புத்தளம் குப்பை விவகாரம்: ஐ.நா. சுற்றாடல் அறிக்கையாளரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டுள்ளது
ஜெனிவாவில் முயீஸ் வஹாப்தீன் தெரிவிப்பு
புத்தளத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தினால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்துகள் தொடர்பில் தாம் ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் தொடர்பான விசேட அறிக்கையாளரிடம் முறைப்பாடுகளை கையளித்துள்ளதாகவும் தொடர்ந்தும் இந்த விவகாரம் தொடர்பான தகவல்களை ஐ.நா.வுடன் பரிமாறி வருவதாகவும் இலங்கை சமூகத்திற்கான ஐரோப்பிய நிலையத்தின் பொதுச் செயலாளர் முயீஸ் வஹாப்தீன் தெரிவித்தார்.
ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றுள்ள அவர், இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில்,
புத்தளத்தில் தற்போது குப்பை பிரச்சினை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. புத்தளத்தில் முஸ்லிம் மக்கள் மட்டும் வாழவில்லை. மாறாக தமிழ், சிங்கள மக்களும் வாழ்கின்றார்கள். இந்நிலையில் கொழும்பு குப்பைகளை அங்கு கொண்டுசென்று கொட்டுவது அந்த மக்களை ஒடுக்கும் செயற்பாடாகவே தெரிகின்றது. அந்தப் பிரதேச மக்கள் பாரியளவில் இதனை எதிர்த்தும் அரசாங்கம் இதனை வலுக்கட்டாயமாக செய்கின்றது என்றால் அது பாரிய கேள்விக்குறியாக அமைகின்றது. இது தொடர்பிலும் நாங்கள் செயற்படவிருக்கின்றோம். ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றாடல் சம்பந்தமான விசேட அறிக்கையாளரிடம் இது தொடர்பாக அறிக்கைகளையும் தகவல்களையும் பரிமாறிவருகின்றோம் என்றார்.
-Vidvielli