கிறிஸ்ட் சர்ச் துப்பாக்கிச் சூட்டை தொடர்ந்து செமி தானியக்க துப்பாக்கிகளை நியூஸிலாந்து அரசு தடை செய்ய உத்தரவிட்டுள்ளது.
நியூஸிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் பள்ளிவாசல் மற்றும் லின்வுடன் பள்ளிவாசலிலும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று முஸ்லிம்கள் ஜும்ஆ தொழுகையில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிதாரி ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் 50 பேர் பலியாகினர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டில் முக்கிய குற்றவாளியான பிரெண்டன் டொரன்ட் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூட்டில் கொலையாளி பயன்படுத்திய செமி தானியக்க துப்பாக்கி மற்றும் ரைபில் ரக துப்பாக்கிகளை கடுமையான துப்பாக்கிகளுக்கான விதிகளுக்கு கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக நியூஸிலாந்து அறிவித்துள்ளது.
இது குறித்து நியூஸிலாந்து பிரதமர் ஜேசிந்தார் ஹர்டன் கூறும்போது, “ கிறிஸ்ட்சர்ச் துப்பாக்கிச் சூடு ஆறு நாட்கள் கடந்த நிலையில் நியூசிலாந்தில் செமி தானியக்க மற்றும் ரைபில் ரக துப்பாக்கிகளை தடை செய்வதாக அறிவிக்கிறோம்.
மார்ச் 15 ஆம் தேதி நமது வரலாற்றையே மாற்றி அமைத்திருக்கிறது. இனி நமது துப்பாக்கி சட்டங்கள் நாட்டை பாதுகாக்கும் என்பதை நியூஸிலாந்து மக்கள் சார்பாக அறிவிக்கிறேன்” என்றார்.
புதிய துப்பாக்கி சட்டங்கள் ஏப்ரல் 11 முதல் அமுல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-Vidivelli