காஸா பள்ளத்தாக்கில் பதாஹ் இயக்கத்தின் பேச்சாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை எதிர்நிலை அமைப்பான ஹமாஸ் கண்டித்துள்ளது.
கடந்த திங்கட்கிழமை காஸாவில் இனந்தெரியாத நபர்களினால் அதீப் அபூ சயிப் என்ற பேச்சாளர் தாக்கப்பட்டதையடுத்து. தனது உறுப்பினரை கொல்வதற்கு எடுக்கப்பட்ட முயற்சியாகவும் இதற்கு ஹமாஸ் அமைப்பே காரணம் என பதாஹ் குற்றம் சுமத்தியிருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஹமாஸ் பேச்சாளர் கஹாலில் அல்-ஹைய்யா வெளியிட்ட அறிக்கையில் இத் தாக்குதலைக் கண்டித்துள்ளதோடு, தாக்குதலில் ஈடுபட்டோரை கண்டறிந்து அவர்களைத் தண்டிக்க உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.
திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலுக்கு ஹமாஸ் மீது குற்றம் சுமத்தும் அறிக்கைகளை அவர் நிராகரித்தார்.
2007 ஆம் ஆண்டு தொடக்கம் பலஸ்தீன பிரதேசத்தை ஆட்சி செய்துவரும் ஹமாஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவரும் நிலையில் கடந்த வாரம் தொடக்கம் காஸா பள்ளத்தாக்கில் பதற்றநிலை அதிகரித்து வருகின்றது.
முற்றுகைக்கு உள்ளாகியிருக்கும் பிரதேசத்தில் குழப்ப நிலையினைத் தேற்றுவிப்பதற்காக ஜனாதிபதி மஹ்மூட் அப்பாஸ் தலைமையிலான பத்தாஹ் அமைப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு பின்னணியிலிருந்து செயற்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகின்றது.
ஹமாஸ் மற்றும் பத்தாஹ் அமைப்பினரிடையே இடம்பெற்ற தெருச் சண்டையினைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு காஸாவின் கட்டுப்பாட்டை ஹமாஸ் கையகப்படுத்தியதிலிருந்து இரு அமைப்புக்களும் எதிரும் புதிருமாக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli