அரசியல்வாதிகள், கடத்தல்காரர்களால் நாட்டில் வனவளம் அழிக்கப்பட்டுள்ளது
கடுமையாக சாடுகிறார் ஜனாதிபதி மைத்திரி
வடக்கு, கிழக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக வனவளம் பாதுகாக்கப்பட்டன. யுத்தம் இடம்பெறாத ஏனைய பிரதேசங்களில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல்காரர்களினால் வனவளம் அழிவுக்குள்ளாகி இருக்கிறதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இதேவேளை, வனவளம் உட்பட தாவரங்கள் மற்றும் உயிரினங்களின் பாதுகாப்பிற்கும் அரசாங்கத்தைப் போன்றே அனைத்து பிரஜைகளும் பொறுப்புடையவர்களாவர். நாட்டின் வன வளத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, எதிர்பார்க்கப்படும் வன அடர்த்தியை அதிகரிப்பதற்காக விரிவானதொரு நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
நேற்று திம்புலாகலை வெஹெரகல மகா வித்தியாலயத்தில் சர்வதேச வன பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். பாடசாலையில் புனர் நிர்மாணம் செய்யப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டில் தற்போதுள்ள வன அடர்த்தியை பாதுகாப்பதற்கு அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படாவிட்டால் இன்னும் சுமார் 15 ஆண்டுகளில் நாம் எமது வன வளத்தை இழக்க வேண்டியிருக்கும். நாட்டின் எஞ்சியுள்ள 28% வீத வன அடர்த்தியில் பெருமளவு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே உள்ளதுடன், அப்பிரதேசங்களில் இடம்பெற்ற எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக வன வளம் பாதுகாக்கப்பட்டது. யுத்தம் இடம்பெறாத ஏனைய பிரதேசங்களில் அரசியல்வாதிகள் மற்றும் கடத்தல்காரர்களினால் வனவளம் அழிவுக்குள்ளாகியிருக்கிறது.
அரசாங்கம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் அடைந்துகொள்ள எதிர்பார்க்கும் நாட்டின் வன அடர்த்தியை 32% வீதமாக அதிகரிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகொள்வதற்கு 1,48000 ஹெக்டெயார்களில் புதிதாக மரநடுகை செய்யப்பட வேண்டியுள்ளதுடன், இதில் வருடம் ஒன்றுக்கு 15,000 ஹெக்டெயர்களில் மரங்கள் நடப்பட வேண்டியுள்ளதாகவும் இந்த நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் மற்றும் தனியார்துறை, அரச சார்பற்ற நிறுவனங்கள், பாடசாலை பிள்ளைகள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.
சுற்றாடல்துறை இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும, வடமத்திய மாகாண ஆளுநர் சரத் ஏக்கநாயக்க, மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் துறை அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் டப்ளியு.ஏ.சீ.வேரகொட ஆகியோரும் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
-Vidivelli