஜெசிந்தா ஆர்டன் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு ஆறுதல் சொல்­லவும் தனது அன்­பையும் அர­வ­ணைப்­பையும் வெளிப்­ப­டுத்­தவும் எடுத்த நட­வ­டிக்­கைகள் பல­ரையும் ஈர்த்­துள்­ளன. குறிப்­பாக அப் பயங்­க­ர­வாதி விதைக்க முனைந்த வெறுப்பை அவர் அன்பால் வெற்றி கொண்­டுள்ளார். இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கருத்­து­களும் நிலைப்­பா­டு­களும் மங்கி, இஸ்லாம் பற்­றியும் முஸ்­லிம்கள் பற்­றி­யுமே நியூ­ஸி­லாந்தும் முழு உலகும் பேசு­கின்ற அள­வுக்கு அவ­ரது செயற்­பா­டுகள் வித்­திட்­டுள்­ளன. இந்த முன்­மா­தி­ரியை ஏனைய நாடு­களின் தலை­வர்­களும் பின்­பற்­றினால் நிச்­ச­ய­மாக பயங்­க­ர­வா­தத்தை யார் கையி­லெ­டுத்­தாலும் அதனைத் தோல்­வி­ய­டையச் செய்­யலாம்.

இந்த விட­யத்தில் இலங்­கையும் நியூ­ஸி­லாந்­தி­ட­மி­ருந்து அதிக பாடம் கற்க வேண்­டி­யுள்­ளது. இந்­நாட்டில் இன­வா­தி­க­ளுக்கு தலை­சாய்க்­காது பாதிக்­கப்­பட்ட சிறு­பான்மை மக்­களின் காயங்­களை ஆற்­றுப்­ப­டுத்த அர­சாங்கம் முன்­வ­ர­வேண்டும். அதன் மூலம் முழு நாட்டு மக்­க­ளி­னதும் மனதை வெல்ல வேண்டும். இன­வா­தத்­தையும் வெறுப்­பையும் தோல்­வி­யுறச் செய்ய வேண்டும்.

இறுதியாக, உயிரிழந்த மக்களின் சுவன வாழ்வுக்காகவும் காயமடைந்தவர்களின் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறோம். இத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். நியூஸிலாந்து அரசாங்கம் வினைத்திறனான செயற்பாடுகளுக்காக எமது நன்றிகளையும் பாராட்டுகளையும் பதிவு செய்கிறோம்.
-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.