பாதுகாப்பு தொடர்பான விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்ததைத் தொடர்ந்து இந்திய நிருவாகத்திற்குட்பட்ட காஷ்மீர் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இந்தியப் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ளன.
பொலிஸார் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் பயங்கரவாத வழக்கு தொடர்பான விசாரணைக்காக 29 வயதான இரசாயனவியல் ஆசிரியரான றிஸ்வான் ஆசாத் பண்டிட் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் காவலில் இருந்தபோது அந்நபர் உயிரிழந்துள்ளார். இறப்புக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தெற்கு புல்வாமா மாவட்டத்தில் மக்கள் ஒன்றுகூடிய அதேவேளை, இது அப்பட்டமான படுகொலை என பண்டிட்டின் குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். பாதுகாப்புப் படையினர் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். அதேவேளை அப் பிராந்தியத்தில் இணையத்தளச் சேவைகளை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு அவன்டிபோரா கிராமத்திலுள்ள எமது வீட்டில் வைத்து பண்டிட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் என பண்டிட்டின் சகோதரரான முபாஷிர் ஆசாத் தெரிவித்தார். அவர் விரைவில் விடுவிக்கப்படுவார் எனக் கூறிச் சென்றனர். எனது சகோதரன் எந்தக் குற்றச் செயலிலும் ஈடுபடாதவர். இது அப்பட்டமான படுகொலையாகும் எனவும் அவர் தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாதம் புல்வாமா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 42 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டதிலிருந்து இந்தியா வும் பாகிஸ்தானும் உரிமைகோரும் காஷ்மீரில் பதற்றநிலை தீவிரமடைந்துள்ளது.
-Vidvielli