ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடனான லிபிய அரசாங்கத்தின் பாதுகாப்பு நிதியுதவியாக ஐந்து இலட்சம் டொலர்களை வழங்குவதாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா உறுதியளித்துள்ளது.
லிபியத் தலைநகர் திரிப்போலியில் லிபியப் பிரதமர் பயேஸ் அல்-சர்ராஜினை திரிப்போலிக்கான அமெரிக்கத் தூதுவர் பீட்டர் பொடெல் மற்றும் அப்பிரிக்கொம் இராணுவத் தளபதி ஜெனரல் தோமஸ் வொல்ஹெளஸர் ஆகியோர் சந்தித்தனர்.
லிபிய மக்களுக்கு சேவையாற்றக் கூடிய ஒருமித்த, பாதுகாப்பான மற்றும் செழிப்பான தேசம் என்ற வகையில் லிபியாவுக்கான வொஷிங்டனின் அதரவு தொடர்பில் அமெரிக்க அதிகாரிகள் உறுதியளித்ததாக லிபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிப்போலி பாதுகாப்புப் பணியகத்தின் ஆளுமையினைப் பலப்படுத்துவதற்கு உள்துறை அமைச்சு எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஆதரவாக இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது.
தேசிய உடன்படிக்கை முன்னுரிமை அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் தற்போது வழங்கப்பட்டுவரும் 30 மில்லியன் டொலர் நிதியுதவிக்கு மேலதிகமாகவே இந்த உதவி வழங்கப்படுவதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேட்டோவின் பின்னணியில் இடம்பெற்ற எழுச்சியினை அடுத்து நான்கு தசாப்தங்களாக ஆட்சியிலிருந்த முஅம்மர் கடாபி கொல்லப்பட்டதன் பின்னர் 2011 ஆம் ஆண்டிலிருந்து லிபியாவில் வன்முறைகள் இடம்பெற்று வருகின்றன.